“இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்” கருநாடக மேனாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

2 Min Read

பெங்களூரு, ஜூலை 27- “தேர்தலில் போட்டியிட்டால் மக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ள சூழல் இன்று உருவாகியுள்ளது. அரசியல் களம் சீர்கெட்டுவிட்டதால், 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை” என கருநாடக மேனாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

மாண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட் பகுதியில் 25.7.2026 அன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சித்தராமையா, ‘இன்றைய அரசியல் களம் சீர்கெட்டுவிட்டதால், 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. இருப்பினும், அரசியலில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு, மக்களின் துயரங்கள் மற்றும் மகிழ்ச்சிக்கான குரலாகத் தொடர்ந்து ஒலிப்பேன்.

வருணா தொகுதி மக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு என்னைக் கேட்டு வருகின்றனர். ஆனால், இனிவரும் காலங்களில் எந்தத் தேர்தலிலும் போட்டியிடக்கூடாது என்று நான் முடிவு செய்துள்ளேன். கடந்த காலங்களில் நான் தேர்தலில் போட்டியிட்டபோது, தொகுதி மக்களே எங்களுக்குத் தேவை யான நிதியை வழங்கி எங்கள் வெற்றியை உறுதி செய்தனர். ஆனால் இன்று அத் தகைய சூழல் இல்லை.

எனக்கு இப்போது 79 வயதாகிறது. எங்கள் அரசாங்கத்தின் பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. அதற்குள் எனக்கு 81 அல்லது 82 வயதாகிவிடும். எனது உடல்நிலை முன்பு இருந்ததைப் போல வலுவாக இல்லை. முன்பிருந்த அதே உற்சாகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவது இனி சாத்தியமில்லை.

2028-ஆம் ஆண்டு வாக்கில் எனக்கு 82 வயதாகியிருக்கும். அது எனது அரசியல் வாழ்க்கையின் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ஆண்டாக அமையும். 1978-இல் தாலுகா வாரிய உறுப்பினராக எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். தோல்விகளையும் வெற்றிகளையும் நான் கண்டுள்ளேன். ஆனால், நான் நம்பிய கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படா மலும், எனது மனசாட்சிக்குத் துரோகம் இழைக்கா மலும் இருந்ததில் நான் மனநிறைவு கொள்கிறேன்.

தேர்தலில் போட்டியிட்டால் மக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ள சூழல் இன்று உருவாகியுள்ளது. இன்று அரசியல் முற்றிலும் சீர்கெட்டுவிட்டது. நேர்மையான அரசியலுக்கு இட மில்லாத நிலை காணப்படுகிறது. இத்தகைய பின்னணியில், இனிவரும் தேர்தல்களில் போட்டியிட வேண் டாம் என்ற முடிவை நான் எடுத் துள்ளேன்.

50 ஆண்டுகளாக, மாநில மக்கள் என்னை அவர்களில் ஒருவராகக் கருதி அன்புடன் வழி நடத்தி வந்துள்ளனர். அந்த நன்றிக்கடன் என் மீது உள்ளது. எனவே, எனது எதிர்கால வாழ்க்கையும் பொதுச் சேவைக்கே அர்ப்பணிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *