இந்நாள் முதலமைச்சரின் கரூர் பேச்சு
முன்னாள் முதலமைச்சரைப்பற்றிப் பயன்படுத்திய சொற்கள்
முன்னாள் முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களைப்பற்றி, இந்நாள் முதலமைச்சர் நேற்று (10.7.2026) கரூரில் பேசும்போது பயன்படுத்திய சொற்கள், ஒரு முதலமைச்சர் என்ற பதவித் தகுதிக்கு உகந்ததல்ல; வெற்றிகளும், தோல்விகளும் நிரந்தரமல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
பொதுநிலையில் உள்ள எவராலும்கூட ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை!
மிகப்பெரிய சோகம் நடைபெற்ற கரூருக்கு, முதலமைச்சரான பின்பு நேற்று (10.7.2026) திரு.ஜோசப் விஜய் அவர்கள் சென்று, அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், சில உதவிகளையும் – பணி நியமனங்களையும் வழங்கியதால், அது அரசால் ஏற்பாடு செய்யப்பட்டதாக, அரசாங்க நிகழ்ச்சியாகவே கருதப்படவேண்டிய நிகழ்ச்சி என்பது ஒருபுறம் இருந்தாலும், அதில் பேசிய முதலமைச்சரின் பேச்சும் (அது தயாரிக்கப்பட்ட உரை என்ற நிலை யிலும்கூட), அதன் மொழி நடையும், அரசியல் அறம் சார்ந்ததாகவோ, பண்பு நலனையொட்டிய சொற்கோவையாகவோ இல்லாதது, அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுநிலையில் உள்ள எவராலும்கூட ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்பது, வேதனை மிகுதியுடன் கண்டனம் தெரிவிக்கக் கூடிய ஒன்றாகும்.
முதலமைச்சர் பதவியில் உள்ள ஒருவரின் தகுதிக்குரிய மொழிகள் ஆகாது!
தி.மு.க.வின் தேர்தல் தோல்வி பற்றியோ, முதல மைச்சராக இருந்தவரின் தோல்வி குறித்தோ அவருக்கு விமர்சிக்க உரிமை இருக்கலாம். ஆனால், அதற்கு அவர் பயன்படுத்திய தரக்குறைவான சொற்கள் ‘‘ஒரு 5 நிமிடம் பேசியவுடனே, கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள்’’ என்பது பகுத்தறிவுள்ள – பண்பாடு புரிந்தவர்கள் எவராலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று; முதலமைச்சர் பதவி யில் உள்ள ஒருவரின் தகுதிக்குரிய மொழிகள் ஆகாது!
திரைப்படங்களில் அந்த வசனங்களுக்குக் கைதட்டல் கிடைக்கலாம்; உண்மை ஜனநாயகத் தத்துவத்தைப் புரிந்த எவரையும் முகம் சுளிக்க வைக்கும் வசை மொழிகளாகும்.
மக்களாட்சியில், தேர்தலில் முதலமைச்சர்களாக இருந்தவர்களும், மக்கள் தலைவர்களாக மதிக்கப் பட்டவர்களும்கூட தோல்வி அடைவது அதன் விசித்திரங்களில் ஒன்று.
தோல்விபற்றி விமர்சித்தபோதுகூட –
மொழிகளில் கண்ணியம் காத்தனர்!
சாதனைக்கு மேல் சாதனை செய்த, ஊழல் செய்யாத ‘ஏழைப் பங்காளர்’ என்று அழைக்கப்பட்ட கல்வி வள்ளல் காமராசர் தோற்கடிக்கப்படவில்லையா?
பேரறிஞர் அண்ணா தேர்தலில் (காஞ்சியில்) தோற்கடிக்கப்படவில்லையா?
ஏன், திருமதி இந்திரா காந்தி தேர்தலில் தோற்கடிக்கப்படவில்லையா?
வெற்றி பெற்ற கட்சித் தலைவர்களும் தனிப்பட்ட முறையில் வருந்தியவர்களும், அவர்களது தோல்வி பற்றி விமர்சித்தபோதுகூட – மொழிகளில் கண்ணியம் காத்தனரே!
ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சர் என்பவர், அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய கடமைக்குரியவர்.
‘திராவிட மாடல்’ ஆட்சியின் திட்டங்கள் பல வற்றை – முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் த.வெ.க. ஆட்சி பின்பற்றித் தீர வேண்டிய கட்டாயத்தில் இருப்பது எதைக் காட்டுகிறது?
முன்னாள் முதலமைச்சரின் தோல்வியை விமர்சிக்க அவருக்கு உரிமை உண்டு. ஆனால், அது தரமற்றதாகவும், அருவருப்புக்குரியதாகவும் இருக்கலாமா?
இப்படியெல்லாம் அரை நூற்றாண்டுப் பொது வாழ்வுக்கு உரியவரான மானமிகு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இழுக்கு ஏற்படுத்திட முடியாது எவராலும்! இது எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும்.
வெற்றிகளும், தோல்விகளும்
எவருக்கும் நிரந்தரம் அல்ல!
வெற்றிகளும், தோல்விகளும், எவருக்கும் நிரந்தரம் அல்ல; காலச் சூழல் அதைத் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வந்துள்ளது. இனியும் வரும்.
‘‘பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்’’ (குறள் 191)
‘‘கேட்பவர் பலரும் வெறுத்துச் சினங்கொள்ளும்படி யாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லிக்கொண்டே இருப்பவன், பிறர் எல்லோராலும், எப்பொழுதும் எள்ளி நகையாடப்படவே செய்வான்.’’
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
11.7.2026
