இதோ அள்ளிப் பருகிட வேண்டிய அறிவு மாத்திரை!

நான் வீட்டில் இருக்கும்போது, ஒவ்வொரு நாளும் நாட்காட்டியில் உள்ள கடந்து விட்ட நாளின் தாளை அதிகாலை எழுந்தவுடன் கிழித்து, பக்கத்தில் உள்ள குப்பைக் கூடையில் போடுவது வழக்கம்.

ஆனால், நமது ‘பெரியார் நாட்காட்டி’யில் உள்ள முக்கிய நினைவூட்டும் குறிப்புகளைப் படித்து, அந்த மகத்தான ஆளுமைகளை, தியாக சீலர்களை, அறிவியல் அறிஞர்களை, சமூகநீதி – சுயமரியாதைப் போராளிகளைப்பற்றி சில மணித்துளிகள் மனதிற் கொண்டு, ‘வழிகாட்டும் கலங்கரை வெளிச்சங்கள் இவர்கள்’ என்று மகிழ்ச்சியும், நன்றியும் அரும்பும் கட்டமாக அச்சிறு தருணம் அமையும்!

அதன்கீழ் அறிவு ஆசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், தன்னலம் துறந்த தகைமைத் தாய் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் ஆகியோரின் அறிவு மொழிகளை ஒரு முறைக்கு இரண்டு முறை படிப்பேன்; அவை எனக்குப்
படித்தேன்!

அசை போட்டுச் சிந்தித்து அவற்றை வசை தாங்கும் தடுப்புக் கருவிகளாக்கிட பழகிக் கொள்வேன்  – மனதில்! காரணம், நான் தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவன் அல்லவா – அன்றும் – இன்றும் – என்றும்!

இன்றைய ஒருமொழி : அறிவு ஆசான் அறிவுப் பாடமாக நேற்றைய நாட்காட்டியில் போடப்பட்டிருந்த பொன் மொழி – சொற்கள் சில; ஆனால் காலத்திற்கும் கற்க வேண்டிய கண் திறப்புக் கருவிகள்.

தந்தை பெரியார் தம் இன்றைய பாடம் – நாட்காட்டி 1.7.2026இன் படி, நேற்று என்றாலும், என்றும் கற்றுப் பக்குவப்பட வேண்டிய – கவனச் சிதறலுக்குச் சற்றும் இடம் தரா அறிவுரைக் கொத்து!

‘‘கற்கின்ற கல்வியில்  நாலில் ஒருபங்கு தான் ‘வயிற்றுப் பிழைப்புக்கென்று’   இருக்க வேண்டும்.

மற்ற 4இல் 3 பகுதி

அறிவுக்காக,

ஆராய்ச்சிக்காக

என்று இருக்க வேண்டும்’’

– என்று நாம் கேட்டிராத ஒரு விகிதாச்சாரத்தை (Ratio) கூறியவர் உண்டா? கல்வியாளர்களுக்கு இப்படி ஒரு எளிய நடையில் அரிய அறிவுரையை இதற்கு முன் எவராவது நமக்குச் சொல்லிக் கொடுத்ததுண்டா?

‘வயிறு’ முக்கியம்தான்; அதற்காக ‘கொழுத்த’ ஊதியம் வாங்குபவராயினும், இப்படி தரம் பிரித்து, வாழ்வியலைப் பகுத்து தனக்காக வாழ்வது மட்டுமல்ல –

தன்னை மேலும் துலக்கித் துலக்கி, அறிவு – பகுத்தறிவு பலத்தை  – தனது சுதந்திர சிந்தனை – அதுதான் ‘ஆராய்ச்சி’ என்பதற்கான விரிந்த, செறிவான பொருள்தான் அதற்கு; வெறும் பட்டம் வாங்குவதல்ல.

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்த வரையில், சமூகத்தின் பொது நல விரும்பி; அவரது விரிந்த பார்வை மானுடத்திற்கே;  சிறுசிறு ஓடைகளின் நீர் போன்றதல்ல..

அது சிந்தனையின் ஆழ்கடல் என்றாலும், ‘தனிமனிதர்களின் ஒழுக்கச் சிதைவை’ அவர், என்றும் ஏற்றதுமில்லை.

சிலரைப் போல் ஒழுக்கச் சிதைவையே தனிப் பெருமை என்று ‘பீற்றிடும்’ அரைவேக்காட்டு தனத்தை ஆதரித்ததுமில்லை.

சட்ட மீறலைஅவரது தலைவர் காந்தியார் வற்புறுத்திய அந்த நேரத்தில்கூட, அதை ஏற்காமல், மாறுபட்ட கருத்தின் மூலம் தன்னை மீட்டுக் கொள்பவராக தனித்ததோர் தொண்டராகவே அவரிடம் பணியாற்றி மீண்டவர்!

வாக்குத் தவறாத வாழக்கை நெறிக்குரிய வல்லாளர்.

‘‘ஓ மனிதர்களே, மனிதர்களே  உங்கள் வயிற்றை மட்டும் தட்டிக் காட்டாதீர்கள்’’.

உங்களது இதயத்தை (முதலில்) மூளையை அடுத்து முன்னிறுத்தி, வளர்ச்சி அளவுகோலை வரையறுத்துக் கொள்ளுங்கள். ‘‘அதுவே சிறந்த வாழ்வு – சரியான வாழ்வு’’.

இது நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடம்.

தொடர்ந்து கற்க!

அதில் பரந்து நிற்க!!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *