பிரயாக்ராஜ், ஜூலை 28 ‘நீட்’ தேர்வு கசிவை எதிர்த்து நடந்த மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்ட பல மாணவர்களை உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்புப் படையினர் எண்கள் இல்லாத வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு கடும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு மாணவர் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று வாக்குறுதி அளித்திருந்த நிலையில், யாருடைய உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை நடக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் அகிலேஷ் யாதவ்.
தனது சமூக ஊடகப் பதிவில், “பிரயாக்ராஜ் போராட்டம் என்ற பெயரில் பல மாணவர்களை உத்தரப் பிரதேச காவல்துறையின் சிறப்புப் படை எண்கள் இல்லாத வாகனங்களில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளது. ஒன்றிய அரசு வாக்குறுதி அளித்திருந்த நிலையில், உத்தரப் பிரதேச காவல் துறை பிரதமரின் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் போலி வாக்குறுதி (ஜும்லா) என நிரூபிக்க முயல்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பிடித்துச் செல்லப்பட்ட அனைத்து மாணவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட அனைத்துக் காவல் துறையினரும், உயர் அதிகாரிகளும் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த மாணவர்களின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை நீதிமன்றம் உடனடியாகத் தானாக முன்வந்து கவனத்தில் கொள்ள வேண்டும் என அகிலேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
