
சென்னை, ஜூன் 24- சென்னையில் அதிக அளவில் குடிநீரை பயன்படுத்தக்கூடிய ஒரு லட்சம் கட்டடங்களை கண்டறிந்து, அவற்றில் அதிநவீன ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை சீரமைக்கவும், தண்ணீர் வீணாவதை துல்லியமாக கண்காணிக்கவும் கொண்டு வரப்பட் டுள்ளதுதான் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம். இந்த திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு 273.60 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது.
இந்த அதிநவீன ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை பொருத்தி, அவற்றை முழுமையாக இயக்குவதற்காக ஜே.டபிள்யூ.அய்.எல். இன்ப்ரோ லிமிடெட் என்ற ஒப்பந்த நிறுவனம் தனியாக நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம்தான் இப்போது அதிரடியாக களமிறங்கி உள்ளது.
முன்னதாக, சென்னை மக்கள் எந்தெந்த நேரங்களில் குடிநீரை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள், அவர்களின் இப்போதைய நீரின் பயன்பாட்டு அளவு என்ன, மற்றும் அதற்கான கட்டணங்களை எப்படி வசூலிப்பது என்பது குறித்த விரிவான ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளது.
தரவுகள் சேகரித்து ஆய்வு
அதுமட்டுமல்ல, இந்த ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் உண்மை யான கட்டுமானப் பணிகளை தொடங்குவதற்கு முன்னதாக, பொதுமக்களின் தரவுகளை சேகரித்து ஆய்வு செய்யும் பணிகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள் மத்தியில் இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து, யாரும் பயமோ, குழப்பமோ அடையாமல் இருக்க, திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பாகவே மக்களிடையே விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத் தையும் செயல்படுத்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
துல்லியமாகக் கண்காணிப்படும்!
பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்தும் நேரத்தை மிகத் துல்லியமாகக் கண்காணிப்பதற்கும், ஒட்டுமொத்த நகரின் நீர் பயன் பாட்டை சீரமைத்து சமமாக விநியோகிப்பதற்கும் சென்னை குடிநீர் வாரியம் இப்படியொரு முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் இந்த திட்டத்தின் கீழ், சென்னை நகரின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள சுமார் 2,500 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பெரிய கட்டடங்களும் முழுமையாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை யில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக சுமார் ஒரு லட்சம் கட்டடங்களில் ஸ்மார்ட் தண்ணீர் மீட்டர்கள் விரைவில் பொருத்தப்படும். இதன் மூலம் ஒவ்வொரு கட்டடமும் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகிறது என்பதை நேரடியாக கண்காணிக்க முடியும்.
அதிகமாகத் தண்ணீர் பயன் படுத்தும் இடங்களில் இந்த மீட்டர்கள் பொருத் தப்படும். கடைகள், அலுவலகங்கள், தொழிற் சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் இவை முதலில் பொருத்தப் படும். 2,500 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய வீடுகளிலும் இந்த மீட்டர்கள் பொருத்தப்படும்.
இந்தத் திட்டம் 2024-2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் விரிவான ஆய்வு, நல்ல தரமான மீட்டர்களுக்கு காத்திருப்பு, ஒப்பந்த வேலைகள் போன்ற காரணங்களால் சற்று தாமதமானது. தற்போது சென்னை நகரில் 17 லட்சம் பேருக்கு மெட்ரோ வாட்டர் வழங்கப்படுகிறது. இதுவரை 22,000 கட்டடங்களில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு விட்டன. இதில் எவ்வளவு தண்ணீர் பயன்படுத்தினோம் என்பதை சரியாக கணக்கிட்டு, அதற்கு மட்டுமே மாதாந்திர கட்டணம் வரும்.
இந்த திட்டம் ‘ஹைப்ரிட் அனுயிட்டி’ மாடல் முறையில் செயல்படுத்தப்படும். இதில் அரசாங்கம் ஒரு பங்கு பணம் கொடுக்கும்.
ஒப்பந்ததாரர் மீட்டர்களை பொருத்துவார், ரீடிங் எடுப்பார், 15 ஆண்டுகள் பராமரிப்பார். இது சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் முக்கிய பகுதியாகும். தண்ணீரை திறமையாக பயன் படுத்துவதும், வீணாகும் தண்ணீரை குறைப்பதும் இதன் நோக்கம்,’’ என்றனர்.
