நாம் எதிர்பார்க்கின்ற வெற்றி – தேர்தல் சிம்மாசனத்திலே அமர்வதல்ல, கோட்டையிலே உட்கார்வதல்ல!
சமுதாயத்தை எழுச்சியுள்ளதாக ஆக்குவது, சுயமரியாதை உள்ளதாக ஆக்குவது!
தமிழன் தமிழனாக வாழ்கிறான் என்ற நிலையை அவனுக்கு எடுத்துக் காட்டுவதுதான்
நாம் வெற்றி பெறவேண்டிய – சாதிக்க வேண்டிய தேர்தல்!
சமுதாயத்தை எழுச்சியுள்ளதாக ஆக்குவது, சுயமரியாதை உள்ளதாக ஆக்குவது!
தமிழன் தமிழனாக வாழ்கிறான் என்ற நிலையை அவனுக்கு எடுத்துக் காட்டுவதுதான்
நாம் வெற்றி பெறவேண்டிய – சாதிக்க வேண்டிய தேர்தல்!

‘‘நாம் எதிர்பார்க்கின்ற வெற்றி தேர்தல் சிம்மாசனத்திலே அமர்வதல்ல. கோட்டையிலே உட்கார்வதல்ல. இவற்றை யெல்லாம் விடப் பெரியது. சமுதாயத்தை எழுச்சியுள்ளதாக ஆக்குவது, சுயமரியாதை உள்ளதாக ஆக்குவது, தமிழன் தமிழனாக வாழ்கிறான் என்ற நிலையை அவனுக்கு எடுத்துக் காட்டுவதுதான் நாம் வெற்றி பெறவேண்டிய, சாதிக்க வேண்டிய தேர்தல் என்பதை மறந்து விடாமல் நீங்கள் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தி.மு.க. பொதுக்குழுவில் முத்தமிழறிஞர் கலைஞர் பேசியதைச் சுட்டிக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேர வைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்து, ஆட்சியில் அமராவிட்டாலும் – அது தேர்தல் அரசியலின் தனி விசித்திரம் தான் என்றாலும் – அதன் கொள்கை பலமும் – மக்களின் ஆதரவும் குறைந்துவிடவில்லை என்பதை, உணர்ச்சியை ஒதுக்கி, அறிவை அளவுகோலாக்கிக் கொண்டு பார்க்கும் முதிர்ச்சி அடைந்தோர் தெளிவுற அறிவார்கள்.
கெக்கலிகளும், கிண்டல்களும், மலிவான நையாண்டிகளும் தி.மு.க. மீது தூசியாக விழுந்தாலும், அடுத்த ஒரு காற்று வரும்போது அது, தானே பறந்து விடும். ஏகடியம் பேசியவர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகும் பரிதாபமும் தொடரக்கூடும். ஆட்சி வெறும் காட்சியாக மாறக்கூடாது.
எதிர்க்கட்சி என்ற ஒரு கூர்மையான ஜனநாயகக் கருவியை மக்கள் அளிக்கத் தவறவில்லை!
தேர்தல் தோல்வி வேறு; கொள்கைத் தோல்வி வேறு. தி.மு.க.வுக்கு ஏற்பட்டது தேர்தல் தோல்வி; ஆட்சி அதற்குக் கிட்டாமற் போயிருக்கலாம்; ஆனால், அதை விட அதற்கு, ஆளுங்கட்சிக்கு அங்குசமும், கடிவாளமும் போடும் எதிர்க்கட்சி என்ற ஒரு கூர்மையான ஜனநாயகக் கருவியை மக்கள் அளிக்கத் தவறவில்லை என்பதை ஆள்வோர் மறந்துவிடக் கூடாது.
வினைத் திட்பத்தின் தன் வலிமையை விட மாற்றார் வலிமையை அறிந்து நடப்பதே களத்தில் எதிர் எதிரே சந்திக்கும் ஆளும் அணி – எதிர் அணி ஆகிய இரண்டு அணியினரும் ஆழமாகச் சிந்திக்கத்தக்கது.
முத்தமிழறிஞர் கலைஞரின்
வழிகாட்டும் உரை!
வழிகாட்டும் உரை!
2.6.2008 இல், தி.மு.க. பொதுக்குழுவில் தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் ஆற்றிய உரையை அவரது 90 ஆம் ஆண்டு பிறந்த நாளில், ‘விடுதலை’ வெளியிட்ட மலரில் பதிய வைத்துள்ளது. அப் பகுதியை, தி.மு.க. சகோதரர்கள் ஊன்றிப் படித்து, உற்சாகத்தோடு உழைக்க – கடமையாற்ற – களம் காண முயலும் இந்த சுயபரிசோதனை காலகட்டத்தில், வழிகாட்டும் கலங்கரை வெளிச்சமாக கலைஞர் அவர்களது கருத்துகள் தெள்ளிய உரையாக அமைந்துள்ளது. அதனைப் படித்துச் செயல்படுவது காலத்தின் கட்டாயம். தி.மு.க. பொறுப்பாளர்கள், தோழர்கள் ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டும்.
தி.மு.க.வின் உண்மையான வெற்றி எது?
‘‘சமுதாயத்திலே நாம் பெறுகின்ற வெற்றிதான் திமுகவின் உண்மையான வெற்றி.
பேராசிரியர் இங்கே எடுத்துக் காட்டியதைப் போல், வாக்குகளைப் பெறுவது – வெற்றிகளைப் பெறுவது – அமைச்சர்கள் பொறுப்பை ஏற்பது – ஆட்சியிலே அமர்வது இவைகளுக்காக மாத்திரம் திமுகழகம் இல்லை. நான் இன்றைக்கு கொடுத்துள்ள பிறந்த நாள் செய்தியைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். அதில் நம்முடைய சாதனைகளில் எதை முன்னிலைப்படுத்திச் சொல்லியிருக்கிறேன். அனைத்துச் ஜாதி மக்களும் அர்ச்சகராக சட்டம் இயற்றியது, திமுகழக அரசு பெரியாருடைய நெஞ்சில் இருந்த முள்ளை எடுத்தோம். சமுதாயத் துறையில் அது மகத்தான வெற்றியைப் பெற்றதற்கு அடையாளம் என்றுதான் சொல்லியிருக்கிறேன். ஆகவே, சமுதாயத்திலே நாம் பெறுகின்ற வெற்றிதான் திமுகழகத்துக்குத் தேவையான உண்மையான வெற்றி என்பதை மறந்துவிடக்கூடாது.
நான் மாறுபடும் இடம் எது?
நம்முடைய அரசியல் இயக்கங்கள் – தமிழ கத்திலே எத்தனை இருந்தாலும் கூட, நாம் அவற்றிலி ருந்து மாறுபட்டிருப்பதற்கு ஒரேயொரு காரணம், அவர்கள் ஆட்சியை எப்படி நடத்துவது என்பது பற்றி யோசிக்கிறார்கள். நாம் சமுதாயத்தை எப்படி வளர்ப்பது என்பதைப் பற்றி யோசிக்கிறோம். நாம் ஜாதிகளை எப்படி ஒழிப்பது என்று சிந்திக்கிறோம். அவர்கள் ஜாதிகளை எப்படி வளர்ப்பது என்று நினைக்கிறார்கள். இன்னமும் ஜாதிகளின் ஆக்கத்தால், ஆதரவால், கட்சிகளை நடத்தி விட முடியுமென்று எண்ணி, கட்சித் தலைமைக்குப் போட்டியிடுகிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். நீங்களும் அறிவீர்கள். ஆனால், உங்களால் வெளியே சொல்ல முடியாது. சொல்லாததற்கு காரணம் எனக்குத் தெரியும். அப்படிப்பட்ட நிலைமையிலேதான் இன்றைக்கு தமிழ்நாட்டிலே அரசியல் இருக்கிறது. எப்படி உருவான அரசியல் இது? எப்படி உருவான இயக்கம் இது? இந்த இயக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் துணை நின்று காக்க முற்பட்ட நேரத்திலும் சரி, இந்த இயக்கம் தொடங்கிய போதும் சரி, எத்தகைய எண்ணத்தோடு தொடங்கப்பட்டது என்பதை தயவு செய்து எண்ணிப் பாருங்கள். பழைய ஏடுகளை எடுத்துப் படித்துப் பாருங்கள். பழைய புத்தகங்களை வாங்கிப் படித்துப் பாருங்கள். பழங்காலத்து நண்பர்கள் சில பேர் இன்னமும் உயிரோடு இருப்பார்கள். அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். இந்த இயக்கம் சமுதாயத்திலே நமக்கு ஏற்பட்ட இழிவுகளைத் துடைத்துக் கொள்ள – ஏற்றம் பெற – நாமும் மனிதர்கள்தான் என்கிற சுயமரியாதை உணர்வு கொள்ள – பக்தி என்ற பெயரால் – பஞ்சாங்கம் என்ற பெயரால் – மூட நம்பிக்கை என்கின்ற பெயரால் – ஆண்டவன், ஆலயம் என்கின்ற பெயரால் – குருட்டு நம்பிக்கை என்கிற பெயரால் – இந்தச் சமுதாயத்திற்கு எந்த காலத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டு விடக் கூடாது என்பதைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தான் இந்த ஆட்சி அமைந்த காலத்திலிருந்து இதுவரையில் எத்தனையோ எதிர்ப்புகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அத்தனையையும் பொருட் படுத்தாமல், அனைத்து எதிர்ப்புகளுக்கும் ஈடு கொடுத்து – பெண்களுக்காகப் பாடுபடுகின்ற நேரத்திலும் சரி – மகளிர் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த நேரத்திலும் சரி – அல்லது மூட நம்பிக்கைகளை வீழ்த்த வேண்டுமென்பதற்காகப் பேசுகிற நேரத்திலும் சரி – எழுதுகிற நேரத்திலும் சரி – அவற்றைக் கலைக் காட்சிகளாகத் தெரிவிக்கின்ற நேரத்திலும் சரி – எல்லா நேரத்திலும் கொள்கையை விட்டு நாம் அகன்றதில்லை. இம்மியும் நழுவிய தில்லை.
நமக்கு இருக்கின்ற ஒரே பெருமை – ஒரே செல்வாக்கு – ஒரே திறமை – ஒரே சக்தி அதுதான். அதை விட்டு நாம் விலகாத வரை நம்மை யாரும் வீழ்த்த முடியாது என்ற நம்பிக்கையை நான் பெறுகிறேன். இன்றைக்கு இந்த நாற்காலி இருக்கலாம் – கோட்டையிலே நமக்காகப் போடப்படுகின்ற சிம்மாசனம் ஓராண்டு காலம், இரண்டாண்டு காலம் இருக்கலாம். எப்போதும் நிரந்தரமல்ல. அவற்றிற்காகவே இந்த இயக்கம் தொடங்கப்பட்டதல்ல. இந்த இயக்கத்திலே இருக்கின்ற நாம் சுயமரியாதை உணர்வோடு வாழ வேண்டும்.
நாம் எதிர்பார்க்கின்ற தேர்தல் சிம்மாசனத்திலே அமர்வதல்ல. கோட்டையிலே உட்கார்வதல்ல. இவற்றையெல்லாம் விடப் பெரியது. சமுதாயத்தை எழுச்சியுள்ளதாக ஆக்குவது, சுயமரியாதை உள்ளதாக ஆக்குவது, தமிழன் தமிழனாக வாழ்கிறான் என்ற நிலையை அவனுக்கு எடுத்துக் காட்டுவதுதான் நாம் வெற்றி பெறவேண்டிய, சாதிக்க வேண்டிய தேர்தல் என்பதை மறந்து விடாமல் நீங்கள் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.’’
அறிஞர் அண்ணாவின் அருமையான எளிய கொள்கை விளக்கத்தினையும் இந்நேரத்தில் கவனப்படுத்திக் கொள்வது முக்கியம் என்பதைத் தாய்க்கழகம் உரிமை உறவோடு நினைவூட்டுகிறது.
‘‘பதவி என்பது மேல் துண்டு; கொள்கை, லட்சியம் என்பது வேட்டி போன்றது!’’
பல கட்சியினருக்கு இப்போது வேட்டி காணாமற் போனதே அவர்களுக்குத் தெரியாத பரிதாபமே தமிழ்நாட்டு அரசியல்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
24.6.2026
