மின் தடையை நீக்க புதிய திட்டம் : தமிழ்நாடு மின்வாரியம் அறிவிப்பு

2 Min Read

சென்னை, ஜூலை 8 தமிழ்நாட்டில் மின் தடை அடிக்கடி ஏற்படுவதை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. எப்போதெல்லாம் மின் தடை ஏற்பட்டது என பகுதி வாரியாக பதிவேட்டை பராமரிக்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நிலையான மற்றும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய, மீண்டும் மீண்டும் ஏற்படும் மின்தடை பிரச்சினைகளை நிரந்தரமாக நீக்கும் வகையில் Repeat Tripping Elimination Programme (RTEP)” என்ற புதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின் பகிர்மான அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், `தமிழ்நாடு தற்போது 3.5 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோருக்கு சேவை வழங்கி வருவதாகவும், மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான துணை மின் நிலையங்கள், உயர் மின்னழுத்த மற்றும் தாழ் மின்னழுத்த மின் வலையமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மின்விநியோகம் சீராக இருந்தாலும், சில குறிப்பிட்ட துணை மின் நிலையங்கள், மின் பாதைகள் மற்றும் மின் உபகரணங்களில் மீண்டும் மீண்டும் மின்தடை ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளை தற்காலிகமாக சரிசெய்வதை விட, அதன் மூலக் காரணத்தை கண்டறிந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே RTEP திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த ஆறு மாதங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மின்தடையின் அடிக்கடி நிகழ்தல், பாதிக்கப்பட்ட நுகர்வோர் எண்ணிக்கை, சேவை பாதிப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய துணை மின் நிலையங்கள், கூடுதல் மின் பாதைகள், திறன் மேம்பாடு, நெட்வொர்க் தானியக்கம் உள்ளிட்ட நீண்டகால உள்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் மீண்டும் மீண்டும் ஏற்படும் மின்தடைகள் குறைவதோடு, மின்விநியோக நம்பகத்தன்மை உயர்ந்து, நுகர்வோருக்கு தரமான மற்றும் தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என்று மின்வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *