எய்ம்ஸ் – மேகதாது பிரச்சினைகள் குறித்து ஒன்றிய அரசிடம் ஆளுநர் அர்லேகர் பேசுவாரா?

போராட்ட உணர்வை இளைஞர்களுக்கு உருவாக்கவேண்டும்; கொள்கை உணர்வைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்!
இடைத்தேர்தலே, ஒரு மினி பொதுத் தேர்தல் போன்று வரக்கூடிய ஆபத்துகள் இருக்கின்றன!
முதன்முதலில், கட்சித் தாவல் செய்தவர்களுக்குப்
பதவி கொடுத்தது ராஜகோபாலாச்சாரியார், காங்கிரஸ் கட்சி!
கட்சித் தாவல் தடைச் சட்டத்தில், 10 ஆவது அட்டவணை திருத்தப்பட்டு நடைமுறைக்கு வரவேண்டும்!

சேலம்,  ஜூலை 5 ‘‘போராட்ட உணர்வை இளைஞர்க ளுக்கு உருவாக்கவேண்டும்; கொள்கை உணர்வைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்! இடைத்தேர்தலே, ஒரு மினி பொதுத் தேர்தல் போன்று வரக்கூடிய ஆபத்துகள் இருக்கின்றன! முதன்முதலில், கட்சித் தாவல் செய்தவர்களுக்குப் பதவி கொடுத்தது ராஜகோபாலாச்சாரியார், காங்கிரஸ் கட்சி! கட்சித் தாவல் தடைச் சட்டத்தில், 10 ஆவது அட்டவணை திருத்தப்பட்டு நடைமுறைக்கு வரவேண்டும்! எய்ம்ஸ் – மேகதாது பிரச்சினைகள் குறித்து ஒன்றிய அரசிடம்  ஆளுநர் அர்லேகர் பேசுவாரா?’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சேலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்குப் பேட்டி!

நேற்று (4.7.2026) முற்பகல் சேலத்தில் உள்ள கே.எம்.பி. திருமண மண்டபத்தில் நடைபெற்ற  திராவிடர் கழகப் பொதுக்குழுவிற்குப் பிறகு, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

1500–க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள்!

திராவிடர் கழகப் பொதுக்குழு  நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றது. பொதுக்குழுவில்  நிறை வேற்றப்பட்ட 19 தீர்மானங்களின் நகலை உங்களிடம் கொடுத்து, உங்களையெல்லாம் சந்திக்க  நான் வந்திருக்கின்றேன்.

கன்னியாகுமரியிலிருந்து திருத்தணி வரையில் 1500–க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் அடிப்படையில் இது ஒரு பிரச்சார இயக்கமாகும். அந்த அடிப்படையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், திராவிடர் கழகம் ஆதரித்த கூட்டணிக்குத் தோல்வி என்று தெரிந்த பிற்பாடும்கூட, தோல்வி – வெற்றியைப்பற்றி கவலைப்படாமல், கொள்கை ரீதியான ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ளவேண்டும் என்று, பல இடங்களில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளை நடத்தினோம். முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி, 103 கூட்டங்களை, தமிழ்நாடு மட்டுமின்றி, கருநாடகா, மும்பை, புதுவை உள்ளிட்ட மாநிலங்களிலும் நடத்தினோம்.

7 ஆம் தேதி, நெய்வேலியில்
என்னுடைய தலைமையில் போராட்டம்!

நீட் தேர்வைக் கண்டித்து ஒருமித்த ஆதரவுடன் போராட்டம் நடத்தியிருக்கிறோம். கருநாடக மாநில அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்தைக் கண்டித்து, திருவாரூரில் அறப்போராட்டம் நடத்தினோம். அதேபோல, பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கவிருப்பதைக் கண்டித்து, வருகிற 7 ஆம் தேதி, நெய்வேலியில் என்னுடைய தலைமையில் போராட்டம் நடைபெறவிருக்கிறது.

ஆகவே, ஒரு பக்கம் போராட்டம்; இன்னொரு பக்கம் இடையறாத பிரச்சாரத்தினை மேற்கொண்டி ருக்கின்றோம். மாணவர்களை, இளைஞரணியினர் தயாரிக்கவேண்டும்.

எங்களுக்கு ஒரு கவலை என்னவென்றால், இளைஞர்கள், திசை திரும்பிச் செல்லுகின்ற இந்த நேரத்தில், குறிப்பாக, ஊடகங்களாலும், தங்களுடைய நேரத்தை வேறு வகையான வழிகளில் செலவழிக்கின்ற காரணத்தினால், கவனச் சிதறல்களும், அவர்களுடைய வளர்ச்சியைப் பாதிக்கக் கூடிய அளவில் இருக்கின்றது என்பதை நினைத்து, அவர்களைச் சரியான வழிக்குத் திருப்ப, அதற்குரிய திட்டங்கள் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இருக்கின்றன.

கட்சி தாவல் சட்டம் என்பதை ஒழுங்குபடுத்தவேண்டும்!

பல தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்டாலும், கட்சி தாவல் சட்டம் என்பதை ஒழுங்குபடுத்தவேண்டும். ஏனென்றால், அண்மையில் தமிழ்நாட்டு அரசியலில், ஓர் அவலமான ஒரு காட்சி என்னவென்று சொன்னால், ‘குதிரை பேரம்’, ‘அந்த பேரம்’, ‘இந்த பேரம்’ என்று, காலையில் ஒரு கட்சியிலிருந்து அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி, இன்னொரு கட்சியில் சேருகிறார்கள்; மறுபடியும் தேர்தலை எதிர்பார்க்கிறார்கள் என்பது இதுவரையில் தமிழ்நாட்டினுடைய வரலாற்றிலே கிடையாது.

அதிகாரப் பங்களிப்பை மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பது அல்ல!

ஆகவே, தொங்கு சட்டப்பேரவை வந்தால், இந்த நிலைமை ஏற்படும் என்று தொடக்கத்திலேயே வாங்கள் வலியுறுத்தினோம். எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும், அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை வரவேண்டும் என்பதை வலியுறுத்தியதன் காரணமே, அதிகாரப் பங்களிப்பை மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்பது அல்ல; தி.மு.க.வும் அந்தக் கருத்தைத்தான் சொன்னார்கள்.

இதுவரையில், தமிழ்நாட்டினுடைய வரலாற்றில் அப்படி இல்லை. ஆகவே, அதனுடைய விளைவு என்னவென்று கேட்டால், ‘அவர் அட்சிக் கட்சியிலிருந்து  போனார், இவர் இந்தக் கட்சியிலிருந்து போனார்’ – அறுதிப் பெரும்பான்மைக்காக அவர்கள் அங்கே போகிறார்கள் என்றெல்லாம் சொல்லக்கூடிய நிலை களை உருவாக்கி வைத்துவிட்டார்கள்.

கட்சித் தாவல் மற்றும் பல செய்திகள் குறித்து மாலையில் நடைபெறும் கூட்டத்தில் விரிவாகப் பேசவிருக்கிறேன்.

‘நீட்’, தொகுதி மறுவரையறை போன்ற
ஆபத்துகள்!

எங்களுடைய நிலைப்பாட்டினை உங்களுக்குத் தெளிவாகச் சொல்லியாயிற்று. ஆகவே, இந்த சூழ்நிலையில், நாங்கள் எப்பொழுதும்போல,  நீட் தேர்வை மாற்றிவிடுவோம் என்று சொல்கிறார்களே தவிர, அது இன்னும் பல உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கின்றது. அதேபோன்று, தொகுதி மறுவரையறை ஆபத்தும் இருக்கிறது.

‘‘எப்பொழுதும், எதற்கும் தயார்!’’

இப்படி பல செய்திகளுக்குப் போராட்டக் களம் தயாராக இருக்கவேண்டிய அவசியத்தில், இளைஞர்கள் எல்லாம், பதிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் எப்பொழுது வரும்? அதில் எவ்வளவு பங்கு வாங்கலாம் என்று மற்றவர்கள் யோசிக்கின்ற நேரத்தில், நாங்கள் என்ன செய்கிறோம் என்றால், பெரியாருடைய இயக்கமான திராவிடர் கழகம், இளைஞர்களை, கொள்கை இளை ஞர்களாகத் தயாரித்திருக்கின்றோம். அதனுடைய விளைவாக, இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தோம், ‘‘எப்பொழுதும், எதற்கும் தயார்’’ என்ற நிலையில், நம்முடைய இயக்கப் பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்டங்களிலிருந்து ஆயிரம் இளைஞர்களை  கொடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளை சில வாரங்களுக்கு முன் கொடுத்தோம், திராவிடர் கழகத்தின் சார்பாக.

1,706 பேர் பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள்!

இன்றைக்கு எங்களுக்கே வியப்பு என்னவென்றால், தோழர்கள் உற்சாகத்தோடு, 16 வயதிலிருந்து 35 வயது வரையில் உள்ள ஆயிரம் பேரைக் கேட்டோம். எல்லா மாவட்டங்களிலிருந்தும்  பொதுக்குழுவிற்கு வந்துள்ள தோழர்கள் பட்டியல்களைக் கொடுத்தார்கள். நாங்கள் கேட்டது ஆயிரம் பேரைத்தான், ஆனால், 1,706 பேர் பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆகவே, இரட்டிப்பு மடங்கு ஏறத்தாழ. நாங்களே எதிர்பார்க்கவில்லை, எங்களுக்கே ஒரு வியப்புக் குறிதான்!

அந்த அளவிற்கு, ஒரு பக்கம் அப்படிப் போனாலும், இன்னொரு பக்கம் சிறைச்சாலைக்கு வருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். போராட்டம் என்றால், காலையில் கைது செய்து, மாலையில் விடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு எங்கள் தோழர்கள் வரமாட்டார்கள். எந்தவிதமான விளைவுகளையும் ஏற்போம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மகிழ்ச்சியோடு வருவார்கள்.

கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல்…

சற்று நேரத்திற்கு முன்பு, ஒவ்வொருவரின் பெயர், வயது, முகவரிகளைக் குறிப்பிட்டு, கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல், பாலின வேற்றுமை இல்லாமல், பெண்களும் அதில் கலந்துகொள்ளக் கூடிய அளவிற்குப் பட்டியலை அளித்திருக்கிறார்கள்.

மறுபடியும் சொல்கிறேன், 16 வயதிலிருந்து 35 வயதுவரை இருக்கக்கூடிய இளைஞர்கள் ‘‘எப்பொழு தும், எதற்கும் தயார்’’ என்ற நிலையில், என்றைக்கும் திராவிடர் கழகத்தில், போராட்டக் களத்திற்குத் தயாராக இருக்கிறார்கள்.

போராட்ட உணர்வை இளைஞர்களுக்கு உருவாக்கவேண்டும்; கொள்கை உணர்வைச் சொல்லிக் கொடுக்கவேண்டும்!

எல்லோரும் தேர்தலை நோக்கி ஓடிக் கொண்டி ருக்கின்ற நேரத்தில்,  நாங்கள் போராட்டத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றோம். போராட்ட உணர்வை இளைஞர்களுக்கு உருவாக்கவேண்டும்; கொள்கை உணர்வைச் சொல்லிக் கொடுக்கவேண்டும். அவர்கள் எந்த வகையிலும் திசை மாறிச் செல்லக்கூடாது. நம்முடைய கொள்கைகள் நிலைநிறுத்தப்படவேண்டும். கொள்கைகளைப் பறிக்க இடங்கொடுக்கக் கூடாது என்பதற்காக விடுத்த வேண்டுகோளுக்கு, இளைஞர்கள் நல்ல அளவிற்குப் பதில் சொல்லியிருக்கிறார்கள்.

திராவிடர் கழகம் இளைஞர்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றது. பதவியைப்பற்றி கவலைப்படாமல். ஏனென்றால், தேர்தலுக்கு நிற்கின்ற இயக்கமல்ல, திராவிடர் கழகம். நான் அடிக்கடி சொல்வேன், எங்களிடத்தில் வந்தால், குறைந்தபட்சம் உள்ளாட்சித் தேர்தலில்கூட நிற்க முடியாது; போராட்டங்களை நடத்தி சிறைச்சாலைக்குச் செல்லுகின்ற நிலைதான் வரும். இதற்குத் தயாராக இருந்தால், வாருங்கள், போராட்டக் களத்திற்கு என்பேன்.

அப்படிப்பட்ட இளைஞர்கள், இன்றைக்குப் பக்குவப்பட்டு இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன்.

நம்முடைய நாட்டில், மதம் மாறலாம்,
ஜாதி மட்டுதான் மாற முடியாது!

செய்தியாளர்: கடந்த காலங்களில், மனோஜ் பாண்டியன், ஒ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் போன்றவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போனார்கள். அப்போதெல்லாம் கட்சித் தாவல் சட்டத்தை வலியுறுத்தாத நீங்கள், இப்போது வலியுறுத்துவதற்குக் காரணம் என்ன?

தமிழர் தலைவர்: கட்சி மாறுதல் வேறு; கட்சித் தாவல் வேறு. கட்சித் தாவல் என்றால், பதவிக்காக ஓடுவது. கொள்கை மாறுபாட்டால், கட்சியைவிட்டுச் செல்லலாம். எப்படி என்றால், மதம் மாறலாம், ஜாதி மட்டுதான் மாற முடியாது நம்முடைய நாட்டில். அந்த உரிமை உண்டு எல்லோருக்கும்.

கட்சித் தாவல் சட்டத்தில், சில குறைபாடுகள் இருக்கின்றன. அது என்னவென்றால், முதலில் அந்தச் சட்டத்தை வேகமாகக் கொண்டு வந்தார்கள். பிறகு, பெரும்பான்மை அளவிற்குக் கட்சித் தாவினால், அது சரி என்று சொல்கிறார்கள்.

இது எப்படி இருக்கிறது என்றால், ஒரு  தனி ஆள் கொலை செய்தால்  குற்றம். கும்பலாகச் சேர்ந்து கொலை செய்தால், பரவாயில்லை என்று சொல்வது போன்று இருக்கிறது.

ஆகவே, கட்சித் தாவல் சட்டத்தில், 10 ஆவது அட்ட வணை திருத்தப்பட்டு நடைமுறைக்கு வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கமே தவிர, தனிப்பட்ட ஒருவர், அந்தக் கட்சிக்குப் போகிறார், இந்தக் கட்சிக்குப் போகிறார் என்பதல்ல. அடிப்படையிலேயே அந்தச் சட்டத்தில் கோளாறு இருக்கிறது.

இடைத்தேர்தலே, ஒரு மினி பொதுத் தேர்தல் போன்று வரக்கூடிய ஆபத்துகள்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் திடீரென்று ராஜினாமா செய்வதால், திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் வருகிறது. இடைத்தேர்தலே, ஒரு மினி பொதுத் தேர்தல் போன்று வரக்கூடிய ஆபத்துகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற எதார்த்தத்தைச் சுட்டிக்காட்டி, அனுபவத்தைச் சுட்டிக்காட்டி, அந்தச் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் நீக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான், அதனைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம்.

திராவிடர் கழகம் அடிப்படையில் ஒரு பிரச்சார இயக்கம். கருத்தை உருவாக்குவோம், கிளர்ச்சி செய்வோம், அந்தக் கிளர்ச்சியில் வெற்றி பெறுவோம்.

இந்த அணுகுமுறைதான் மண்டல் கமிசனாக இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாக இருந்தாலும், 69 சதவிகித இட ஒதுக்கீடு போன்றவற்றி லும் அடிப்படையாக அமைந்தது. ஆகவே, அதனைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றோம்.

வடக்கே அடித்த காற்றுதான்
இப்போது இங்கே வந்திருக்கிறது
!

செய்தியாளர்: இதுபோன்ற கட்சித் தாவல், வட மாநிலங்களில் நடைபெற்றது. ஆனால், தமிழ்நாட்டில், இப்போதுதான் முதன்முதலாக நடைபெறுகிறது என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்; அவர்களை  பி.ஜே.பி. இயக்குகிறது என்று சந்தேகமாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: அதனுடைய விளைவுதான் இது. அதனுடைய தாக்கம்தான் இது. வடக்கே அடித்த காற்றுதான் இப்போது இங்கே வந்திருக்கிறது.

எனக்குப் பொதுவாழ்க்கை அனுபவமே
83 ஆண்டுகள்!

நான், எல்லா தேர்தல்களையும் பார்த்தவன். எனக்குப் பொதுவாழ்க்கை அனுபவமே 83 ஆண்டுகள். முதல் தேர்தலிலிருந்து, கடைசியாக நடைபெற்ற இந்தத் தேர்தல் வரையில் பார்த்துக் கொண்டிருப்பவன்.

இதுபோன்று ஒரு சம்பவம் நடைபெற்றது.

1952 இல் நடந்த சென்னை மாகாணத்தின் முதல் பொதுத்தேர்தலில், மொத்தம் இருந்த 375 இடங்களில் காங்கிரஸ் கட்சி 152 இடங்களை மட்டுமே பெற்று, ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையை (Majority) இழந்து நின்றது. கம்யூனிஸ்டுகள் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இணைந்து ‘அய்க்கிய ஜனநாயக முன்னணி’ (United Democratic Front) என்ற கூட்டணியை உருவாக்கி, தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரினர்.

அப்போது ஒன்றியத்தில் இருந்த காங்கிரஸ் அரசு, கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க விரும்பி யது. டில்லியின் ஆலோசனையின்படி, ஓய்வில் இருந்த சி. ராஜகோபாலாச்சாரியாரை (ராஜாஜி) சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் களம் இறக்கியது.

அன்றைய ஆளுநர் சிறீ பிரகாசா (Sri Prakasa), சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ராஜாஜியை ஆட்சி அமைக்க அழைத்தார் (பின்னர் அவர் மேலவை உறுப்பினராக – MLC ஆக நியமிக்கப்பட்டார்). கம்யூ னிஸ்ட் கூட்டணிக்கு அதிக ஆதரவு இருந்தபோதிலும், ஆளுநர் மூலமாக இந்த நகர்வு டில்லியின் விருப்பப்படி அரங்கேறியது.

ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க ராஜாஜிக்கு பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை களின் ஆதரவு தேவைப்பட்டது.

அப்போது வட ஆற்காடு பகுதியில் செல்வாக்குடன் விளங்கிய எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கரின் ‘காமன்வீல் கட்சி’ (Commonweal Party) காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ராஜாஜி தந்திரமாக மாணிக்கவேலு நாயக்கரின் ஆதரவைப் பெற்றார். அதற்குப் பிரதிபலனாக, அவருக்கு ராஜாஜியின் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சர் (Revenue Minister) பதவி வழங்கப்பட்டது.

கட்சித் தாவல் செய்தவர்களுக்குப் பதவி கொடுத்தது ராஜகோபாலாச்சாரியார், காங்கிரஸ் கட்சி!

முதன்முதலில், கட்சித் தாவல் செய்தவர்களுக்குப் பதவி கொடுத்தது ராஜகோபாலாச்சாரியார், காங்கிரஸ் கட்சி – பார்ப்பன முதலமைச்சராக இருந்த அவர்தான், இந்தியாவிற்கு இதுபோன்ற வழியைக் காட்டினார்.

அன்றைக்கு அதற்குப் பெயர் ‘குதிரை பேரம்’ அல்ல; ‘ஆயாராம் காயாராம்’ என்று வடநாட்டில் இருக்கின்ற பெயரை அப்போது சொன்னார்கள்.

அன்றைக்கே மக்கள் அதனை எதிர்த்தார்கள். ‘மக்கள் துரோகி மாணிக்கவேலுவே வெளியேறு’ என்று சொன்னார்கள்.

பிறகு, ஆச்சாரியார் ஆட்சி போய், காமராஜர் ஆட்சி வந்தது. உழைப்பாளர் கட்சி என்று சொல்லக்கூடிய எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியின் கட்சி, காமராஜர் ஆட்சியை முழுமையாக ஆதரிக்கிறோம் என்று சொன்னார். அதைத் தவிர, எம்.ஜி.ஆர். ஆட்சியாக இருந்தாலும், வேறு எந்த ஆட்சியாக இருந்தாலும், ‘தோசையைத் திருப்பிப் போட்டிருப்பார்களே’ தவிர, அறுதிப் பெரும்பான்மைக்காக இன்னொரு கட்சியை சேர்த்ததில்லை.

ஆனால், இப்பொழுது அதையெல்லாம் தாண்டி, அறுதிப் பெரும்பான்மையை நிரூபித்து, ஆட்சி அமைத்த பிறகும்கூட, பதவி வரும், உதவி வரும், இடைத்தேர்தல் வரும், அமைச்சர் பதவி வாங்கலாம், வாரியத் தலைவர் ஆகலாம் என்று இந்தக் கட்சியிலிருந்து அட்சிக் கட்சிக்குப் போகிறார்களே தவிர, வேறொன்றுமில்லை.

பொது ஒழுக்கச் சிதைவு!

ஏற்கெனவே இருந்த ஆட்சிக்கு எதிராகப் பிரச்சா ரம் செய்யும்போது, ஊழலை ஒழிப்போம் என்று சொன்னார்கள்; ஊழலின் உச்சக்கட்டமாக, சி.பி.அய். விசாரணையில், குற்றவாளிகள் போன்று ஆக்கப்பட்டவர்களையெல்லாம் வரவேற்பு கொடுத்து சேர்க்கிறோம் என்று சொல்வது பொது ஒழுக்கச் சிதைவு ஆகும்.

திராவிடர் கழகம், பொது ஒழுக்கச் சிதைவைப்பற்றிக் கவலைப்படுகின்ற இயக்கமாகும்.

இன்னொன்றை உங்களுக்கு மிக முக்கியமாகச் சொல்லவேண்டும். போதை ஒழிப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். மகளிருக்குப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளில், பாலியல் வன்முறைகளில் போதை யின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கிறது.

போதை ஒழிப்பு என்று கஞ்சா, அபின் போன்ற வற்றைத்தான் சொல்வார்கள். அதைவிட மோசமான போதையான ஒரு போதை ஒழிப்பைத் திராவிடர் கழகம் நடத்தவிருக்கிறது.

விரைவில் ஒரு பிரச்சாரத் திட்டத்தை
நாங்கள் நடத்தவிருக்கின்றோம்!

அது என்னவென்றால், கஞ்சா, அபின் போன்ற போதைகளும் ஒழியவேண்டும். அதைவிட ஆபத்தானது மத போதை, ஜாதி போதை, பதவி போதை, சினிமா போதை போன்ற போதைகள் ஒழிக்கப்படவேண்டும் என்பதற்காக விரைவில் ஒரு பிரச்சாரத் திட்டத்தை நாங்கள் நடத்தவிருக்கின்றோம்.

எனவே, போதை என்று சொல்லும்போது வெறும் கள், சாராயம், அபின், கஞ்சா என்று நினைக்காதீர்கள். இவையெல்லாம் தனிப்பட்ட மனிதனை மட்டும்தான் பாதிக்கும்; அல்லது தனிப்பட்ட குடும்பத்தை மட்டும்தான் பாதிக்கும். ஆனால்,  பதவி போதை, அதிகார போதைகள் சமுதாயத்தையே அழிக்கக் கூடிய அளவில் இருக்கின்றன; பொது ஒழுக்கத்தையே சிதைக்கக் கூடிய அளவில் இருக்கின்றன.

சமுதாய நோய் தீருவதற்கு
எங்களுடைய பங்களிப்பு!

ஆகவேதான், போதை ஒழிப்பு என்பதற்கு, விரிவான ஒரு பொருளைக் கொண்டு, அதற்குரிய வேலைத் திட்டத்தை இந்த ஆண்டு அறிவிக்கவிருக்கின்றோம். திராவிடர் கழகம் இந்தப் பணியில், இளைஞர்களை முன்னிலைப்படுத்தி நடத்தவிருக்கிறது.

எப்போது, நாட்டில் நோய் அதிகமாகிறதோ, அதற்குரிய மருந்து கண்டுபிடிக்கவேண்டும் என்பது அவசியமாகும். அந்த அடிப்படையில், சமுதாய நோய் தீருவதற்கு எங்களுடைய பங்களிப்பு என்னவோ, அதனை நாங்கள் தாராளமாகச் செய்வோம்.

‘ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசி’கள்!

செய்தியாளர்: இன்றைக்குக் காவல்துறையின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன? இன்றைக்கு நடைபெறவிருக்கும் திராவிடர் கழகக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிப்பட்ட இடத்தில், மேடை போடு வதற்கும் அலைகழிப்பு நடைபெற்று இருக்கிறதே, இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: இத்தகைய உரிமைகளையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு பறித்தார்கள் அன்றைய ஆளுங்கட்சியினர் என்று குற்றம் சொல்லி, இன்றைக்குப் புதிதாக ஆட்சிக்கு வந்தார்களோ, அவர்களே அதனைச் செய்யக் கூடாது.

காவல்துறையினர் பல நேரங்களில், ‘ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசி’களாக இருப்பார்கள். அவர்களுக்கு நடு நிலையில் நின்றே பழக்கமில்லை. அதனால்தான், பல பிரச்சினைகள் உருவாகின்றன.

காவல்துறை, முதலமைச்சரின் பொறுப்பில் இருக்கிறது. இங்கே நீங்கள் சொன்னதை, அப்படியே முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்பாக இந்த ஊடகச் சந்திப்பைப் பயன்படுத்துவோம்.

எய்ம்ஸ் – மேகதாது பிரச்சினைகள் குறித்து ஒன்றிய அரசிடம்
ஆளுநர் அர்லேகர் பேசுவாரா?

செய்தியாளர்: தமிழ்நாடு ஆளுநர், வைகை அணை விவகாரத்தில், அதனை தமிழ்நாடு அரசு சரி செய்யவில்லையானால், ஆளுநர் மாளிகை சரிப்படுத்தும் என்று சொல்லியிருக்கிறாரே, இதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

தமிழர் தலைவர்: அதுகுறித்து கண்டன தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். இதை ஆளுநர் என்ற தனி மனிதர் செய்கிறார் என்று நீங்கள் நினைக்கவேண்டாம். நேற்றைய அறிக்கையில்கூட சொல்லியிருக்கிறேன். ஆழம் பார்க்கிறார் அவர்.

பழைய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் – இவருக்கும் இப்போது போட்டி நடைபெறுகிறது. இத்தனைக்கும், இப்போது இருப்பவர் பொறுப்பு  ஆளுநர்தான். தமிழ்நாட்டிற்கு ‘ரெகுலர்’ ஆளுநர் அல்ல இவர்.

இவருக்கும், வைகைக்கும் எந்தவிதமான சம்பந்த மும் இல்லை. ஆளுநரின் நடவடிக்கைக்கு உடனடியாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். உடனே தமிழ்நாடு அரசும் விழிப்பு ணர்வு பெற்று, இது ஆளுநருடைய வேலை யல்ல என்று அமைச்சர்கள் சொன்னார்கள்.

மதுரைக்குச் சென்ற ஆளுநர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குச் சென்று, ஆய்வு செய்தி ருக்கிறார். அங்கே, இவ்வளவு காலமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லையே, அது குறித்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவாரா? அல்லது மேகதாது அணைக் கட்ட கருநாடக மாநில அரசு முயற்சி செய்கிறதே, அதனைத் தடுக்க முயற்சி எடுப்பாரா? என்பதையெல்லாம் தெளிவாக அறிக்கையில் சொல்லி யிருக்கிறேன்.

ஆளுநர்களை ஆட வைப்பவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான்!

ஆகவே, ஒன்றிய உள்துறை அமைச்சகம்,  எங்கெல்லாம் எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடக்கிறதோ, அங்கேயெல்லாம் திட்டமிட்டே இதுபோன்ற ஆளு நர்களை அனுப்புகிறார்கள். ஆளுநர் என்பவர், ‘பிளேக் பேக் சிங்கர்தான்’– இதுபோன்ற பொம்மலாட்டத்தில், பொம்மைப் போன்று ஆளுநர்களை ஆட வைப்பவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

பா.ஜ.க.வின் இன்னொரு முகமாக
த.வெ.க. இருக்கிறதா?

செய்தியாளர்: மகாத்மாகா காந்தி பெயரில் நடை பெற்று வந்த ஊரக வேலை வாய்ப்புத் திட்டமான  100 நாள் வேலைத் திட்டத்தை மாற்றி ஒன்றிய அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது. அதனைத் தமிழ்நாடும் நடைமுறைப்படுத்தி இருக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்களை, தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர தமிழ்நாடு த.வெ.க. அரசு முயற்சிக்கிறது. ஆகவே, பா.ஜ.க.வின் இன்னொரு முகமாக த.வெ.க. இருக்கிறதா?

தமிழர் தலைவர்: இதனை மறுக்க வேண்டியது தமிழ்நாடு அரசுதான். ஏனென்றால், ஒருபக்கம் ஒன்றிய அரசின் திட்டத்தை நாங்கள் செயல்படுத்தமாட்டோம் என்று சொல்வது; இன்னொரு பக்கத்தில், அந்தத் திட்டத்திற்கு நிதி போதவில்லை என்று சொல்வது.

இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களான, காங்கிரஸ்கா ரர்களுக்கு இதில் ஒரு சங்கடம் என்னவென்றால், ஆட்சியில் பங்கேற்று இருக்கிறார்கள். இடதுசாரிகள் இந்தத் திட்டத்தை எதிர்த்தாலும், ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அதேபோன்று மற்ற கட்சிகளும் இருக்கின்றன.

ஆகவேதான், இது அவர்களுக்குள்ளே ஏற்படுகின்ற ஒரு முரண்பாடாக இருக்கிறது.

காந்தியாரை ஒரு முறைதான் கோட்சே சுட்டார்; இப்போது ஒவ்வொரு முறையும் காந்தியாரை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

அதுமட்டுமல்ல, மாநில உரிமைகள் இதில் பறிக்கப்படுகிறது. மாநிலத்தினுடைய நிதியைப் பறிக்கிறார்கள். ஏற்கெனவே கொடுத்த நிதி விகிதம் வேறு; இப்போது சொல்லப்பட்டுள்ள நிதி விகிதம் வேறு.

ஏற்கெனவே மாநிலத்தில் நிதிப் பற்றாக்குறை; கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை. கடன் நிறைய இருக்கிறது என்று அவர்களே சொல்கிறார்கள். இந்த நிலையில், கடனை அதிகப்படுத்துவதற்கு இது இன்னொரு வழியே தவிர, வேறொன்றுமில்லை.

ஆகவேதான், காந்தியாரை ஒரு முறைதான் கோட்சே சுட்டார். ஆனால், இப்போது ஒவ்வொரு முறையும் காந்தியாரை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். காந்தியாருக்குப் பதில், இப்போது ராம்ஜி வந்திருக்கிறார். இதனைத் தொடக்கத்திலேயே எதிர்த்துப் போராட்டங்களை நடத்தியிருக்கின்றோம்.

‘‘நட்பில் சமரசம் உண்டு;
கொள்கையில் சமரசம் இல்லை!’’

இந்த மாநில அரசு செய்தாலும், வேறு எந்த மாநில அரசுகள் செய்தாலும் அதற்குத் திராவிடர் கழகம்  சார்பில் வன்மையானக் கண்டனத்தைத் தெரிவிப்போம்.

தீர்மானத்திலேயே அதனை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம், ‘‘நட்பில் சமரசம் உண்டு; கொள்கையில் சமரசம் இல்லை.’’

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *