தமிழ்நாடு சிறைகளில் மருத்துவ சிகிச்சைக்காக 10 ஆயிரம் கைதிகள் காத்திருப்பு; மதுரை உயர்நீதிமன்றம் கவலை!

சிறைச்சாலைகளில்
சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவு!

மதுரை, ஜூலை 11- தமிழ்நாடு சிறைகளில் உள்ள கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் நிலவும் தாமதம் மற்றும் காவல்துறை பாதுகாப்பு பற்றாக்குறை குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடும் கவலை தெரிவித்துள்ளது.

மேலும், சிறைகளிலேயே சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவது குறித்து சிறைத்துறை இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கைதிக்கு மருத்துவ சிகிச்சை

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் தன் கணவருக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் தோள்பட்டை கட்டி உள்ளதாகவும், அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவரது மனைவி ரெஜினா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்

இந்த விசாரணையின் போது, சிறைத்துறை இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சில அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின:

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மே 31 வரை தமிழ்நாட்டில் உள்ள 46 சிறைகளில் இருந்து 13,699 கைதிகள் மருத்துவ சிகிச்சை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் காவல்துறைப் பாதுகாப்புடன் 3,118 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 10,581 கைதிகள் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க காவலர்கள் இல்லாததால் சிகிச்சை பெற முடியாமல் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர்.

குறிப்பாக சென்னையில் மட்டும் ‘பச்சை வகை’ பிரிவில் 7,812 கைதிகள் பாதுகாப்பு வசதி கிடைக்காமல் சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

நீதிமன்றத்தின் அதிருப்தியும், உத்தரவும்!

பாதுகாப்பு காரணங்களுக்காக இத்தனை ஆயிரம் கைதிகள் சிகிச்சையின்றி காத்திருப்பது கவலையளிக்கும் விஷயம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

“கைதிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, சிறைகளிலேயே சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தினால் காவல் துறையினரின் பாதுகாப்புக்காகக் காத்திருக்கும் நேரத்தைத் தவிர்க்கலாம்.”என்று உயர் நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டது.

எனவே, தமிழ்நாடு சிறைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிறைத்துறை இயக்குநர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *