புதுடில்லி, ஜூலை 20 இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பதிவு செய்து வாதிடுவதற்கான, அகில இந்திய வழக்குரைஞர் தேர்வு முடிவுகளை இந்திய பார் கவுன்சில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் நாடு முழுவதும் 65.92 விழுக்காடு (சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு குறித்த விவரங்கள்
நாடு முழுவதும் 60 நகரங்களில் உள்ள 292 மய்யங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வை எழுத மொத்தம் 1,75,701 பேர் பங்கேற்றனர்.
தேர்வு எழுதியவர்களின் பாலின வாரியான விவரங்களை இந்திய பார் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
ஆண்கள் 1,10,909, பெண்கள் 64,784, திருநங்கைகள் 8 இந்திய நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணிபுரிய தகுதிபெறும் இந்த முக்கியத் தேர்வில், வெற்றி பெறும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது கவலை தருவதாக உள்ளது.
குலசேகரன்பட்டினம்
ஏவுதளப் பணிகளின் நிலைபற்றி
இஸ்ரோ தலைவர் விளக்கம்
இஸ்ரோ தலைவர் விளக்கம்
சிறீஹரிகோட்டா ஜூலை 20- குலசேகரன்பட்டினம் ஏவுதளப்பணிகள் அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
அவர் பேசியதாவது:-
விண்வெளி சீர்திருத்தம் அறிவிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட முதல் ராக்கெட், அதன் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைக் கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.
ராக்கெட் ஏவுதல் என்பது மிகவும் சவாலான விசயம். அதை முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றிருப்பதற்கு ஸ்கைரூட் நிறுவனத்துக்கு வாழ்த்துகள். இது ஒரு தொடக்கம் மட்டுமே, இந்த ஆண்டு ஆறு முதல் 7 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
2 ராக்கெட்டுகளின் தயாரிப்புப் பணிகள் முடிந்து சோதனை அடிப்படையில் இருக்கின்றன. 5 ராக்கெட்டுகள் முடியும் தருவாயில் இருக்கிறது. குலசேகரன்பட்டினம் ஏவுதளம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு முடிவடைவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அடுத்த ஆண்டு (2027) மார்ச் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரோ அமைப்பில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணி முடிவதற்கு முன்பாகவே ஓய்வு பெற்று வெளியேறுவதால் இஸ்ரோவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது’ என்றார்.
