சுராசந்த்பூர், ஜூலை 5 மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு குக்கி பழங்குடியினருக்கும், மெய்டீஸ் இன மக்களுக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர இனக் கலவரத்தின் போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) வுங்சாகின் வால்டே மீது ஒரு கும்பல் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்ததை அடுத்து, குருகிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மறைந்த சட்டமன்ற உறுப்பினர் வால்டேவின் இறுதி நிகழ்வுகள் 4.7.2026 அன்று அவரது சொந்த மாவட்டமான சுராசந்த்பூரில் நடைபெற்றது. இந்த இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக, மணிப்பூர் மாநில பாஜக முதலமைச்சர் கேம்சந்த்சிங் சுராசந்த்பூர் வருகை தந்தார். அவர் வால்டேவின் இல்லத்திற்குச் சென்று, அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
முக்கிய நிகழ்வு
முதலமைச்சர் கேம்சந்த்சிங்கின் வருகைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த ‘குக்கி’ மற்றும் ‘ஸோ’ ஆகிய பழங்குடியின அமைப்புகள், 4.7.2026 அன்று சுராசந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு (பந்த்) போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இதன் காரணமாக அன்று சுராசந்த்பூர் மாவட்டம் முழுவதும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பொது போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்கள் எதுவும் இயங்காததால், ஒட்டுமொத்த மாவட்டமும் ஸ்தம்பித்துக் காணப்பட்டது.
இன்ஸ்டாகிராமில் குழந்தை
ஆபாசக் காட்சிப் பதிவு விளம்பரம் மெட்டா நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு சம்மன்!
புதுடில்லி, ஜூலை 5 இன்ஸ்டாகிராம் பக்கங்களில் குழந்தை பாலியல் அத்துமீறல் உள்ளடக்கங்கள் விளம்பரமாக இடம் பெறுவது தொடர்பாக, மெட்டா (Meta) நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் பிபிசி (BBC) ஊடகம் நடத்திய புலனாய்வு விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. மெட்டா நிறுவனத்தின் பரிந்துரை அல்காரிதம் (Recommendation Algorithm), குழந்தை பாலியல் அத்துமீறல் உள்ளடக்கங்களைக் கொண்ட காட்சிப் பதிவுகளை ஊக்குவிப்பதாகவும், பயனர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அந்நிறுவனம் தீவிர குறைபாடுகளைக் கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து ஒன்றிய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் பிபிசி அறிக்கை தொடர்பாக விளக்கம் கேட்டு மெட்டா நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கு அந்நிறுவனத்திடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.மின்னஞ்சலுக்குப் பதில் வராததை அடுத்து, மெட்டா நிறுவனத்திடம் நேரடியாக விளக்கம் கோர ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதிகளை நேரில் அழைத்து விளக்கம் கேட்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.ஒரே வாரத்தில் மெட்டா நிறுவனத்திற்கு எதிராக ஒன்றிய அரசு எடுக்கும் இரண்டாவது கடுமையான நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.
