சென்னை, ஜூலை 10- பெயரை மாற்றலாம், வரலாற்றை மாற்ற முடியாது என்று த.வெ.க. அரசுக்கு தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். திமுக மேனாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது: பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது. மகளிரின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தின் பெயரை மாற்றுவது, மக்கள் நலனுக்கான நிர்வாக நடவடிக்கை அல்ல; அரசியல் அடையாளங்களை அழிக்கும் முயற்சி மட்டுமே.
ஒரு திட்டத்தின் வெற்றியை அதன் பெயர் தீர்மானிக்காது; அது மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய முன்னேற்றம்தான் தீர்மானிக்கும். பெயர் மாற்றங்களில் செலவிடும் நேரத்தையும் ஆற்றலையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களிலும், சேவைகளை வலுப்படுத்துவதிலும் செலவிட வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் அரசியல் கட்சியினர் மாணவர்களைச் சந்திக்கத் தடை
அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
சென்னை, ஜூலை 10- இனிவரும் காலங்களில் பள்ளிகளின் அனுமதி இன்றி எவரும் உள்ளே நுழைய அனுமதியில்லை. அரசு நடத்தும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, பிறந்தநாள் விழாக்கள் அல்லது அரசு சாராத எந்த வொரு நிகழ்ச்சியும் பள்ளிகளில் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அறிவுப்பண்ணைகள் கல்விக்கூடங்கள் என்பவை காட்சிக் கூடங்கள் அல்ல; அதேபோல் பள்ளிகள் அரசியல் மேடைகளும் அல்ல. அவை அடுத்த தலைமுறையை உருவாக்கும் அறிவுப்பண்ணைகள்.
எனவே, இனிவரும் காலங்களில் பள்ளிகளின் அனுமதி இன்றி எவரும் உள்ளே நுழைய அனுமதியில்லை. அரசு நடத்தும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, பிறந்தநாள் விழாக்கள் அல்லது அரசு சாராத எந்தவொரு நிகழ்ச்சியும் பள்ளிகளில் நடத்தப்படக் கூடாது.
அரசியல் கட்சியினரோ தனியார் அமைப்பினரோ மாணவர்களை நேரடியாகச் சந்திக்க அனுமதி இல்லை. மாணவர்கள் வகுப்பறையில் கற்கும் ஒவ்வொரு நொடியும் இந்த நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரம்.
அந்த நேரத்தில் எந்த காரணத்துக்காகவும் தேவையற்ற இடையூறுகள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும், மாணவர்களின் கவனமும் சிதையாமல் இருப்பதை உறுதி செய்வது நமது முதன்மை பொறுப்பு.
பள்ளி வளாகங்கள் விழாக்கள் நடத்தும் இடமாக இல்லாமல், அறிவார்ந்த சிந்தனைகள் வளரும் இடமாக மாற வேண்டும். மேலும், பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு முறை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியை விட்டு விலகி தவெகவில் இணைந்த
4 மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள்
பேரவைத் தலைவரிடம் விளக்கம்
சென்னை, ஜூலை 10- பதவியை விட்டு விலகி தவெகவில் இணைந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைத் தலைவரிடம் 2-ஆவது முறையாக நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
கடந்த மே 13-ஆம் தேதி சட்டப் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக கொறாடா உத்தரவை மீறி 25 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்நிலையில் இரண்டாக பிரிந்திருந்த அதிமுக பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பின் மீண்டும் ஒன்றிணைந்தது.
அதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, வேலுமணி அணியினர் சந்தித்து கொறாடாவின் உத்தரவை மீறியதற்காக வருத்தம் தெரிவித்து முறைப்படி மன்னிப்பு கடிதம் வழங்கினர். இதையேற்று தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை கைவிடப்படுவதாக என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.
அதேநேரம் பதவியை விட்டு விலகி தவெகவில் சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் (ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல்) மீதான தகுதிநீக்க மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி அந்த 4 பேரிடம் விளக்கம் கேட்டு கடந்த ஜூன் 9-இல் தாக்கீது அனுப்பப்பட்டது. அவர்கள் ஏற்ெகனவே நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதில் சில விளக்கங்களை சட்டப்பேரவைத் தலைவர் கேட்டிருந்தார்.
இந்நிலையில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் சட்டப்பேரவைத் தலைவரிடம் நேற்று (9.7.2026) நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதேபோல், இசக்கி சுப்பையா கடந்தவாரமே தனது விளக்கத்தை கூறினார். இதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பேரவைத் தலைவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
