நெய்வேலியில் கொளுத்தும் வெயிலில் ஆர்ப்பாட்டம்!
மண்ணுரிமை யாருக்கு இருக்கிறதோ,
அவர்களுக்குத்தான் முன்னுரிமை இருக்க வேண்டும்!
மின்சாரத்தை உற்பத்தி செய்துவிட்டு, நாம் இருட்டில் இருக்கிறோம்!
நெய்வேலி ஜூலை 7 என்.எல்.சி. இந்தியா (லிட்) நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், ‘‘மண்ணுரிமை யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் முன்னுரிமை இருக்க வேண்டும்’’ என்றும், ‘‘மின்சாரத்தை உற்பத்தி செய்துவிட்டு நாம் இருட்டில் இருப்பதா?’’ என்றும், கேள்வி எழுப்பினார்.
கடலூர் மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில், நெய்வேலி நகரம் முக்கிய கடைவீதியில் – காமராஜர் சிலை அருகில் இன்று (7.7.2026) காலை 10.30 மணிக்கு, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டத் தலைவர் சோ.தண்டபாணி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கடலூர் மாவட்டக் காப்பாளர் அரங்க. பன்னீர்செல்வம், மேனாள் மாநில அமைப்புச் செயலாளர் நெய்வேலி வெ.ஞானசேகரன், திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன், கழகப் பேச்சாளர் தேவ.நர்மதா, மேனாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தி.மு.க.தேர்தல் பணிக்குழு தலைவருமான கடலூர் இள.புகழேந்தி, கழகத்தின் பொதுச் செயலாளர் முனை வர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். முன்னதாக நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் நிர்வாகத்தை ஈர்க்கும் வகையில் ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிறைவாகக் கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர ்உரை
அவர் தமது உரையில், ‘‘புயலோ, மழையோ, வெய்யிலோ நமக்கு முக்கியமல்ல, கடமை தான் முக்கியம்’’ என்று எடுத்த எடுப்பிலேயே, உரிமைகளைப் பெறுவதற்காக வெய்யிலில் அமர்ந்திருந்த மக்களின் உணர்வைச் சுட்டிக்காட்டிப் பேசினார். தொடர்ந்து, ‘‘உங்கள் பிள்ளைகளுக்கு வேலை கொடுக்கிறோம்’’ என்று சொன்னதை நம்பி ஏழை, எளிய மக்கள் தாங்கள் வாழ்வாதாரத்திற்காக வைத்திருந்த நிலத்தை வழங்கினார்கள். நெய்வேலி நிர்வாகம் அதை நிறைவேற்றியதா?’’, ‘‘காலம் கடந்தும் ஒப்பந்தப் பணியாளராக வைத்துள்ளது. இப்போது அதற்கும் வடநாட்டில் இருந்து பணியாளர்களை நியமிக்கிறார்கள்’’ என்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் இன்றைய நிலையைத் தெளிவுப்படுத்தினார்.
மேலும் அவர், ‘‘நாங்கள் விளம்பரத்திற்காக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை’’ என்றுகூறி, திராவிடர் கழகம் இதுவரை நடத்திய போராட்டங்களையும், அத னால் மக்களும், தமிழ்நாடு அரசும் பெற்ற பயன்களையும் பட்டியலிட்டார்.
தொடர்ந்து, பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதைப் புள்ளிவிபரங்களோடு அம்பலப்படுத்தினார். தமிழ்நாடு மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று கல்வி வள்ளல் காமராஜரும், பிரதமர் நேருவும் கொண்டு வந்த நவரத்தினம் என்று சொல்லக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முழுமையாக தனியார் மயமாக்குவதைக் கண்டிக்கும் வகையில், ‘‘மண்ணுரிமை யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்குத்தான் முன்னுரிமை இருக்க வேண்டும்! மின்சாரத்தை உற்பத்திச் செய்து விட்டு, நாம் இருட்டில் இருப்பதா? என்று கேள்வி எழுப்பி, உரிமைகளை நிலைநாட்டும் வரை நாங்கள் ஓயமாட்டோம்’’ என்று கூறி, தனது உரையை நிறைவு செய்தார்.
நிறைவாகக் கடலூர் மாவட்டச் செயலாளர் க.எழிலேந்தி நன்றி கூறி, நிகழ்ச்சி நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் சே.வ.கோபண்ணா, திண்டிவனம் மாவட்டத் தலைவர் இரா.அன்பழகன், அரியலூர் மாவட்டத் தலைவர் கே.நீலமேகம், கும்பகோணம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி, மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் தா.இளம்பரிதி, விழுப்புரம் மாவட்டச் செயலாளர் அரங்க.பரணீதரன், விருத்தாச்சலம் மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கொக்கூர் கு.இளம்பரிதி, சிதம்பரம் மாவட்டச் செயலாளர் கோவி.பெரியார்தாசன், புதுச்சேரி மாவட்டச் செயலாளர் தி.ராசா, நெய்வேலி நகரம் செயலாளர் கு.இரத்தினசபாபதி, நெய்வேலி நகரத் தலைவர் ச.சு.இசக்கிமுத்து மற்றும் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம், மயிலாடுதுறை, அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் நெய்வேலி வாழ் மக்கள் கலந்து கொண்டனர்.
