இந்த அய்ந்து பெரும் போதைகளை ஒழிப்பதைத் திராவிடர் கழகம்  தனது வேலைத் திட்டங்களாகக் கொண்டு செயல்படும்!

மக்களிடம் பரவிக் கிடக்கும் ஜாதி மதப் போதை, மதுப் போதை, சினிமாப் போதை,  கைப்பேசிப் போதை, பதவிப் போதைகளை ஒழிப்பதை வேலைத் திட்டமாகக் கொண்டு, திராவிடர் கழகம் பாடுபடும் – பிரச்சாரம் செய்யும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

போதை ஒழிப்புப் பிரச்சாரமும், தடுப்பு நடவடிக்கை களும் மிகமிக இன்றியமையாத காலத்தின் முக்கியத் தேவைகளாக இருக்கின்றன!

ஆட்சியாளர்களுக்கு அறைகூவலாக இருக்கும் போதைகள்!

சென்ற ஆட்சியானாலும், இன்றைய ஆட்சியானாலும் ஆளுவோருக்குப் பெரும் அறைகூவலாக இருப்பது இந்தப் போதையின் பரவல். அது அங்கிங்கெனாதபடி, வயதில் இளையவர்கள், மாணவர்களையும்கூட அவர்களது எதிர்காலத்தையே பலி பீடத்திற்குக் கொண்டு சென்று, அவர்களை மட்டுமல்லாமல், அவர்களை வளர்க்கும் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள்,  அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, கல்விப் பயிர் வளர்க்க உழைக்கும் ஆசிரியர்கள் தொடங்கி, சட்டம் – ஒழுங்கைப் பராமரித்து, பாதுகாக்கும் கடமையாற்றும் காவல்துறையினருக்கும், நிர்வாக அதிகாரிகளுக்கும்கூட பெரும் கவலை தரும், பொறுப்பு நீங்கா தலையாய கேள்விக் குறியாகின்றது!

போதை, வெறும் சட்டம் – ஒழுங்கு
பிரச்சினை மட்டுமல்ல!

இதனை வெறும் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையாக – ஆட்சியாளர் – காவல்துறை கருதக்கூடாது; அதையும் தாண்டி சமூகம் சார்ந்த ஒரு ‘கொள்ளை நோயாகவே’ கூர்ந்து கவனிக்கவேண்டும். இதனை ஒழிப்பது அவ்வளவு எளிதல்ல என்றாலும், மனிதகுல நல்வாழ்வை மிரட்டிய ‘கரோனா’ போன்ற பல லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்த நோயை ஒழிக்கப் பல மேம்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அம்மை, காலரா, பிளேக், சயரோகம் என்ற காசநோய் என்பவற்றைக் கூட ‘ஒழிக்க முடியாது’ என்று ஒரு காலத்தில் கருதப்பட்டன. மருத்துவ அறிவியலாளரது, ஆற்றல்மிகு ஆளுமைமூலம் அவற்றை ஒழித்து வெற்றி கண்டுள்ளோம்.

அதுபோலவே, புற்றுநோய் என்பதையும் ஒழிப்ப தற்குத் தீவிர ஆய்வுகளும், தீர்வுகளை நோக்கிய விடியல் பயணமும் வெற்றித் திசை நோக்கி வேக நடைபோடுகின்றன!

விஞ்ஞானப் பார்வை தேவை!

போதை ஒழிப்பு என்பதற்குத் தற்போது பலரும் ஒரு குறுகிய கருத்தினையே பற்றிக்கொண்டு, அதற்காகவே மட்டும் பேசியும், எழுதியும், பரப்புரை செய்தும், சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். அவற்றிற்கு ஆக்கமும், ஊக்கமுமாய்த் திகழுகிறார்கள்!

பகுத்தறிவாளர்களாக உள்ள பெரியாரிய கருத்தா ளர்கள் அதனை விரிவான விஞ்ஞானப் பார்வையோடும் பார்த்து, மிகப்பெரிய இணை போதைகளாலும், சமூக, பொருளாதார, தனி மனித ஒழுக்கத்தை – நலத்தை – பொது ஒழுக்க நாசத்திற்கும் காரண காரியமாய் உள்ள மற்ற ஆபத்தான போதைகளையும் இணைத்து, அவற்றினை வேரோடும், வேரடி மண்ணுமாக ஒழித்திட ஓங்கிய பிரச்சாரத்தினை ஓய்வு ஒழிச்சலின்றி – எதிர்ப்புக்கு அஞ்சாமல் செய்து, தேவைப்படும்போது தம்மையே அர்ப்பணித்துக் கொள்ளும் உறுதி படைத்த ‘செயல் படை’ என்று பகுத்தறிவு, தன்மான, சமூகக் காப்பு அணி ஒன்றினை ஆயத்தப்படுத்த வேண்டிய அரிய தருணம் உள்ளது; இன்றேல், நாடு சுடுகாடு ஆகும்; மக்கள் மாக்கள் ஆவார்கள்.

மதுபோதை, கஞ்சா மற்றும் பல போதைகள் பயன்படுத்தியவர்களை மட்டும்தான் பாதிக்கும். அதிகபட்சம் அவர்தம் குடும்பக் கவலை கூடுதல் கவலையாகும்.

மற்ற நான்கு போதைகள் முந்தையவற்றைவிட, மிகப்பெரும் அளவிற்குச் சமூகத்தையே அழித்து விடும். அருவருக்கத்தக்க போதைகளே மிக முக்கியம்!

ஜாதி, மதப் போதைகள்!

ஜாதி போதை – நம் நாட்டையும் தாண்டி, அது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற புலம்பெயர் ‘ஜாதி முகவர்கள்’ முயற்சியில், எப்படி கஞ்சா, அபின் விற்று லாபம் அடைந்து உலக மாஃபியா கும்பல் வலிமையாக உள்ளதோ, அதேபோல, ஜாதி, மதவெறி பரப்பும் கும்பலும் உலக நாடுகளில், நம் நாட்டிலிருந்து அங்குக் குடியேறி, அந்நாட்டு ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றி, ஜாதி வெறியை மிக லாவகமாகப் பரப்பும் நிலை பரவலாகி வருகிறது! ஆணவக் கொலை முதல் அரசியல் கொலை வரை அதன் விளைவு என்பதை எவரே மறுக்க முடியும்?

அதற்கடுத்து மதபோதை. மதங்களால், மனித குலம் பிளவுக்கும், பிரிவிற்கும் ஆளாகி, போர்களை அன்றும், இன்றும் நடத்துவதும், அதனால் அப்பாவி மக்கள், அந்த நாட்டிற்கும், மதத்திற்கும் சம்பந்தமில்லாத ஏழை, எளிய உழைக்கும் மக்களும், வர்க்கமும் கடும் விலை கொடுக்கவேண்டிய பேரபாயமாக போர் அபாயமும் இருக்கிறது.

முந்தைய சிலுவைப் போர் (Crusades) என்ற அய்ரோப்பிய மதப் போர் முதல், இப்போது நடக்கும் ஈரான் – இஸ்ரேல், அமெரிக்கப் போர் உள்பட அதன் மூல காரணம், மதவெறி, மதபோதை என்பதில் தொடங்கித்தானே அதிகாரப் போராக மாறியுள்ளது!

சினிமா, தொலைப்பேசி, கிளப் –
இவை பொழுது போக்கு மட்டுமே!

அதற்கடுத்து, சினிமா, கைப்பேசி (செல்போன்) குறிப்பாக இளைஞர்களிடம் இந்தப் போதை.

சினிமா, தொலைக்காட்சி, கிளப் இவை பொழுது போக்குக்குத் தேவைப்படலாம்; ஆனால், வாழ்நாள் பொழுதும் பார்ப்பவர்களை ஈர்த்துள்ளன அந்தப் போதைகள். அவைமூலம் பகுத்தறிவுள்ள மனிதர்கள், பிஞ்சு பருவத்திலிருந்து வயோதிக நிலை வரை – தங்களது ‘சுயத்தை’ பிறருக்கு அடகு வைத்துவிட்டு, ஆடை பறிபோன நிலைகூட அறியாமல், சுதந்தி ரத்தையும், தனித்தன்மையையும் இழந்தும் அதனை அறியாத வகையினராவது என்றால், அது போதையின் தன்மைதானே!

எதுவும் அளவுக்கு மிஞ்சினால் அமுதம் ஆனாலும் நஞ்சுதானே!

பதவி என்னும் பெரும் போதை!

இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல இந்தத் தலைமுறையில் இன்றைய காலகட்டம் பதவிப் போதை!

எல்லா போதைகளையும் மிஞ்சிய போதை இந்தப் போதையாகும். தடுத்து, வெறுத்து, ஒதுக்கப்பட வேண்டிய பதவி, அதிகார போதையாகும்.

உடுக்கை இழந்தாலும், படுக்கை இழந்தாலும் எதுபற்றியும் சற்றும் கூச்சம், வெட்கம், மானம் மறந்த, துறந்த அருவருப்பின் உச்சம் அது!

‘‘மலம் எடுப்பவனுக்கு அதன் கெட்ட வாடை தெரியாது’’ என்ற தந்தை பெரியார் மொழிக்கேற்ப, பதவிக் களத்தில் புரளுகின்ற பதவிப் போதையாளர்களுக்குத் தங்களது நிர்வாண அசிங்கங்கள் புலப்படுவதே இல்லை.

இதனால், மனிதர்கள் புதுப்புது அரசியல் அவதாரங்கள் எடுக்க சந்தர்ப்ப அரிதாரங்களைப் பூசி, பாமர மக்களை ‘ஜனநாயகம்’ என்ற முகமூடி போட்டு, சமூக, மக்களின் நலன்களை நாளும் அழித்து வருகின்றனர்.

எனவே, இந்த அய்ம்பெரும் போதை ஒழிப்பைத் திராவிடர் கழகம் தனது வேலைத் திட்டமாக – தொடர் பிரச்சாரத்தினை முதற்கட்டமாக நடத்திட திட்டமிட்டு வருகிறது.

இதுகுறித்த முழு விவரத்தை விரைவில் எதிர்பாருங்கள்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை         

17.7.2026        

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *