புதுடில்லி, ஜூலை 21 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று (20.7.2026) காலை 11 மணிக்கு தொடங் கியது. மக்களவையில் மக்களவைத் தலைவர் சபா நாயகர் ஓம் பிர்லா, மறைந்த உறுப்பினர்களுக்கான இரங்கல் குறிப்புகளை வாசித்தார். அப்போது எதிர்க்கட்சியினர் பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். இதனால், “இரங்கல் குறிப்பை வாசிக்கும் போது அமைதியாக கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும்” என்று சபா நாயகர் ஓம் பிர்லா, வேண்டு கோள் விடுத்தார்.
ஆனாலும் எதிர்க்கட்சியினரின் தொடர் முழக்கங்கள் ஓயவில்லை. இந்த அமளிக்கு இடையே சபாநாயகர் ஓம்பிர்லா கேள்வி நேரத்தைத் தொடங்கினார்.
அப்போதும் எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் மக்களவைத் தலைவர் இருக்கை அருகே நின்று முழக்கங்கள் எழுப்பினர். இதனால், “நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் மிக உயர்ந்த அவை; அனைவருக்கும் நேரம் ஒதுக்கப்படும்; அனைவரும் அமைதி காக்க வேண்டும்” என்று மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா மீண்டும் வலியுறுத்தினார்.
ஆனாலும் அமளி தொடர்ந்ததால் மக்களவை பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இதேபோல மாநிலங்களவையில் சபை நடவடிக்கைகளை மாநிலங்களவைத் தலைவரும் துணைக் குடியரசுத் தலை வருமான சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங் கினார்.
மாநிலங்களவையில் பேசிய எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நீட் தேர்வுத் தாள் கசிவு விவகாரத்திற்காக நமது இளைஞர்கள் தெருக்களில் போராடி வருகின்றனர், ஆனால் அரசு அவர்களின் குரலை ஒடுக்க முயல்கிறது.. போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்துகிறது” என்று குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி மாநிலங்களவை உறுப்பினர்க்கள் முழக் கங்களை எழுப்ப அங்கும் அமளி உருவானது. இதனால் மாநிலங்கள வையும் பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
’பச்சை துண்டு’ திமுக
திமுக கட்சியின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு வேறு பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்துக்கு பச்சை துண்டு அணிந்து வந்தனர். மேகதாது அணை பிரச்சினையில் தனி நடுவர் மன்றம் அமைக்க கோரி மக்களவையில் திமுகவின் டிஆர் பாலு, மாநிலங்களவையில் திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மான அறிவிக்கை கொடுத்திருந்தனர். இந்த தீர்மானத்தை ஏற்று விவாதம் நடத்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழக்கம் எழுப்பினர். மேலும் மேகதாது அணை கட்ட முயற்சிக்கு கருநாடகாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பச்சை துண்டுடன் இன்று திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்தனர்.
