திருப்பூர், ஜூலை 1- பள்ளி, கல்லூரி வாயில்களில் துண்டறிக்கைப் பிரச்சாரம் மற்றும் கிராமப்புறங்களில் மாணவர் சந்திப்புகள் நடத்தப்படும் என்று திருப்பூர் மாவட்ட மாணவர் கழகக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலந்துரையாடல் கூட்டம்
மாணவர் கழகம் மற்றும் இளைஞரணி அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கோடு தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டு மாவட்ட அளவில் நடைபெற்று வரும் கூட்டங்களின் ஒரு பகுதியாக திராவிட மாணவர் கழகத்தின் திருப்பூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், திருப்பூர் மாநகராட்சி எதிரில் உள்ள துளசிராவ் வீதி, பெரியார் புத்தக நிலையத்தில் 21.6.2026 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகரச் செயலாளர் பெ.செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். திருப்பூர் மாநகர துணைச் செயலாளர் எஸ்.கணேசன், பகுத்தறிவாளர் கழகத்தைச் சார்ந்த “நளினம்” நாகராசு, திருப்பூர் மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மு.கிருஷ்ணவேணி, திருப்பூர் பெரியார் புத்தக நிலையப் பொறுப்பாளர் கரு.மைனர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், இணைச் செயலாளர் மு.இளமாறன், துணைச் செயலாளர் தேவ.நர்மதா ஆகியோர் மாணவர் கழகத்தை வலுப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
பங்கேற்றோர்
நிகழ்வில், மாணவர்கள் ருத்ரன் மகாதேவ் வர்மன், ஹிதர் ரியாஸ், பெரியார் பிஞ்சுகள் து.த.தமிழினி, து.த.கமிழினி, காங்கேயம் நகர கழக தலைவர் பெ.மணிவேல், மத்தூர் கழக தோழர் கோ.அருணாசலம், பல்லடம் கழகத் தோழர் கோ.குணசேகரன், திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதி கழகச் செயலாளர் நா.சுதன்ராசு, கழகத் தோழர் திருப்பூர் “வானவில்” ச.துரைமுருகன், தனலட்சுமி துரைமுருகன் ஆகியோர் பங்கறேறு சிறப்பித்தனர்.
தீர்மானங்கள்
திருப்பூர் மாவட்ட கழக முன்னாள் துணைச் செயலாளர் ஜீவானந்தம் மறைவிற்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. திராவிட மாணவர் கழகத்தை வலுப்படுத்தும் வகையில் மாணவர் கழகம் சார்பில் பள்ளி, கல்லூரி வாயில்களில் துண்டறிக்கைப் பிரச்சாரம், கிராமப்புறங்களில் மாணவர் சந்திப்புகள் ஆகியவற்றை தொடர்ந்து நடத்துவது, “ஆயிரம் இளைஞர்கள் தேவை” என்ற கழகத் தலைவரின் கட்டளைக்கிணங்க திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் போராட்டக் கள வீரர்களின் பட்டியலை கழகத் தலைவரிடம் வழங்குவது, எதிர்வரும் ஜூலை 4ஆம் தேதியன்று சேலத்தில் நடைபெறவுள்ள திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பங்கேற்க செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் நிறைவாக கழகத் தோழர் வெள்ளக்கோயில் ச.மணிகண்டன் நன்றி கூறினார்.
