சமூகநீதிக்கான ஆட்சிக்கு அடிக்கல் நாட்டிய மாமனிதர் பிறந்த நாளை ‘நன்றித் திருநாளாகக்’ கொண்டாடி, நாம், நம்மை உயர்த்திக் கொள்வோம்!

6 Min Read

பானகல் அரசர் பிறந்த நாள் இன்று (9.7.1866)!
ஹிந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் இயற்றி, இந்தியாவிற்கே வழிகாட்டிய ஆளுமை ஆற்றலின் மறுபெயர்தான் பானகல்!

பானகல் அரசர் பிறந்த நாள் இன்று (9.7.1866)! ஹிந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் இயற்றி, இந்தியாவிற்கே வழிகாட்டிய ஆளுமை ஆற்றலின் மறுபெயர்தான் பானகல்! சமூகநீதிக்கான ஆட்சிக்கு அடிக்கல் நாட்டிய மாமனிதர் பிறந்த நாளைநன்றித் திருநாளாகக்கொண்டாடி, நாம், நம்மை உயர்த்திக் கொள்வோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இன்று  (9.7.2026) ‘நீதிக்கட்சி’ ஆட்சி, திராவிடர் ஆட்சியின் பெருமைமிகு சாதனைச் சரித்திரம் படைத்த ஆளுமைகளில் ஒருவரான பானகல் அரசரின் 160 ஆவது பிறந்த நாளாகும் (ஜூலை 9, 1866).

கட்சித் தொடங்கிய 3, 4 ஆண்டுகளிலேயே, 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், மக்களின் பேராதரவுடன் சென்னை ராஜதானியில் (Madras Presidency – தற்போதைய தமிழ்நாட்டையும், ஆந்திரப் பிரதேசம், கேரளா, கருநாடகா மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய தென்னிந்தியாவின் பெரும் பகுதியாக இருந்தது) பார்ப்பனரல்லாதார்  நீதிக்கட்சியின் ஆட்சியை அமைத்தனர்.

1920 தேர்தல் வெற்றிக்குப் பின், திராவிடர் இயக்கமான பார்ப்பனரல்லாதார் இயக்கத்தினைத் தோற்றுவித்த தலைவர்களில் முக்கியமானவரான, சர்.பிட்டி தியாகராயர் அவர்களை முறைப்படி ஆட்சி அமைக்க, அந்நாளில் வெள்ளைக்கார ஆளுநர் அழைத்தபோது, அவர் அந்தப் பதவியை விரும்பாமல், தென்னாற்காடு மாவட்டம் கடலூர் சுப்பராயலு ரெட்டி அவர்களையே முதலமைச்சராகப் பதவி ஏற்க வைத்தார்!

பதவிக்காக ஆலாய்ப் பறக்கும் எச்சில் இலைகளும், அடுத்த கட்சியின் தோளில் ஏறி அமர்ந்து, அதையேகூட பல நேரங்களில் கூர் பார்க்கும், பதவிப் பசியினால் ‘பிச்சாந்தேகி’ என்று திருவோடு தாங்கும் மலிந்த மனிதர்களும், பதவி என்ற மேல் துண்டுக்காக, இடுப்பில் உள்ள வேட்டியைக்கூடத் தியாகம் செய்யும் பரிதாபத்திற்குரிய பதவி வெறியர்களும், சந்தை சரக்குகளாகவும், சருகுகளாகவும் அலையும் இன்றைய அரசியல் நிலையை அந்நாளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கவலையுறுகிறோம்.

பிரதம அமைச்சராக ஆக,
இருமுறை மறுத்தவர்
அன்றைய ஈ.வெ.ராமசாமி பெரியார்!

நாட்டை ஆள அழைத்தபோது, அதை மறுத்தவர் சர். பிட்டி தியாகராயப் பெருமான். அதேபோல், அதே நீதிக் கட்சியின் தலைவர் ஆன நிலையில், 1940 இல், கட்டாய ஹிந்தித் திணிப்புக்கு எழுந்த எதிர்ப்பினால் ஆச்சாரியார், ஆட்சியை விட்டு வெளியேறிய சூழலில், (வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும்கூட) பிரிட்டிஷ் கவர்னர், கவர்னர் ஜெனரல்கள், வற்புறுத்தியும் பிரதம அமைச்சராக (‘‘Premier of Madras Presidency’’) ஆக இருமுறை மறுத்தவர் அன்றைய ஈ.வெ.ராமசாமிப் பெரியார்!

இதுதான் நீதிக்கட்சியின் பாரம்பரியம்.

பதவி ஏற்று, மூன்று மாதங்களில் உடல்நலக் குறைவு காரணமாக கடலூர் சுப்பராயலு ரெட்டியார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அந்த இடத்தைத் தக்கவரைக் கொண்டு நிரப்பிட, தியாகராயரும், தலைவர்களும் முடிவு செய்து, முதலமைச்சர் பொறுப்பைப் பானகல் அரசரை ஏற்க வைத்தனர்!

ஆசிரியர் அறிக்கை

பானகல் அரசர்
திரு.ராமராய நிங்கர்!

பானகல் அரசர் திரு.ராமராய நிங்கர் அவர்கள், ஆந்திர மாநிலத்தின் காளஹஸ்தி அருகேயுள்ள ஒரு ஜமீன் ராஜ்யமான பானகலில் பிறந்தவர். இவரது இயற்பெயர் பனகண்டி ராமராயநிங்கார். சென்னை மாநிலக் கல்லூரி என்ற பிரபல வசதி வாய்ப்பு படைத்தவர்கள் மட்டுமே இடம்பெறும் ‘உயர்கல்லூரி’யில் சேர்ந்து சமஸ்கிருதத்தில் முதுகலைப் (எம்.ஏ.) பட்டம் பெற்றார்.

மதராஸ் முதலமைச்சராவதற்கு முன்பே, இந்திய மத்திய சட்டமன்றத்திற்கு  (இன்றைய நாடா ளுமன்றத்திற்கு ஒப்பீடு கூறலாம் – Central Assembly) 1912 ஆம் ஆண்டிலேயே தேர்ந்தெடுக்கப்பட பானகல் அரசர், அதில் அறிவார்ந்த, மனிதநேயமிக்க பல முற்போக்குச் சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றிட, முந்தைய பலருக்கும் ஆதரவு தந்த ஓர் அமைதிப் புரட்சியாளர் ஆவார்!

இந்திய வரலாற்றில், மத்திய சட்டமன்றத்தில் முதன்முதலாக ஹிந்து மதத்தின் முக்கிய அம்சமான தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக, அன்றைய பம்பாய் மாநிலத்தில், மானக்ஜி பைராம் ஜி தாதாபாய் என்ற ஒரு பார்சி பிரமுகர், தனி நபர் மசோதாவைக் கொண்டு நிறைவேற்றிட, கடும் முயற்சி செய்தார். (இவர், பிரபல தாதாபாய் நவ்ரோஜ் அல்லர் – அவர் வேறு).

ஆசிரியர் அறிக்கை

அதற்கு அன்றைய காங்கிரஸ் உறுப்பினர்களும், பல மாநிலங்களைச் சார்ந்த உறுப்பினர்களும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து, முட்டுக்கட்டைப் போட்டனர். ஹிந்து மதத்தின் பெருமைகளைக் குலைக்கச் செய்யப்படும் முயற்சி என்று பார்ப்பனர்கள் கொக்கரித்தனர்.

‘‘திராவிடர்களின் எழுச்சி மலர்ந்த
ஒரு திருப்பு முனைக் காலம்!’’

அப்போது அவருக்கு ஆதரவாக, ‘‘தீண்டாமை – மனித குலத்தின் இழுக்கு – அதனை முற்றாக ஒழிக்கவேண்டும்’’ என்று குரல் கொடுத்த மேதை – மனிதநேயர்தான் நமது பானகல் அரசர் – அவருக்கு வயது 26 தான்!

ஆசிரியர் அறிக்கை

1920–களில் அவர் பதவியேற்று, ஆண்ட காலம் ‘‘திராவிடர்களின் எழுச்சி மலர்ந்த ஒரு திருப்பு முனைக் காலம்’’ ஆகும்!

சென்னை மாகாணத்தில் வகுப்புரிமை ஆணை யைப் பானகல் அரசரின், அரசு கொண்டு வந்தது. இதற்குப் பார்ப்பனர்கள் விரித்த வலையில் சிக்கிக் கொண்ட அந்நாளைய கவர்னர் போன்றவர்களும் – சில ‘வெள்ளைக்கார பார்ப்பன’ அதிகாரிகளும் பலவித முட்டுக்கட்டைகளைப் போட்டனர்.

சமூகநீதிக் கொடி உயரப் பறந்து,
புத்தொளி பாய்ச்சியது!

முதல் கம்யூனல் ஜி.ஓ. (1921)

இரண்டாவது – 1922 இல்

மூன்றாவது – 1928 இல்  என்று, தாமதப்பட்டாலும், பிறகு நீதிக்கட்சி ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த டாக்டர் எஸ்.சுப்பராயன் அமைச்சரவையில் இடம்பெற்ற முத்தய்யா (முதலியார்) அவர்களின் அரிய பெரிய விடா முயற்சிக்குப் பின்னரே, அதுமுதல் செயலுக்கு வந்து, சமூகநீதிக் கொடி உயரப் பறந்து, புத்தொளி பாய்ச்சியது!

இந்தியாவிற்கே வழிகாட்டிய ஆளுமை ஆற்றலின் மறுபெயர்தான் பானகல்!

பானகல் அரசர் – தந்தை பெரியார் நட்பு, கொள்கை உறவுதான், பல அரிய சாதனைகளைச் செய்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த தந்தை பெரியார், அங்கு வகுப்புவாரி உரிமைக்குச் சில ஆண்டுகள் போராடிய நிலையில்,  பானகல் அரசரின் தொடர் முயற்சியால், பார்ப்பனர்களின் கோயில் சர்வ கொள்ளையைத் தடுக்கும் தடுப்பரணாக – ஹிந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் இயற்றி, இந்தியாவிற்கே வழிகாட்டிய ஆளுமை ஆற்றலின் மறுபெயர்தான் பானகல்!

பார்ப்பனர் கொள்ளையைத் தடுக்க, பலத்த எதிர்ப்புகளுக்கிடையே இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து அரசுத் துறையாக ஆக்கிய பானகல் அரசுக்கு, காங்கிரஸ் தலைவராக இருந்தபோதே, பாராட்டுத் தெரிவித்தார் தந்தை பெரியார்.

பெரியாரின் இந்தப் பாராட்டுக்காகவே, அச்சமயத்தில்  காங்கிரஸ் கமிட்டி கூடியபோது, சத்தியமூர்த்தி அய்யர், பெரியாரை, ‘ஜெனரல் டயர்’ உடன் ஒப்பிட்டுப் பேசினார். இதற்காகவே, காங்கிரஸ் கமிட்டியில் சத்தியமூர்த்திக்கு எதிராக, டாக்டர் வரதராசுலு நாயுடு போன்றவர்கள் கிளர்ந்தெழுந்து, பெரியாரைப்பற்றிக் கூறியதை வாபஸ் வாங்க வைத்தனர். அப்பேர்ப்பட்ட சிறப்புக்குரியது பானகல் அரசர் – பெரியாரின் கருத்தொற்றுமை.

அதனால்தான், 1928 இல் அவரது மறைவுச் செய்தி கேட்டு, சொல்லொணாத் துயரத்துடன், தந்தை பெரியார் எழுதிய இரங்கல் செய்தி, அன்னை நாகம்மையார் மறைவின்போது எழுதிய இரங்கல் கடிதத்திற்கு அடுத்த இரங்கல் இலக்கியமாகும்.

(‘ஒப்பற்ற தலைமை’ என்ற தலைப்பில் 2021 இல் கரோனா காலத்தில் ஆற்றிய சொற்பொழிவுகளில் விரிவாக, விவரங்களோடு, விளைச்சலாக வெளிவந்த நூலைப் படியுங்கள்!)

திருவாரூரில் உயர்நிலைப்பள்ளியில் நமது கலைஞர் , மாணவராகப் படித்தபோது, அவர் பயின்ற துணைப் பாட நூல் ‘பானகல் அரசர் வரலாறு’ என்பதும் சுவையான தகவலாகும்.

நாம், நம்மை
உயர்த்திக் கொள்வோம்!

அப்படிப்பட்ட அறிவுக் கொடை வள்ளல், சமூகநீதிக்கான ஆட்சிக்கு அடிக்கல் நாட்டிய மாமனிதர் பிறந்த நாளை ‘நன்றித் திருநாளாகக்’ கொண்டாடி, நாம், நம்மை உயர்த்திக் கொள்வோம்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்  

சென்னை         

9.7.2026 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *