சமூகநீதியை மறுப்பது மதம் மாறுவதற்கான தண்டனையா?

5 Min Read

சமூகநீதியை மறுப்பது
மதம் மாறுவதற்கான தண்டனையா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 25, இந்தியக் குடிமக்கள் எவரும் அவர் விரும்பிய மதத்தைப் பின்பற்றவும், விரும்பினால் மதம் மாறிக் கொள்ளவும் உரிமை அளிக்கிறது.

அந்த அடிப்படையில்தான், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன்-கோமதி அம்மாள் இணையரின் மகன் பரமசிவம், 2015 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தைத் தழுவினார். தனது பெயரைச் சமீர் அகமது என அவர் மாற்றிக் கொண்டார். அதே ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வதிதா என்பவரை இஸ்லாமிய சடங்குகளின்படி சமீர் அகமது திருமணம் செய்து கொண்டார். அவரும் அண்மையில் மதம் மாறியவரே! பெற்றோரின் சான்றிதழ்களை வைத்துதான் குழந்தைகளுக்கு வகுப்புச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. தாங்கள் முஸ்லிம் லெப்பை சமூகத்தின் நடைமுறையைப் பின்பற்றுவதால், அதற்கேற்ப வகுப்புச் சான்றிதழ் கோரி கயத்தார் வட்டாட்சியரிடம் 2020 ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. ‘வட்டாட்சியரின் நடவடிக்கை சட்டவிரோதமானது’ எனக் கூறி தனக்கு முஸ்லிம் லெப்பை என்பதற்கான சான்றிதழை வழங்குவதற்கு உத்தரவிடுமாறு 2022ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சமீர் அகமது ரிட் மனுத்தாக்கல் செய்தார்.

இதற்கிடையில், நெடுநாளாக நீடித்து வந்த இதே போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தைத் தழுவிய பிறகும், அவரது சமூக மற்றும் கல்விரீதியான பின்னடைவு உடனடியாக நீங்கிவிடாது என்ற அடிப்படையிலும், பல்வேறு தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்றும் அரசாணை எண் 31/2024–அய் வெளியிட்டது – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு.

நம்பிக்கையின் அடிப்படையிலோ, விருப்பத்தின் அடிப்படையிலோ, தனது ஜாதி இழிவைத் துடைத்துக் கொள்ளும் விதமாகவோ ஒருவர் இந்து மதத்திலிருந்து மாறினாலும், நெடுங்காலமாக அந்த ஜாதியின் காரணமாகப் பிற்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டிருந்த சமூகநிலை சட்டென்று மாறிவிடுவதில்லை. மதம் மாறுதல் என்பது, அவரின் நம்பிக்கை அடிப்படையில், தன் சமூகநிலையை மாற்றிக் கொள்வதற்கான முதல் படி. ஆனால் அதன் காரணமாகவே, அவருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, சமூகரீதியாக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு என்னும் சமூகநீதி உரிமை பறிக்கப்படக் கூடாது என்ற அடிப்படைக் கொள்கையை நிர்வாகரீதியாக நடைமுறைப்படுத்திய முயற்சியே தமிழ்நாடு அரசின் அரசாணை. இதன் மூலம், இஸ்லாத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BCM)  என்ற பிரிவின் படியே, அண்மையில் மதம் மாறியோருக்கும் வகுப்புச் சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறை உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் மதத்தின் அடிப்படையில் புதிய சலுகை வழங்குவதல்ல; ஏற்கெனவே இருந்த சமூகப் பின்னடைவைக் கருத்தில்கொண்டு, இட ஒதுக்கீட்டின் பலன் தொடர்வதை உறுதி செய்வதே!

ஆனால், அந்த வழக்கில் கடந்த ஜூன் 25 அன்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அமர்வு, சமீர் அகமதுவின் மனுவை நிராகரித்ததுடன், 2024-ஆம் ஆண்டின் அரசாணையையும் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

‘‘இந்து மதத்தில் உயர்ஜாதியினராக இருந்த ஒருவர், இஸ்லாத்துக்கு மாறினால், அவருக்கு இந்த இடஒதுக்கீடு பொருந்தாது; பிற்படுத்தப்பட்டோருக்கே பொருந்தும்’’ என்று அரசு வழக்குரைஞர் எடுத்துரைத்தும் அக்கருத்தை ஏற்காமல் இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மதம் மாறுதல் என்பதைச் சமூக விரோதமாகப் பார்க்கும் போக்கு, இந்தியாவில் நெடுங்காலமாக உள்ளது. குறிப்பாக, இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ, இஸ்லாம் மதங்களுக்கு மாறுவதை ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவாவினர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். அதற்கெதிராக வன்முறைகளைத் தூண்டுவதும், சில மாநிலங்களில் சட்டங்களைக் கொண்டுவர முயற்சிப்பதுமாக இந்து மதத்தில் இருப்போர் எக் காரணம் கொண்டும் வேறு மதங்களுக்கு மாறிவிடக் கூடாது என்று தடுக்கின்றனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின், 2022-ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றில், “மத ரீதியான மக்கள் தொகைப் பரவலில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்; மதமாற்றம் என்பது ஒரு குழு சார்ந்த செயல்திட்டமாக இருக்கக்கூடாது” என்று கருத்துத் தெரிவித்திருந்தார் உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.

மதம் என்பது ஒருவரின் கருத்து, நம்பிக்கை சார்ந்த நிலைப்பாடுதானே! அதை அவர் மாற்றிக் கொள்ளுவதில் மற்றவர்கள் தலையிடுவதற்கு என்ன உரிமை இருக்கிறது? அரசியல் ரீதியான கருத்துகளிலும் இத்தகைய மாற்றங்கள் வரக் கூடாது என்று சொல்ல முடியுமா? இந்து மதத்தின் கொடுமைகளைக் கண்டு, அதிலிருக்க விரும்பாமல், “நான் ஹிந்துவாகச் சாக மாட்டேன்” என்று மொத்தமாக 10 லட்சம் மக்களுடன் மதம் மாறினாரே பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர். இந்திய வரலாற்றில் மக்கள் தொகைப் பரவலில் மாற்றத்தை ஏற்படுத்திய செயல் இதுதானே! இதைத் தான் குறிப்பிடுகிறாரா உயர்நீதிமன்ற நீதிபதி என்று அப்போதே குரல் எழுந்தது. மதம் மாறிக் கொள்வது ஒருவரின் அடிப்படை உரிமை சார்ந்தது. அதை மொத்தமாகப் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் சொல்ல இயலாது. அதனால், அவர்களின் உரிமைகளும் பறிக்கப்படக் கூடாது.

எனவே, “ஹிந்துப் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பின்னர், அவர்கள் முன்பு அனுபவித்து வந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு உரிமையை மறுக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அண்மைய தீர்ப்பு – சமூக நீதியின் அடிப்படைக் கொள்கைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். சமூக மற்றும் கல்வி ரீதியான பிற்படுத்தப் பட்ட நிலை மத மாற்றத்தால் மறைந்து விடாது என்பதால், பாதிக்கப்படும் மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தி சேலம் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நான்காவது  தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதே போலவே, ஒடுக்கப்பட்ட பட்டியலின ஜாதியிலிருந்து மதம் மாறிய கிறிஸ்துவர்களுக்கு இடஒதுக்கீடும், சமூகப் பாதுகாப்புகளும் மறுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் உள்ள இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்த ஆணையம், அதன் பரிந்துரையை நிறைவு செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அறிக்கை வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

சமூகநீதியை மறுப்பது மதம் மாறுவதற்கான தண்டனையாக அமைந்து விடக்  கூடாது. தமிழ்நாடு அரசும், சமூகநீதியாளர்களும் சட்ட ரீதியான முயற்சிகளைக் கவனமாகத் தொடர வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *