நான் சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்றைக்கு நான் மக்கள் மன்றத்தில் இருக்கிறேன்! திருவாரூரில் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்!

6 Min Read

சட்டமன்றத்தில், முதலமைச்சராக இருக்கக்கூடியவர்  “உங்க அப்பாவை எங்கே காணோம்?” என்று சொல்லி இருக்கிறார்; அப்பாவை அங்கே தேடாதீர்கள், மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன் – மக்கள் மனதில் நிலையாக இருக்கிறேன்!

திருவாரூர், ஜூன் 26– சட்டமன்றத்தில், முதலமைச்சராக இருக்கக்கூடியவர் “உங்க அப்பாவை எங்கே காணோம்?” என்று சொல்லி இருக்கிறார். அப்பாவை அங்கே தேடாதீர்கள். மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன். அது போதும். நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். மக்கள் தேடும் இடத்தில் நிச்சயமாக நான் முதல் ஆளாக நிற்பேன். நான் சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்றைக்கு நான் மக்கள் மன்றத்தில் இருக்கிறேன் என்றார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின அவர்கள் நேற்று (25.6.2026) திருவாரூர் – காட்டூரில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற தி.மு.கழகத்தின் விவசாயத் தொழிலாளர் அணித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான  உ.மதிவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்கள் கதிரவன் – மவுனிகா ஆகியோரை வாழ்த்தி உரை யாற்றினார்.

அதுபோது அவர் ஆற்றிய உரை வருமாறு:–

தி.மு. கழகத்தின் விவசாயத் தொழிலாளர் அணித் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் நம்முடைய அருமைச் சகோதரர் மதிவாணன் அவர்களின் இல்லத்தில், அவருடைய இளைய மகன் கதிரவன் – மவுனிகாவு ஆகியோருக்கும் திருமண விழாவை நடத்தி வைத்து, அதே நேரத்தில் மணக்கோலம் கொண்டிருக்கும் மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அதற்காக நான் அளவு கடந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த விழாவில் பங்கேற்கிறபோது, நான் பல்வேறு வகைகளில் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். ஒன்று, மதிவாணன் இல்லத்தில் நடைபெறும் மண விழா நிகழ்ச்சி; இரண்டாவது மகிழ்ச்சி என்ன என்றால், கலைஞர் வளர்ந்த மண்ணில் -இந்த திருவாரூர் மண்ணில் நடைபெறும் மணவிழா நிகழ்ச்சி.

தி.மு. கழகத்தில் படிப்படியாக வளர்ந்து வந்திருப்பவர் மதிவாணன்!

எனவே அப்படிப்பட்ட திருவாரூரில், அதுவும் தலைவர் பெயரால் அமைந்திருக்கும் இந்தக் கலைஞர் கோட்டத்தில், அதையும் தாண்டி சொல்ல வேண்டும் என்றால், இந்த அரங்கம் கலைஞரை ஈன்றெடுத்த அவருடைய அன்னை – என்னுடைய பாட்டி அஞ்சு கம் அம்மையார் பெயரில் அமைந்திருக்கும் இந்த அஞ்சுகம் அரங்கத்தில் நடைபெறும் மணவிழா. எனவே, நான் பல்வேறு கோணங்களில் இந்த விழாவில் பங்கேற்கிறபோது மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன்.

நீங்கள் எல்லாம்  தொலைக்காட்சியில் பார்த்தி ருப்பீர்கள். ஒரு காட்சி நடந்தது. அதைப்பற்றி எல்லாம் நம்முடைய முத்தரசன் அவர்களும் குறிப்பிட்டுச் சொன்னார். மற்றவர்களும் எடுத்துச் சொல்லி யிருக்கிறார்கள். நாட்டில் இன்றைக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம், மின்வெட்டு பிரச்சினை; இன்னொரு பக்கம், டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளுக்குக் குறித்த நேரத்தில் தண்ணீர் திறந்து விட முடியவில்லை என்ற சூழ்நிலை.

மேட்டூர் அணையை குறித்த நேரத்தில் திறந்தோம்!

நீங்கள் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும்… 2021-க்கு பிறகு 5 ஆண்டுகள் நாம் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் நாம் தவறாமல் மேட்டூர் அணையைக் குறித்த நேரத்தில், குறித்த நேரத்திற்கு முன்பேகூட திறந்து வைத்திருக்கிறோம். அதுதான் நம்முடைய ஆட்சி!

இதையெல்லாம் எடுத்துச் சொல்லி எதிர்க்கட்சியின் தலைவராக இருக்கும் நம்முடைய உதயநிதி அவர்கள் விளக்கமாக விரிவாக சட்டமன்றத்தில் பேசி, இருக்கும் சூழ்நிலைகளை எல்லாம் எடுத்துச் சொல்லி, அதன் மூலமாக முதலமைச்சர் அவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

ஆனால், சட்டமன்றத்தில், முதலமைச்சராக இருக்கக்கூடியவர் என்ன பதில் சொன்னார்?

“எங்கே காணோம்?” “உங்க அப்பாவைக் காணோம்” என்று சொல்லி இருக்கிறார்.

அப்பாவை அங்கே தேடாதீர்கள். மக்கள் மனதில் பதிந்திருக்கிறேன். அது போதும். நீங்கள் தேடும் இடத்தில் நான் இருக்க மாட்டேன். மக்கள் தேடும் இடத்தில் நிச்சயமாக நான் முதல் ஆளாக நிற்பேன். நான் சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்றைக்கு நான் மக்கள் மன்றத்தில் இருக்கிறேன் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்கிறேன்.

அதிக அளவில் ஆய்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளேன்!

நான் அரசியலுக்கு வந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. 60 ஆண்டுகளாக மக்களோடு மக்க ளாகத்தான் இருந்து கொண்டிருக்கிறேன். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நாட்டு மக்களுக்காகப் பணியாற்றக் கூடிய வர்கள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் .

நான் முதலமைச்சராக இருந்தபோது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நான்கு – அய்ந்து முறை சென்று ஆய்வு நடத்தி, இன்னும் சொல்கிறேன்… நான் முதல மைச்சராக இருந்த 5 ஆண்டுகளில், நான் நடத்தியது போன்று ஆய்வுக் கூட்டங்களை எந்த முதலமைச்சரும் நடத்தி இருக்க மாட்டார்கள். நான் பயணம் செய்தது போன்று, எந்த முதலமைச்சரும் பயணம் செய்திருக்க மாட்டார்கள். நான் கோட்டைக்குச் சென்றதுதான் அதிகமாக இருந்திருக்கும்.

இன்னும் கூட சொல்கிறேன், இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர் தேடிப் பார்க்க வேண்டும் என்றால், நான் அவரைக் கேட்டுக் கொள்கிறேன்… கோட்டையில்தான் கோப்புகள் எல்லாம் இருக்கின்றன. எனவே, அந்தக் கோப்புகளை எல்லாம் எடுத்துப் பாருங்கள். அதில் நான் கையெழுத்து போட்டிருப்பேன், ‘மு.க.ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்’ என்று. அதனால் நீங்கள் தேடிப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அந்தக் கையெழுத்தைப் பாருங்கள். அதில் தெரியும் உங்களுக்கு.

மகளிருக்கு கலைஞர் உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கையெழுத்துப் போட்டிருப்பேன். அங்கே ஸ்டாலின் இருப்பான். புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற கோப்பைப் பாருங்கள். அதிலும் மு.க. ஸ்டாலின் கையெழுத்துப் போட்டிருப்பான். தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆயிரம் ரூபாய். அதிலும் ஸ்டாலின் இருப்பான். எனவே நீங்கள் எங்கும் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. கோட்டையிலேயே இருக்கிறேன். நான்தான் ஆட்சியில் இருக்கிறேன்.

திட்டங்கள் உள்ளவரை
ஸ்டாலின்தான் முதலமைச்சர்!

இன்னும் சொல்கிறேன், அண்ணா ஒரு முறை சொன்னார். தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயரைச் சூட்டி இருக்கிறேன். எனக்கு வாழ்க்கையில் இது போதும். எனவே, நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சொல்லும் வரை, என்னுடைய பெயர் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்.

அதுபோன்று, மகளிர் உரிமைத் திட்டம் இருக்கும் வரைக்கும் இந்த ஸ்டாலின்தான் முதலமைச்சர். இவ்வாறு சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

இங்கே நம்முடைய மதிப்பிற்குரிய துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் ஆ. இராசா அவர்கள் பேசுகிறபோது, ‘‘கூட்டணி பற்றி எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். எப்போதுமே கலைஞர் அவர்கள் கூட்டணி அமைத்தால், அந்தக் கூட்டணியைப் பாதுகாப்பாக வைத்திருப்பார். அவர்களாகத்தான் செல்வார்களே தவிர, கலைஞர் இதுவரை விட்டது கிடையாது’’ என்று குறிப்பிட்டார். அதேபோன்றுதான் நானும் அவர் வழி நின்று, எந்தக் கூட்டணியாக இருந்தாலும் விடமாட்டேன். ஆனால் அவர்களாகச் சென்றால், நான் ஒன்றும் சொல்ல முடியாது. அதுதான் என்னுடைய கடமை.

கூட்டணி குறித்து விரைவில் பரிசீலனை!

ஆனால், இன்றைக்கு இருக்கும் மக்கள் எல்லாம், கூட்டணியே தேவை இல்லை என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அதையும் நாங்கள் விரைவில் பரிசீலிப்போம், பரிசீலிப்போம், பரிசீலிப்போம் என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்வாங்கு வாழ்ந்து, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கும், “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்குத் தொண்டர்களாய்” வாழுங்கள், வாழுங்கள், வாழுங்கள் என்று வாழ்த்துகிறேன்.

அதேநேரத்தில் மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, விடைபெறுகிறேன்.

இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *