தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் தீர்மானம்!
லண்டன், ஜூலை 17– மாநில உரிமைகளைக் காக்கின்ற வகையில் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் ஒலிக்கும்! என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
நேற்று (16.07.2026) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகள்!
காவிரி இறுதித் தீர்ப்பின்படி, கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் திறக்காமல் முரண்டு பிடிக்கும் கருநாடக காங்கிரஸ் அரசின் சட்டவிரோதச் செயல்பாடுகளாலும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் “தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் திறந்து விட முடியாது” எனக் கருநாடகம் தொடர்ந்து வாதிட்டு வரும் சூழல் ஏற்பட்டு, இம்முறை ஜூன் 12 ஆம் தேதியன்று மேட்டூர் அணை திறக்காமல் நம் விவ சாயப் பெருங்குடி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதை இக்கூட்டம் வேதனையுடன் பதிவு செய்கிறது.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தவரை, மேகதாது அணை கட்டுவதற்கான கருநாடக அரசின் முயற்சிகள் வெற்றிபெற விடாமல் தமிழ்நாடு வெற்றிகரமாகத் தடுத்துள்ளது.
மேகதாது அணையின் ‘விரிவான திட்ட அறிக்கையை’ காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்காமல் திருப்பி அனுப்பவும், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பட்டியலில் இருந்தே நீக்கவும் வைத்து, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாத்து, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயன்ற கருநாடகத்தின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்தவர்தான் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்பதை இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெருமிதத்துடன் பதிவுசெய்கிறது.
நாடாளுமன்றத்தில் தி.மு.க.வின் குரல்!
தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாக்கின்ற வகையிலும் – மாநில உரிமைகளைக் காக்கின்ற வகை யிலும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புக்காக வும் – விழுமியங்களுக்காகவும் எப்போதும் போல் குரல் கொடுக்கவும், அதையொட்டி வரும் அனைத்து விவகாரங்களிலும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒலித்திடும் என்று இக்கூட்டம் உறுதி செய்கிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மேலும், இக்கூட்டம் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு வருமாறு:
மேகதாது அணைக்கட்டுக்கு எதிராக
நமது குரல் இருக்கும்!
நமது குரல் இருக்கும்!
“நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் குறித்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்:
மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.
ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும்.
தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் தி.மு.க. ஒவ்வொரு தி.மு.க. எம்.பி.,யும் செயல்படுவார்கள்.’’
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
