‘‘இடித்து வழக்கு அறிய வல்லார்’’ நட்பு! (3)

நட்பின் இலக்கணத்தில், வள்ளுவர் மற்றொரு முக்கிய  கோணத்தில் ஓர் அருமையான கருத் தினை நமது சிந்தனைக்கு விருந்தாக்கிப் பரிமாறுகிறார்!

‘‘இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு.’’

(குறள் – 790)

‘‘எமக்கு இவர் இப்படிப்பட்ட நண்பர், யாம் இவருக்கு இத்தன்மையை உடையோம் என்று ஒருவர் தம்மைத் தாமே புகழ்ந்து பேசிக் கொண்டாலும், பிறரிடம் அவர் கொண்டிருக்கும் நட்பு சிறுமைப்பட்டுப் போய்விடும்.

நாட்டுபுறங்களில் ஒரு பழமொழி  கூறுவர்கள்  ‘இராஜாவாக இருப்பதைவிட இராஜாவின் மிக நெருங்கிய நண்பராக இருக்கும் வாய்ப்புதான்   முக்கியம்’ என்று தம்பட்டமடித்து, தலைக்கணம் ஏறி, தகாத வழியில், பணம் சேர்க்க, ‘இந்த ஓர் ஏணியை வைத்தே ஏறலாம்’ என்று ஏறியவர்கள் வீழ்ந்தால் – அதி உயரம் என்பதால், பலத்த காயங்களும், உயிருக்கே ஆபத்துவரும் என்ற உண்மை  –  அவர்களது தகுதிக்கு மீறிய பேராசை வாழ்க்கையால், எளிதில் எழ முடியாது ஆக்கி விடுவதுதான் மிச்சம்!

அடுத்து, ‘நட்பாராய்தல்’ அதிகாரத்தில் (முதல் குறள்)

‘‘நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு.’’ (குறள் – 791)

‘நட்பு உடையவர்களிடம் நட்பு செய்து கொண்ட பின், அதனை விட்டு விடுதல் ஒருவருக்கு இயலாது; ஆதலால், முன்கூட்டியே ஆராயாது நட்புச் செய்தல் என்பது கூடாது; அப்படிச் செய்தால், அதை விடக்கேடு பயப்பது வேறில்லை என்ற அறிவுரையை, அதற்கடுத்து வந்த குறள்மூலம், வலுவான கட்டுமான ‘கான்கிரீட் போட்டு’ எச்சரிக்கை மணியை பலமாக அடிக்கிறார்!

‘பலகாலும், பலமுறைகளிலும் ஆராய்ந்து, மீண்டும் ஆராய்ந்து பார்த்து நட்பு கொள்ளாதவனின் நட்பு, முடிவில் அவன் தானே சாவதற்குக் காரணமாக துன்பத்தை உண்டாக்கி விடும்’ என்று அந்த எச்சரிக்கை மணியை மீண்டும் பலமாக அடித்தும் தூங்கும் மட மக்களைத் தட்டியெழுப்பி உணர செய்கிறார்.

மற்றொரு ‘அருமையான கட்டுமானம்’ அவற்றின்மீது  – இதோ படிப்போமா?

‘‘அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய

வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.’’ (குறள் – 795)

‘முறையல்லாத செயல்களை ஒருவர் செய்யும்போது, அவர் அழும்படியாக அவருக்கு அறிவுரைகூறியும், மீறிச் செய்தால், அவர் மீண்டும் செய்யாதபடி, அவரைக் கண்டித்துரைத்தும், உயர்ந்தோர் கொள்ளும் வழக்கு இன்னதென்று உணர்ந்து, அதனை அறிவிக்க வல்லாருடைய நட்பை, ஆராய்ந்து அறிந்த பிறகே ஒருவன்  பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்பதே இக்குறளின் ஆழ்ந்த பொருள் உரை குறளார்

‘குறளார்’  என்று அழைக்கப்படும் அய்யா திருக்குறளார் வீ. முனிசாமி அவர்கள் நகைச்சுவைத் தேனில் குறளைக் குழைத்துத் தரும் பழக்கமுடையவர் – அவர்  கூறுவார்:

‘‘காலை7 மணிக்குத்தான் என்னைச் சந்தித்து என்னிடம் நட்பு கொண்டார்.

10 மணிக்கு ‘என் மேல் உசிரையே  வச்சிருக்கேன்’ என்று ஒருவர் சொல்லி – ராகம் போட்டு இழுத்து நிறுத்தி விட்டுத்தொடருவார். 12 மணிக்கு உன் உயிரையே வாங்கப் போகிறான் என்று அர்த்தம்’’ என்பார். ‘புரிந்துகொள்க’ என்பதற்கு இதைவிட விளக்கம் தேவையில்லை.

(வளரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *