உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு
நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குக!
திருவள்ளூர் வாயுக் கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குக என்றும், உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிரா மத்தில் அமைந்துள்ள கடல் உணவுகள் ஏற்றுமதி ஆலையில் கடந்த 21.6.2026 அன்று அமோனியா வாயு கசிந்து விபத்திற்குள்ளானது எல்லோர் நெஞ்சங்களையும் துயரத்தில் ஆழ்த்தியது. இதில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் நேற்று (24.6.2026) உயிரிழந்ததால், உயிரி ழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 60-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலை யில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழிலாளர் நலச் சட்டங்களையும் மீறி, சிறுமிகளைப் பணிக்கு அமர்த்தியும், சுற்றுச்சூழல் விதிகளையும், பாதுகாப்பு விதிகளையும் மீறியும் கவனக்குறைவாக இருந்த விபத்துக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
உயிரிழந்தோருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்!
இறந்தவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை மிகக் குறைவானது. பிற மாநிலத்தவர் ஆனாலும், இங்கு பணியாற்றி உயிரிழந்திருக்கிறார்கள். மனிதநேய அடிப்படையில் அவர்கள் குடும்பத்துக்கான நிவாரணத் தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்பதுடன், சட்டப்படியான இழப்பீடுகளை உடன் பெறவும் வகை செய்ய வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இப்படிப்பட்ட ஆபத்தான வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகள், நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் ஆலைகள் அனைத்தும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பின்பற்றுகின்றனவா என்று எவ்வித முறைகேடுகளுக்கும் இடமில்லாமல் கவனிக்கப்பட வேண்டும். உயிரிழந்தோருக்கு நமது ஆழ்ந்த இரங்கல்!
தலைவர், கி.வீரமணி
25.6.2026 திராவிடர் கழகம்
