அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள்
தேர்வு முடிவுகளில் குளறுபடியா? முறைகேடா?
அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் தேர்வு முடிவுகளில் குளறுபடியா? முறைகேடா? தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, உரிய முறையான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி யிடங்களுக்கான தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக வந்திருக்கும் செய்திகள் அதிர்ச்சி யளிக்கின்றன.
ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவிப்பு வெளியிட்டிருந்தது!
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படா மல், பகுதி நேர விரிவுரையாளர்களைக் கொண்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வந்ததை தி.மு.க. ஆட்சி சரி செய்யும், நிரந்தரப் பேராசிரியர்களை நியமிக்கும் என்ற தேர்தல் வாக்குறுதிக்கேற்ப, கடந்த தி.மு.க. ஆட்சியில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக இருந்த 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி, 2025 டிசம்பர் 27 அன்று எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. 48 பாடங்களுக்கு நடந்த அத் தேர்வுகளை 42,064 பேர் எழுதியுள்ளனர். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதும் கொள் குறி வகை கேள்விகளுக்கு 150 மதிப்பெண்களும், பகுதி–2 இல் விரித்துக் கட்டுரையாக எழுதவேண்டியவற்றுக்கு 50 மதிப்பெண்களும், பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண்களும், நேர்காணலுக்கு 15 மதிப்பெண்களும் என ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சியில் நடந்த இத் தேர்வுகளின் முடிவுகளைப் ‘போர்க்கால அடிப்படையில்’ வெளியிடுவோம் என்று நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையில் த.வெ.க. அரசால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முறைகேடுகள் நடந்ததற்கான சந்தேகத்தையும் எழுப்புகின்றன!
அதன்படி எழுத்துத் தேர்வு முடிவுகள் இம்மாதம் (ஜூன்) 26-ஆம் தேதியன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், தேர்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியையும், முறைகேடுகள் நடந்ததற்கான சந்தேகத்தையும் எழுப்புகின்றன.
கொள்குறி வகை வினா(MCQ)க்களில் 100க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்ற பலருக்கு, விரிவான கட்டுரை வடிவ பதில்களை எழுதும் பகுதியில் ‘0’ (சுழியம் – Zero) மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொள்குறி வகை வினாக்களில் குறைந்த மதிப்பெண் பெற்ற பலர், விரிந்த வகை விடைகளில் 50-க்கு 49 வரை பெற்றுள்ளனர் என்பது மிக வெளிப்படையாக முறைகேடுகள் நடந்திருப்பதற்கான அறிகுறி!
அதே நேரம் பகுதி 2-இல் (விரிவான விடைகள்) ‘0’ (சுழியம்) மதிப்பெண்கள் பெற்றிருப்போரையும் தகுதி பெற்றவர்கள் (Qualified) என்று பட்டியல் சொல்கிறது.
பல ஆண்டுகாலமாகக் காத்திருக்கும் இளைஞர்களின்
கனவு நசுக்கப்பட்டுள்ளது!
பேராசிரியர் பணியிடங்களுக்குள்ள தகுதித் தேர்வுகளான நெட் தேர்வு, செட் தேர்வு எழுதித் தகுதி படைத்தவர்கள், முனைவர் பட்டம் முடித்தவர்கள் என்று பல ஆண்டுகாலமாகக் காத்திருக்கும் இளைஞர்களின் கனவு நசுக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த தேர்வுகளைக் கடந்த தி.மு.க. அரசு நடத்தியது. ஆனால், அதன் முடிவுகள் வெளியிடப்படும் போது ஆட்சி மாறிவிட்டது. இதில் நடந்திருக்கும் குளறுபடி என்ன? முறைகேடுகள் என்ன?
பகுதி-2 இல் திராவிட இயக்கத்தின் சாதனைகளைப் பற்றிய கேள்விகளை எழுதிய பலருக்கு 0 (சுழியம்) மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுகிறதே! எப்போது, யாரால் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன? ஏன் அவசர அவசரமாக வெளியிடுகிறோம் என்ற பெயரில், தவறான, முறைகேடான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியில் 2017-இல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுகளிலும் இதே போன்ற மோசடிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதே போன்ற சூழல் இப்போது கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் உதவிப் பேராசிரியர் பணியிடத் தேர்வுகளிலும் நடந்திருப்பது, இது தொடர் கதையா என்னும் கேள்வியை எழுப்புகிறது.
தமிழ்நாடு அரசின் உடனடியான நடவடிக்கையை நாடு எதிர்பார்க்கிறது!
முதலில், நடந்துள்ள பிரச்சினைக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். அடுத்து, இத் தேர்வு மதிப்பீடு ரத்து செய்யப்பட வேண்டும். தேவையானால், தேர்வே ரத்து செய்யப்பட வேண்டும். முறையான சிறப்பு விசாரணைக்கு ஆணையிடப்பட வேண்டும். கல்வி வளர்ச்சியின் வெற்றி, முறையானவர்களுக்கான வேலைவாய்ப்பிலும் இருக்கிறது. அதனைப் பறித்து, அவர்களின் நம்பிக்கையைத் தகர்க்கக் கூடாது. இந்தப் பணியில் ஈடுபட்டோர், தேர்வுத்தாள் திருத்தத்தில் ஒரு சார்பான நடவடிக்கைகள் எடுத்தோர், தவறிழைத்தோர் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். குற்றமிழைத்தவர்கள் யாராயினும் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் உடனடியான நடவடிக்கையை நாடு
எதிர்பார்க்கிறது.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
29.6.2026
