கல்வி உதவித் தொகைகளை நிறுத்துவது எளிய மக்களின் வருங்காலத்தை நசுக்கும் கொடுமை

3 Min Read

ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (DST) சார்பில் ஒவ்வோர் ஆண்டும் உயர்கல்வி பயிலும் பெண்களுக்கான உதவித் தொகையாக ‘ஷீ இன்ஸ்பயர்’ என்ற பெயரில் ரூ.80,000 வழங்கப்பட்டு வந்தது. இந்த உதவித் தொகையைப் பெற சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் முதல் 1 சதவித இடங்களுக்குள் வந்திருப்போர் தகுதியுடையோராவர்.

உயர் கல்விக்கான கல்வி உதவித்தொகைத் திட்டம், அடிப்படை, இயற்கை அறிவியல் துறைகளில் இளங்கலையும்,  ஒருங்கிணைந்த முதுகலைப் படிப்புகளையும் மேற்கொள்ளும் திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படுவதாகும். அத்துடன் கோடைக்கால ஆராய்ச்சி வாய்ப்புகளையும் வழங்குகிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஜூன், ஜூலையில் கல்வியாண்டு தொடங்கும் போது இதற்கான அறிவிப்புகள் வரும். இவ்வாண்டு இதுவரை உதவித் தொகைக்கான அறிவிப்பு வராததால் இதை எதிர்நோக்கி காத்திருந்த மாணவிகளும்,  பெற்றோர்களும் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில், ‘2026-ஆம் ஆண்டில் இந்தக் கல்வி உதவித் தொகைக்கான புதிய விண்ணப்பங்களைப் பெற வேண்டாம் என்று ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது; இந்த முடிவுக்கான காரணத்தை விளக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை’ என்று ‘தி வயர்’ இணைய ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது உதவித் தொகையைத் தொடர வேண்டாம் என்று ஒன்றிய அரசு முடிவு செய்திருக்கிறது.

ஏற்ெகனவே இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுபவர்கள் தொடர்ந்து பலன்களைப் பெறுவார்கள், ஆனால் இந்த ஆண்டு புதிய மாணவர் தொகுதி எதுவும் தேர்ந்தெடுக்கப்படாது என்றும் அச் செய்தி தெரிவிக்கிறது. ஆண்டுதோறும் சுமார் 8,000 முதல் 12,000 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வந்தனர்; அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் இந்தியாவின் முக்கியத் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். பல மாணவர்கள் தங்கள் அறிவியல் கல்விக்கான செலவுகளை ஈடுகட்ட இந்த உதவித்தொகையை நம்பியிருந்ததால், இம்முடிவு குறித்து மாணவிகளும், கல்வி நிறுவனங்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

இக்கல்வி உதவித்தொகைக்கான புதிய சேர்க்கையை நிறுத்துவது, திறமையான மாணவர்களை – குறிப்பாகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய அனைத்து சமூக மாணவிகளையும் அடிப்படை அறிவியல் துறைகளிலும், உயர்கல்வி ஆராய்ச்சியைத் தொடர்வதிலும் ஊக்கமிழக்கச் செய்யும்.

ஒன்றிய அரசாக பா.ஜ.க. பொறுப்பேற்றதிலிருந்து மாணவர்களுக்கான உதவித் தொகையில் கைவைப்பது இது முதல் முறையல்ல. 2008-2009 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அரசால்  1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு, மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையினை ஒன்றிய பா.ஜ.க. அரசு 2022-2023 ஆம் ஆண்டு முதல் திடீரென ரத்து செய்தது.

2026-2027 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் சிறுபான்மையினருக்கான உயர்கல்வி உதவித் தொகைக்கான நிதியைக் கடுமையாகக் குறைத்தது.

இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.7.34 கோடியிலிருந்து, 99% குறைக்கப்பட்டு, வெறும் ரூ.0.06 கோடியாக ஆனது. இதனால், தொழில்முறைப் படிப்புகளைப் பயிலும் பல மாணவர்களுக்கான ஆதரவு முடிவுக்கு வந்தது.

மவுலானா ஆசாத் தேசிய உதவித்தொகைக்கான (MANF) ஒதுக்கீடு 16% குறைக்கப்பட்டது. அத்துடன், 2022-2023 ஆம் ஆண்டு முதல் புதிய உதவித்தொகைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

மெட்ரிகுலேஷனுக்குப் பிந்தைய கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு கணக்கில் அதிகரித்திருந்தாலும், நிதி வழங்குவதில் தாமதமும் நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதும் பிரச்சினையாகி உள்ளது.  மாணவர் அமைப்புகளும் கல்வி ஆர்வலர்களும் இந்தக் குறைப்புகளை விமர்சித்து, கல்வி உதவித்தொகைத் திட்டங்களை மீண்டும் கொண்டுவரக் கோரிக்கை விடுத்தாலும் ஒன்றிய அரசு அது குறித்துக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. இத்தகைய நிதி உதவித் தொகைகளைக் குறைப்பதன் மூலம் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நிதி நெருக்கடி அதிகரிக்கும்; இடைநிற்றல் அதிகமாகும்; மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்லும் எண்ணிக்கை குறையும் என்ற ஆபத்துகள் எல்லாம் ஒன்றிய அரசுக்குப் பெரும் பிரச்சினையாகவே இல்லை.

ஆனாலும், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள், சிறுபான்மை மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தங்களது சொந்த கல்வி உதவித்தொகை திட்டங்களைத் தொடர்ந்தும் விரிவுபடுத்தியும் வந்தன. இதனால் அவற்றின் நிதி நெருக்கடியும் அதிகரித்திருக்கிறது.

மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள், இந் நாட்டின் வருங்காலத்திற்குச் செய்யப்படும் நிதி முதலீடுகள் என்பதை ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு உணராமல் இல்லை.

அந்த முதலீடு அவசியமற்றது என்றுதான் ஆர்.எஸ்.எஸ்சும் பா.ஜ.க.வும் கருதுகின்றன. தேசியக் கல்விக் கொள்கையும், நீட்டும், கல்வியைத் தனியார் மயமாக்கும் மும்முரமும் அதைத் தான் உணர்த்துகின்றன.

மாணவர்களின் போராட்டம் அடையாளமானதாக மட்டும் எப்போதும் இருக்காது. அதிகாரத்தைப் புரட்டிப் போட்ட வரலாறு மாணவர் போராட்டங்களுக்கு உண்டு. அதை மீண்டும் ஒருமுறை பார்க்க ஒன்றிய அரசு ஆசைப்படக் கூடாது!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *