ஆசிரியர் விடையளிக்கிறார்

4 Min Read

கேள்வி 1: தற்கால த.வெ.க. அரசின் நிலைப்பாட்டை எதிர்கொள்ள முடியாமல்…. அதிகாரிகள் பதவி விலகுவதும், பதவி விலகத் தூண்டப்படுவதும் நியாயமா? அதிகாரம் பெரிதா? 5 ஆண்டு அரிதாரம் பெரிதா? சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகம் வேண்டும்?

– சுரேஷ் சுந்தரபாண்டியன்

பதில் 1: வாக்களித்த மக்களுக்குத்தான் சமூகப் பொறுப்பு அதிகம் வேண்டும் என்பதை இத்தகைய அரசியல் (அலங்)கோலங்கள் காட்டுகின்றன! இல்லையா?

  • • •

கேள்வி 2: கட்சிக் கூட்டத்திற்கு வந்து நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுத் துறைகளில் வேலை வழங்குவது தவறான முன்னுதாரணம் ஆகாதா? இதுகுறித்த வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு ‘வழவழ.. கொழகொழ’ என இருப்பது சரியா?

– மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில் 2: இன்றைய நீதிபரிபாலனமே தலை முதல் கால்வரை ‘வழவழா, கொழ கொழா’வாகத்தானே இருக்கிறது! அதிகம் வெண்டைக்காய், விளக்கெண்ணெய், சேனைக்கிழங்குப் பதார்த்தங்கள் உவமையால் பாதிக்கப்படுகின்றன!

  • • •

கேள்வி 3: ‘நீட்’ தேர்வு வினாத்தாள் வெளியானதில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உண்ணா நிலையால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதை அறிந்தாவது ஒன்றிய அரசு கண்களைத் திறக்குமா?

– க.வெற்றிச்செல்வன், அயன்புரம்

பதில் 3: உ.பி. அகிலேஷ் யாதவ் முதலிய பலரது வேண்டுகோளுக்கிணங்க அவர் உண்ணாநிலையை முடித்துக்கொண்டார். இரக்கமில்லாதவர்கள் கண்கள் எப்போதும் திறக்காது! இறுதியில் மக்கள் திறக்க வைப்பார்கள்.

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

  • • •

கேள்வி 4: சாத்தான்குளம் காவல் நிலைய கொடூரத்தை ஞாபகப்படுத்துவது போன்று நாகர்கோயிலில் மாற்றுத் திறனாளி சபரிவர்மன் காவலர்களின் கொடூரத் தாக்குதலால் உயிரிழந்துள்ளாரே – இவை போன்றவற்றை தவிர்ப்பதற்கு காவல்துறை உயரதிகாரிகள் உரிய வரைமுறைகள் வகுத்தால் என்ன?

– கி.பச்சைமுத்து, கும்மிடிப்பூண்டி

பதில் 4: நியாயமான கேள்வி; ஆட்சிகள் மாறுகின்றன. ஆனால், காட்சிகள் (கொடுமை), நடத்தைகள் மாறவில்லையே என்று கூடி அழுவதுதான் ஒரே தீர்வு போலும்.

  • • •

கேள்வி 5: ஓடும் ரயிலில் ஹோமம் வளர்த்துப் பூஜை நடத்தியுள்ள அலட்சியத்திற்கு – “இலட்சக்கணக்கில் பணம் செலுத்திப் பதிவு செய்த தனிப்பட்ட சொகுசுப் பெட்டியில்தான் இந்தப் பூஜை நடத்தப்பட்டுள்ளது” என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது ஏற்புடைய தாகுமா?

– கி.வெண்மதி, மயிலாடுதுறை

ஆசிரியர் விடையளிக்கிறார், ஞாயிறு மலர்

பதில் 5: பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். ஆட்சியின் ஹிந்துத்துவாவின் கொடும் தீய விளைவு. நீதிபதிகள் தாமே முன்வந்து இதுபோன்ற மக்கள் உயிருடன் விளையாடும் கொடிய பக்திப் போதைகளை – நீதிமன்றச் சாட்டையால் அடித்துத் திருத்த முன்வர வேண்டும்.

  • • •

கேள்வி 6: கல்வி நிலையங்களில் மாணவிகளுக்குப் பாலியல் சீண்டல், அதற்காகப் பணிநீக்கம் – கைது நடவடிக்கை – பல ஆண்டு சிறைத் தண்டனை என நீதிமன்ற தீர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் நாடு முழுவதும் பல புகார்கள் இதுபோன்று வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே?

– மன்னை சித்து, மன்னார்குடி-1

பதில் 6: மக்களை ‘புத்தி கொள்முதல்’ செய்வதற்கு ஊடகங்கள், சினிமா போதைகள் உள்பட பல போதைகளை ஒழிக்க ஒரு பெருந்திரள்தான் ஒரே வழி! என்ன சித்து? அடுத்தவர்களைக் கேள்வி கேட்க விடவே மாட்டீர்களா?

  • • •

கேள்வி 7: “தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவர்கள், படித்தவர்கள், அனைத்தையும் அறிந்தவர்கள்” என்று ஒரு வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் பாராட்டியுள்ளாரே – சரியா?

– இரா.பூங்குழலி, செம்மஞ்சேரி

பதில் 7: நல்ல கேள்வி – மில்லியன் டாலர் கேள்வி. எல்லாம் அறிந்தவர்கள்தான் என்றாலும் சிற்சில நேரங்களில் ‘கோட்டை’ விடுபவர்கள் என்பதைப் பல நடப்புகள் காட்டுகின்றவே!

  • • •

கேள்வி 8: எழுத்தாளர் நலங்கிள்ளியின் சுயசரிதையான ‘ஆர்.எஸ்.எஸ். பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்’ நூலுக்கு வெளிவரும் முன்பாகவே சிலர் எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்?

– கோ.சேரலாதன், மணலி புதுநகர்

பதில் 8: புத்தகம் வெளிவருவதற்கு முன்பே அதற்கு நல்ல விளம்பரம் செய்துள்ளவர்களுக்கு நண்பர் நலங்கிள்ளி சார்பில் நாம் நன்றி சொல்வோமா!

  • • •

கேள்வி 9: உளவியல் பாதிப்புகளை உண்டாக்கும் காட்சிப் பதிவுகள் பொதுவெளியில் தாராளமாகப் பகிரப்படுகின்றனவே – முற்றாகத் தடுக்கப்படுவதற்கு ஒன்றிய – மாநில அரசுகள் உரிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லையே – ஏன்?

– வி.நெடுஞ்செழியன், திருவாரூர்

பதில் 9: விழிப்புணர்வைப் பரப்புரைகள் மூலம் உண்டாக்கிட உரிய அலட்சியக்காரர்களின் மனச்சாட்சியை உலக்கை கொண்டாவது தட்டி எழுப்பத் திரள வேண்டும்!

  • • •

கேள்வி 10: சாலை விபத்துகளைக் குறைக்க தனி செயல் திட்டத்தை உருவாக்க தமிழ்நாடு அரசு முனைந்துள்ளது பற்றி….?

– மா.வெற்றிவேலன், மதுரை

பதில் 10: நல்ல செய்தி, சில மேதைகள் முன்பு சொன்ன ஆலோசனைகளைப் போல் இல்லாமல் அத் திட்டம் இருந்தால் பயனாகும்!

‘உணவுப் பஞ்சம் தீர, உண்ணுமளவைத் தவிருங்கள்’ என்ற (அரிய) யோசனை போல் இல்லாமல் இருந்தால் நல்லது!

  • • •

‘விடுதலை’ ஞாயிறு மலருக்கு
கேள்விகள் வரவேற்கப்படுகின்றன!

அனுப்ப வேண்டிய முகவரி:
‘விடுதலை’, 84/1(50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007.

மின்னஞ்சல்: [email protected]

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *