லக்னோ, ஜூலை 28– உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர்கிரியை சேர்ந்த தித்திக், (வயது 21) என்ற மாணவர் கடந்த மே மாதம் 3ஆவது நீட் தேர்வை எழுதியிருந்தார். இது அவரது 3ஆவது முயற்சி ஆகும். ஆனால் முறைக்கேடு காரணமாக, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. தித்திக்கை பெருமன உளைச்சலில் ஆழ்த்தியது. அயராது உழைத்து 3ஆவது முறையாக தேர்வு எழுதியும், பலன் இல்லை என்பதை அவரால் ஏற்க முடியவில்லை. எனவே தேர்வு ரத்து செய்யப்பட்ட 2ஆவது நாளில் தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். அவரது இழப்பில் இருந்து இதுவரை அந்த குடும்பம் மீளவில்லை.
இந்தநிலையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் காரணமாக ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகினார். இதுபற்றி தித்திக்கின் தந்தை அனுப் மிஸ்ரா கூறும்போது, ‘இளம் தலைமுறையினர் தளராத உறுதியுடன் வருங்கால தலைமுறைக்காக கல்வித் துறையை மறுசீரமைக்குமாறு அரசைக் கட்டாயப்படுத்தினர்.
அமைதியான முறையில் போராடிய அவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதல்களைப் பார்த்தபோது நெஞ்சம் நொறுங்கியது. அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னரே பதவி விலகியிருந்தால், இந்தக் கொடூரங்களைத் தவிர்த்திருக்கலாம். இந்த நிகழ்வுகளைக் காண என் மகன் இப்போது உயிருடன் இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்தப் போராட்டம் நாடு முழுவதும் உள்ள மற்ற இளைஞர்களுக்கு பயனளிக்கும்’ என கண்ணீருடன் கூறினார்.
நீட் முறைகேட்டால் உயிர் நீத்த மாணவர்களின் குடும்பத்துக்கு வழங்கும் இழப்பீடு குறித்து அவர், ‘எந்த இழப்பீடும் என் மகனின் மரணம் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்பாது’ என்று விரக்தியுடன் கூறினார்.
