புதுடில்லி, ஜூலை 22– 18 வயதிற்கு உட்பட்டோருக்கான சிறார் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டால், சிறாருக்கான நீதி சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.
18 வயதிற்கு உட்பட்டோருக்கான சிறார் சில சமயங்களில் பெரிய அளவிலான குற்றத்தில் ஈடுபடும் சம்பவம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறார் நீதிச் சட்டம்
இவ்வாறு கைது செய்யப்படும் சிறார் களுக்கு, சிறார் நீதிச் சட்டத்தின் தண்டனை வழங்கப்படும். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் அய்பிசி (IPC) பிரிவு 302இன் கீழ் வரும் கொலைக் குற்றத்தை, சிறுவர் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015இன் கீழ் கொடுமையான குற்றம் என வகைப்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிறுவர்களைப் பெரியவர்களைப் போல விசாரிப்பதற்கான சட்டக் கட்ட மைப்பைத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 302இன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இதில் ஆயுள் தண்டனையே குறைந்தபட்ச தண்டனையாக உள்ளது. எனவே, இது கடுமையான குற்றம் என வகைப்படுத்தப்படும் என்று நீதிபதி பார்திவாலா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரிவு 302-இன் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றங்கள் ஆயுள் தண்டனைக்குக் குறைவான தண்டனையை விதிக்க முடியாது என்பதால், கொலைக்கான குறைந்தபட்ச தண்டனை ஆயுள் தண்டனை என்பது அதன் தவிர்க்க முடியாத உட்பொரு ளாகும். சிறார் நீதிச் சட்டத்தின்படி, குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்களே கடுமையான குற்றங்கள் எனக் கருதப்படுகின்றன.
பீகார் மாநிலம் பாட்னா உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான ஒரு வழக்கில் மேல்முறை யீட்டாளரை வயது வந்தவராகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், இந்த வழக்கை ஒரு வழக்கமான நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சிறார் நீதி வாரியத்திற்கு உத்தரவிட்டது.
சிறுவரைத் தாங்களே விசாரிக்க வேண்டும் என்று சிறார் நீதி வாரியம் ஆரம்பத்தில் முடிவு செய்திருந்தது, ஆனால் மேல்முறையீட்டு அமர்வு நீதிமன்றம் அந்த முடிவை ரத்து செய்தது. பின்னர், சிறாரை வயது வந்தவராகக் கருதி விசாரிக்க அனுமதிக்கும் உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இந்த நிலையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளது
