‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் காணொலிமூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு!

9 Min Read

* என்றைக்கும் மருத்துவமனைகள், மருந்துகள் தேவை! புதுப் புது நோய்க்காக மருந்துகள் கண்டுபிடிக்க வேண்டிய அளவில் இருக்கும்போது, அதைச் செய்ய வேண்டிய கடமை உண்டு!
* அதைச் செய்வோம் நாம், கொஞ்சம் கூட அதில் பின்வாங்கக் கூடாது; அதைரியப்படக்கூடாது – பெரியார் ஒருபோதும் பின்வாங்கவில்லை!
நம்பிக்கையோடு தொடர்ந்து பாடுபடுவோம், வெற்றி பெறுவோம்!

சிங்கப்பூர், ஜூலை 30 உலகம் முழுவதும் மீண்டும் ஜாதி வெறிச் சக்திகள் வெளியே வருகின்றது!  என்றைக்கும் மருத்துவமனைகள் தேவை. என்றைக்கும் மருந்துகள் தேவை. அதுவும் காலாவதியான மருந்துகளைத் தூக்கி எறிந்துவிட்டு, புதுப் புது மருந்துகளை, புதுப் புது நோய்க்காக கண்டுபிடிக்க வேண்டிய அளவில் இருக்கும்போது, அதைச் செய்ய வேண்டிய கடமை உண்டு. அதை செய்வோம் நாம்; கொஞ்சம் கூட அதில் பின்வாங்கக் கூடாது. அதைரியப்படக்கூடாது. பெரியார் ஒருபோதும் பின்வாங்கவில்லை; எப்போதுமே விதைக்கிற விதை, உடனே முளை கிளம்பிவிடும் என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு எத்தனையோ இடையூறுகள் வரும். அதைத் தாண்டி நம்பிக்கையோடு தொடர்ந்து பாடுபடுவோம், வெற்றி பெறுவோம்! என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின்
359 ஆவது நிகழ்வு!

கடந்த 18.7.2026 அன்று சிங்கப்பூரில்  ‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவினரின் 359 ஆவது நிகழ்வாக ‘‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’’ புத்தகத்தின் ஆய்வு ரையினை ஜெர்மனியிலிருந்து காணொலிமூலம், முனைவர் சுபாஷினி அவர்கள் நிகழ்த்தினார். அந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும்  சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் பங்கேற்றார் . ஆய்வுரையின் முடிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

உலகம் முழுவதும் மீண்டும் ஜாதி வெறிச் சக்திகள் வெளியே வருகின்றன!

தமிழர் தலைவர்: ஏற்கெனவே  நாம் விவாதம் செய்த போது பலமுறை  தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறோம். மீண்டும் மீண்டும் இந்த ஆபத்துகள் வரும். நீங்கள் சொல்கிற மாதிரி, அமெரிக்காவிலும், கனடாவிலேயும், உலகம் முழுவதும் மீண்டும் ஜாதி வெறிச் சக்திகள் வெளியே வருகின்றன. முன்பு வெளிப்படையாக வந்தார்கள், ஜாதி சங்கம் என்று இப்போது வருகின்றார்கள். வெளிப்படையாக வராமல், வேறு ரூபத்திலே மீண்டும் மீண்டும் வருகிறார்கள். கோவிட் தொற்று – 2019 ஆம் ஆண்டில்  கரோனா என்று ஒரு வடிவெடுத்தது. அதற்குப் பிறகு வேறு வேறு ரூபத்தில் வந்தது.

திராவிடர் கழகம்

அதே மாதிரி, இன்றைக்கு அதற்குத் தகுந்த மாதிரி, படிப்புத் துறையில், கம்ப்யூட்டர் படிப்பினைப் படித்திருந்தாலும் கூட, அதற்கப்புறம் நிறைய அள வுக்குக் கை நிறைய ஊதியம் வாங்கி, அதிகாரிகள் ஆனாலும்கூட, அவர்கள் என்ன ஜாதி? என்று பார்த்துவிட்டு, அவர்கள் இட ஒதுக்கீட்டின்மூலம் வந்தார்களா? என்றும் பார்த்துவிட்டு, அவர்களை எல்லாம்  கொச்சைப்படுத்தி, தாழ்மைப்படுத்தக்கூடிய அளவுக்கெல்லாம் முயற்சிகள் புதுப்புது வடிவங்கள் எடுக்கின்றன. எந்த ஒரு வடிவங்கள் எடுத்தாலும், ஆனால் அடையாளம் கண்டு செய்யக்கூடிய தோழர்கள் உறுதிமிக்கவராக இருப்பார்கள்.

காலங்காலமாக மூளையில் போடப்பட்டிருக்கின்ற விலங்கு!

நமது எண்ணிக்கைக் குறைவாக இருக்கிறது என்பதைப் பற்றி, எந்த நாட்டவரும் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. ராணுவம், நாட்டு மக்கள் தொகை அளவுக்குக் கிடையாது. ஊரிலே இருக்கக்கூடிய காவல் படை, அந்த அளவுக்குக் கிடையாது. அது போல நோயிலிருந்து காப்பாற்றப்படக்கூடிய மருத்துவர்களுடைய எண்ணிக்கை, அதே அளவுக்கு, மக்கள் அளவுக்கு, நோய் அளவுக்குக் கிடையாது. அவர்கள்தான் அதிகமாகத் தேவைப்படுகிறார்கள். அதுபோல, பெரியாருடைய சிந்தனைகள் அடிப்படை யில், அதேபோல நாம் வளர்ச்சி அடைந்த பின்பும்கூட ஜாதி ஒழிப்பைப் பயில வேண்டும். ஜாதி ஒழிப்பு என்பது புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அழகாகச்  சொன்னதைப் போல, அது ஒரு கட்டடம் அல்ல; உடனே இடித்துவிடுவதற்கு. அது காலங்காலமாக மூளையில் போடப்பட்டிருக்கின்ற விலங்கு. அந்த மூளை விலங்கை உடைக்க வேண்டும் என்று சொன்னால், அது எளிதல்ல. ஒரு பக்கம் பிரச்சாரம், இன்னொரு பக்கம் போராட்டம் இவற்றையெல்லாம் தொடர்ந்து நடத்த வேண்டும்.

ஜாதிக் கிருமிகள் பல இடங்களில்
பல ரூபத்திலே மிகப்பெரிய அளவுக்கு நவீனத்துவம் பெறுகிறது!

அந்த வகையிலேதான், முன்பை விட இன்னொரு ஆபத்து என்னவென்றால், அறிவியல் கருவிகளால் முன்பெல்லாம்  அந்தந்தப் பகுதிகளிலே இருக்கிற ஜாதி மாறுபாடுகள், அந்தந்த மூடநம்பிக்கை, ஜாதி வெறித்தனம் அந்தப் பகுதியோடு முடிந்தது. இப்போது ஓரிடத்தில் நடக்கிற செய்தி, உலகம் முழுவதும் போகிற போது, இன்னொரு இடத்திலும் அந்தத் தொற்று நோய், எப்படி ஓரிடத்திலே பறவைக் காய்ச்சல் ஏற்பட்டால், இன்னொரு நாட்டுக்கு, அது வெளிநாட்டுக்குப் பரவு கிறதோ – ஒரு குறிப்பிட்ட இடத்திலே உருவானது – உலகம் முழுவதும் மற்ற இடங்களில் எல்லாம் எப்படி பாதிப்பு ஏற்படுத்துகிறதோ, அதுபோல இந்த ஜாதிக் கிருமிகள் என்பன, பல இடங்களில் பல ரூபத்திலே மிகப்பெரிய அளவுக்கு நவீனத்துவம் பெறுகிறது.

எனவேதான், ஆயிரம் கண்களுடன் அதைப் பார்க்க வேண்டிய அவசியமும், ஆயிரக்கணக்கான கைகளோடு ஜாதி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்த வேண்டியதும் அவசியமாகும்.

பெரியார் என்ற நுண்ணாடி அவசியமானது!

ஆகவே, அதற்காக இன்னமும் பெரியார் தேவையா? என்று கேட்டார்கள் என்பதை சுபாஷினி அவர்கள் சொன்னார்கள். இப்போதுதான் பெரியார் எப்போதையும்விட அதிகமாகத் தேவைப்படுகிறார். முன்பு இருந்தவர்கள் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகள். சுலபமாக அடையாளம் கண்டு, எதிர்க்க முடிந்தது. அந்த ஜாதி வெறியர்கள், ஜாதியை ஆதரிப்பவர்கள். இப்போது கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வதற்கு நுண்ணாடி அவசியமோ, அதுபோல பெரியார் என்ற நுண்ணாடியும் அவசியமானது. பெரியாருடைய கொள்கைகள், ஜாதி ஒழிப்புக் கொள்கைகளில், பதவி நாடாமல், வாக்குவங்கி அரசியலைப் பற்றிக் கவலைப்படாமல் முழுக்க முழுக்க களத்தில் இறங்கி, மக்களைச் சீர்திருத்த வேண்டும்; அந்தப் பணியை நாம் முன்னெடுத்துச் செய்ய வேண்டும். ஆகவே, தைரியமாகச் செய்ய வேண்டும். இது உடன டியாக உடனே பலன் தரக்கூடியது அல்ல. ஆனாலும், அது தொடர்ந்து பலன் தரும். ஆகவே, அதை நன்றாக நினைவில் வைத்துக்கொண்டு, தோழர்கள் சொன்ன மாதிரி, ஜாதி வெறி எந்த ரூபத்தில் இருந்தாலும், நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமே கிடையாது.

பெரியார் உலக மயமாகிறார்
பெரியார் இன்றைய தேவை என்பதற்கு அடையாளம்!

பெரியார் ஒரு தனி மனிதராகதான் புறப்பட்டார். ஆனால், அவர்கள் மறைகிற நேரத்தில் உடலால், அவர்கள் ஒரு பெரிய இயக்கத்தையும், தத்து வத்தையும் தந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். தொண்டர்கள், தோழர்கள் உலகளாவிய அளவிற்கு வந்திருக்கிறார்கள். இன்றைக்கு இந்தக் காணொ லியில் நாம் பேசும்போது, எத்தனை நாடுகளிலே இருந்து, மலேசிய நண்பராக இருந்தாலும், ஜெர்மனியிலே இருந்து வந்து பேசுகிறவராக இருந்தாலும், அதேபோல மற்ற மற்ற நாடுகளிலே இருந்தாலும், எல்லோருக்கும் இந்த கருத்தே ஒரு மய்யக் கருத்தாக இருக்கிறது என்று சொன்னால், அதுவே பெரியார் உலக மயமாகிறார் –  பெரியார் இன்றைய தேவை என்பதற்கு அடையாளம்.

பெரியார் ஒருபோதும்
பின்வாங்கவில்லை!

ஆகவேதான், என்றைக்கும் மருத்துவமனைகள் தேவை. என்றைக்கும் மருந்துகள் தேவை. அதுவும் காலாவதியான மருந்துகளைத் தூக்கி எறிந்துவிட்டு, புதுப் புது மருந்துகளை, புதுப் புது நோய்க்காக கண்டுபிடிக்க வேண்டிய அளவில் இருக்கும்போது, அதைச் செய்ய வேண்டிய கடமை உண்டு. அதை செய்வோம் நாம் கொஞ்சம் கூட அதில் பின்வாங்கக் கூடாது. அதைரியப்படக்கூடாது. பெரியார் ஒருபோதும் பின்வாங்கவில்லை; எப்போதுமே விதைக்கிற விதை, உடனே முளை கிளம்பிவிடும் என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு எத்தனையோ இடையூறுகள் வரும். அதைத் தாண்டி நம்பிக்கையோடு தொடர்ந்து பாடுபடுவோம், வெற்றி பெறுவோம்!

நன்றி,  வணக்கம்!

முனைவர் சுபாஷினி: தியாகராஜன் அவர்களுக்கு ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்லிவிடுகிறேன்.

பெரியார் அவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்தாலே, அதைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு அதாவது அவர் சொல்லிய கருத்துகள் என்பது ஒன்று. அவருடைய வாழ்க்கையைப் பார்த்தும் கற்றுக் கொள்வதற்கும் இருக்கிறது. அவர் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தார் என்பதை நீங்கள் உணர்ந்து பாருங்கள்.

‘‘சுற்றுலா அல்ல  கற்றுலா!’’

தமிழ்நாடு முழுவதும், இந்தியா முழுவதும், பிறகு அயல்நாடுகளுக்குச் சென்று அப்படியே தனக்குத் தெரிந்ததை மட்டும் சொல்லிவிட்டு வந்தார் என்பது இல்லை. அதை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். அயல் நாடுகளில், மக்கள் எப்படி வாழ்கின்றார்கள்? என்பதைப் பார்த்து, தன்னுடைய வாழ்க்கையை  எப்படி எல்லாம் மாற்றுகின்றார்கள் என்று, அந்த மாற்றத்தைத் தானே எடுத்துக்கொண்டு, பிறருக்குச் சொல்கின்ற ஒரு கற்றல். ‘‘சுற்றுலா அல்ல  கற்றுலா’’ என்று ஆசிரியர் அய்யா சொன்னார் அல்லவா, அதுபோன்று  இருந்தவர்.  நாம் இருக்கின்ற அந்த வட்டத்துக்குள்ளே இருந்து வெளியே வந்தால்தான், உலக நாட்டில் மக்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்பது தெரியும். ஆகவே, அதைப் பார்க்க வேண்டும். பெரியாருடைய சில கருத்துகள் எனக்குத் திரும்பவும் நினைவிற்கு வந்தது, நீங்கள் சொன்ன போது. அதாவது, ‘‘வெள்ளையன் வரவில்லை என்றால்,  இந்தியாவினுடைய நிலை மிகவும் மோசமாக இருந்திருக்கும்’’ என்பதை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

தமிழ்நாட்டில் வாழ்கின்ற சூழலில், எல்லோருமே, நமக்கு நமக்கு, தனித்து தனித்துதான் வாழ்கின்ற ஒரு சிந்தனையோடு இருக்கிறோம். ஆனால், இப்போது நான், மலேயா நாட்டில் வந்து பார்க்கிறேன், அந்த சமூகத்துக்காகவே எல்லோரும் செய்கிறார்கள். சீனர்கள் அந்த சமூகத்துக்கென்றே நிறைய பணி களைச் செய்கிறார்கள். நல்ல எண்ணத்தோடு அவர்கள்,  பிறரைப் பாதுகாக்கவேண்டும், பிறரை வளர்க்கவேண்டும் என்று செய்கிறார்கள். ஜாதிகள் இல்லாத சமூகங்கள் எப்படி வளர்ந்திருக்கிறது என்று பாருங்கள். அதைப் பார்க்கும்பொழுது, என்னைப் போன்றவர்கள்,  வெளிநாட்டிலே இருந்து வந்து பார்க்கும் பொழுது, நம்முடைய ஒரே இனம் இப்படி சுக்குநூறாகப் பிரிந்திருக்கிறதே என்று  எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி யாகும்.

ஜாதி என்பது நமக்குத்
தேவையில்லாத ஒன்று!

ஆனால், தமிழ்நாட்டிலேயே வாழும் பொழுது, அந்த ஜாதிக்குள்ளேயே வாழும்போது,  ஜாதி என்பது நமக்கெல்லாம் தேவையா? என்கிற கேள்வியை நீங்கள் எல்லாம் கேட்கிறீர்கள் இல்லையா?  இதுதான் அந்த வித்தியாசம். ஜாதி தேவை இல்லையா?  என்றால், வெளிநாடுகளுக்கெல்லாம் நிறைய பயணம் செய்யுங்கள். அதற்கு நிறைய பணம் தேவைப்படுமே என்று  நினைக்க வேண்டாம். மற்ற மற்ற பக்கத்தில் இருக்கின்ற லாவோஸ், இந்தோனேசியா,  வியட்நாம் இந்த மாதிரி நாடுகளுக்கு நாம் பயணம் செய்யும்போது, உலக மக்கள் எப்படி வாழ்கின்றார்கள்? ஜாதி என்பது நமக்குத் தேவையில்லாத ஒன்று. அது இந்த மதத்தோடு வந்த ஒன்று. தேவையில்லாத ஒரு பேக்கேஜ் அது என்பது தெரியும். அதைத்தான் பெரியார் அவர்கள் நிறைய வெளிநாடுகளுக்குப் போய் பார்த்து பார்த்து மக்களிடம் வந்து சொன்னார். இந்தக் காலத்திலே நாம் நிறைய செய்ய வேண்டியது இருக்கிறது. அதனால்தான் நான் என்னுடைய, ஸ்லைடில் கடைசியில், ‘பயணிப்போம்’ என்று போட்டிருந்தேன். அந்த ஒரு எண்ணத்தை மட்டும் மனதில் வைத்து, பயணத்தின் மூலமாக   உலக மக்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம். ஜாதி என்பது தேவையில்லாத ஒன்றுதான்.

அனைவருக்கும் குழுவின் சார்பாக
நெஞ்சார்ந்த நன்றிகள்!

உமா: மிக்க நன்றி சுபா!

மிக்க நன்றி அய்யா!

ஆரம்பம் முதல் இறுதி வரை எங்களோடு பங்கேற்று, எங்கள் குழுவிற்கு ஒரு புது உற்சாகத்தையும், நல்ல ஓர் அறிவுப் பரிமாற்றத்தையும் தந்தமைக்காக உங்க ளுக்கு மீண்டும் எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்படி ஓர் அரிய வாய்ப்பைக் கொடுத்த முனைவர் சுபாஷினி அவர்களுக்கும் குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் அன்பர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் குழுவின் சார்பாக நமது நெஞ்சார்ந்த நன்றிகள்!

நன்றி, வணக்கம்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *