3 நிமிடங்கள் 10 நொடிகள் – ‘வந்தே மாதரம்’ முழுப் பாடலைப் பாடுவதற்கான நேரம். ஏற்கெனவே உள்ள தேசிய கீதமான ‘ஜனகனமண’ பாடப்படுவதற்கான நேரம் 52 நொடிகள். மாநிலப் பாடல்கள் இருந்தால் அந்த நேரமும் சேரும்.
ஒவ்வொரு முறை குடியரசுத் தலைவர், ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் போது தொடக்கத்திலும், இறுதியிலும் பாடப்பட வேண்டும். வழக்கமான நேரத்தை விட இன்னொரு ஆறு நிமிடம் கூடும். அவ்வளவு நேரமும் தேசியப் பாடலுக்கும், தேசிய கீதத்துக்கும் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும். வேறு அசைவுகள் கூடாது. புதிய ஆணைப்படி ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு முதல் உரிமையாம்! இவை இரண்டும் பாடப்படும் ஒவ்வொரு முறையும், அரசு அதிகாரிகள், நீதிபதிகள், அமைச்சர்கள், மக்கள் பணியாளர்கள் உள்ளிட்ட முக்கியமானவர்களின் இவ்வளவு நேரத்தை இப்படி ‘தேச பக்தியின் பெயரால் விரயம்’ செய்கிற நாடு வேறொன்றிருக்குமா தெரியாது! ஜப்பானின் தேசிய கீதம் 40 நொடிகளுக்குள் முடியும். அமெரிக்கா 1.15 நிமிடம், இங்கிலாந்து 1 நிமிடம் என்பதையும் கருத்தில் கொள்க!
சரி, தேசிய கீதம் என்பதற்கும் தேசியப் பாடல் என்பதற்கும் என்ன வேறுபாடு? பூவுக்கும் புஷ்பத்துக்கும் உள்ள வேறுபாடுதான்! ‘ஜனகனமண’ என்று தொடங்கும் ரவீந்திரநாத் தாகூரின் பாடல், இந்தியாவின் எல்லா மாநிலங்களையும். எல்லா மக்களையும் ஒன்றிணைக்கும் பாடலாக இருக்கிறது என்பதால் தான் அது தேசிய கீதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், வந்தே மாதரம் பாடலின் தன்மை என்ன?
தேசப் பற்றை வளர்ப்பதற்காக ‘அரும்பாடுபடும்’ ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. அரசு, ‘வந்தே மாதர’த்தை வைத்து நடத்தும் நாடகத்தில் இது ஒரு காட்சி! இஸ்லாமியர்களையும், சிறுபான்மையினரையும் இணைக்காமல் தேச ஒற்றுமை பேசுவது ஆர்.எஸ்.எஸ்.சின் பாணி! அதை எல்லோர் வாயாலும் பாட வைக்கவே வந்தே மாதரம் பாடல், இப்போது தேசியப் பாடலாகக் கட்டாயமாகப் பாடப்பட வேண்டும் என்று ஆக்கப்பட்டிருக்கிறது. தாய் மண்ணை வணங்குகிறோம் என்ற பகுதி மட்டுமல்லாமல், இஸ்லாமியர்களை எதிரிகளாகச் சித்திரிக்கும் அந்த நாவலில் உள்ள முழுப் பாடலையும் பாட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளதோடு, இவ்வாண்டு (2026) மே மாதத்தில், தேசிய அவமதிப்புச் (1970) சட்டத்தைத் திருத்தி ‘வந்தே மாதரத்’தையும் சேர்த்து, அப் பாடலை அவமதிப்பது அச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்றும் ஆக்கிவிட்டது பா.ஜ.க. அரசு!
1882ஆம் ஆண்டு ‘ஆனந்த மடம்’ நாவலை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜி, இப் பாடலை மட்டும் 1875 – 76லேயே எழுதிவிட்டாராம். (அதற்கு என்ன சான்றுகள் என்றெல்லாம் கேட்கக் கூடாது.) அதை வைத்து இது ‘வந்தே மாதர’த்தின் 150-ஆம் ஆண்டு என்று சொல்கிறது ஆர்.எஸ்.எஸ்!
இப்போது மட்டுமல்ல… அடல் பிகாரி வாஜ்பேயி காலத் திலேயே ‘வந்தே மாதரம்’ பற்றி சர்ச்சை எழுந்ததுண்டு. அப்போது, ‘தாய் மண்ணே வணக்கம்’ என்று இஸ்லாமியர் களைப் பாடச் சொல்வதே பிரச்சினையானது.
ஆறு செய்யுள்களிலான முழுப் பாடலின், முதல் இரு செய்யுள்களில் பங்கிம் சந்திர சாட்டர்ஜி, இந்தியாவைத் தெய்வீகப் பெண்ணுக்கு ஒப்புமைப்படுத்தி, அதற்கு மரியாதை செலுத்தி, அறிவு, உணர்ச்சியுடன் உடல்ரீதியான (ஆள்பலம்) ஆதரவை வழங்கும் மூர்க்கமான தாயாகவும், அதே சமயம் அரவணைக்கும் ‘தாயாகவும்’ சித்தரித்திருந்தார். ‘தாய்’ என்று பொதுவாகத் தொடக்கத்திலிருக்கும் அருவமான குறிப்புகள், பிற்பகுதிச் செய்யுள்களில், குறிப்பாகக் கடைசி இரண்டு செய்யுள்களில், உருவமாக மாறுகின்றன. அந்த இந்தியத் தாயை அவர் இந்து தெய்வங்களான துர்கா, லட்சுமி (கமலா), சரஸ்வதியாகக் குறிப்பிட்டு, அவர்களை நாட்டின் பெண் பாதுகாவலர்களாக, “ஒப்பற்ற தூய்மையான மற்றும் பரிபூரணமானவர்கள்” என்று சித்தரிக்கிறார்.
இந்த முழுப் பாடலையும்தான் பாட வேண்டும் என்று இப்போது கட்டாயப்படுத்துகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு! ஒரு மதத்தின் கடவுள்களைப் போற்றிப் பாடப்படும் பாடலை, எல்லா மதத்தவரும், மத நம்பிக்கையற்றோரும் போற்ற வேண்டும் – அது தான் தேசப்பற்று என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
இந்தியா மதச்சார்பற்ற நாடு. அரசியலமைப்புச் சட்டத்தின் இந்த அடிப்படையையே தகர்ப்பதும், அதற்குத் தேசிய மரியாதையை வழங்குவதும் இந் நாட்டுக் குடிமக்களால் ஏற்கப்படத்தக்கதா?
தேசிய கீதத்தைத் திரையரங்குகளில் பாட வேண்டும்; பார்வையாளர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆணையிட்டது. அப்படி எழுந்து நிற்காதோர், நிற்க முடியாதோர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கோவாவில் தேசிய விருது பெற்ற எழுத்தாளரும், மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காகப் போராடுபவருமான சலில் சதுர்வேதி என்பவர் தாக்கப்பட்டார். பின்னர், உச்சநீதிமன்றமே திரையரங்குகளில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற ஆணையைத் திரும்பப் பெற்றது.
இப்போது மொத்தம் 4 நிமிடங்களுக்கும் மேலாக எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இது எத்தகைய விளைவுகளை உருவாக்கும் என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. ‘வந்தே மாதரம்’ பாடாததைக் குற்றமாகக் கருதக்கூடாது, வழக்கு தொடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், இதையெல்லாம் மதிக்கக் கூடியவர்களா இந்துத்துவாவினர்?
மதவாதம், இந் நாட்டின் முதன்மையான ஆபத்து! அது ஆட்சியிலேயே அமர்ந்திருப்பது பேராபத்து! அதைக் கட்டாயப் படுத்துவது அதனினும் ஆபத்து! இதை எதிர்கொண்டே ஆக வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கிறது இந்தியா!
