சமூக வலை தளங்களில் விமர்சனம்!
சென்னை, மே 22– ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சி என்ற நிலையை அடைந்தது. தொடர்ந்து,
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த இடதுசாரிகள், வி.சி.க., அய்.யூ.எம்.எல். ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையைப் பெற்று கடந்த 10 ஆம் தேதி முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது முதலே அந்தக் கட்சிக்கு ஆதரவாகச் சில நிறு வனங்கள் சமூக வலைதளங்களில் தீவி ரமாக இயங்கிவருகின்றன. தேர்த லுக்கு முன்பாகத் தி.மு.க. மீது அவதூறுகளைப் பரப்புவதில் மட்டுமே அதீத கவனம் செலுத்தி இயங்கி வந்தார்கள்.
போலிக் கணக்குகளை உருவாக்கி…
பெரும்பாலும் அரசுக்கு எதிரான பொய்களைப் பரப்பி வந்தனர். அவை மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் தேர்தல் முடிவுகளில் கணிசமான அளவில் எதிரொலித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் முடிந்து த.வெ.க. அரசு அமைந்த பிறகு இன்னமும் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளனர் தவெகவின் விர்சுவல் வாரியர்ஸ். இப்போது மற்ற கட்சிகள் மீது அவதூறு பரப்புவதைத் குறைத்துக் கொண்டு, முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் தவெக அரசுக்கும் ஆதரவான கட்டுக்கதைகளைப் பரப்பும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நேரடியாக தவெக நிர்வாகிகள் இதைச் செய்யாமல், போலிக் கணக்குகளை உருவாக்கி இதைச் செயல்படுத்தி வருகிறார்கள்.
பொய்யான தகவலைச் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்!
குறிப்பாக, தவெக பொதுத் தொகுதிகளில் அதிக அளவு தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளது, அமைச்சர் கீர்த்தனா தான் முதல் பெண் அமைச்சர், த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் ஏழைகள் என ஏராளமான பொய்களைப் பரப்புவதில் அதிதீவிரமாகச் செயல்பட்டுவருகிறார்கள். தமிழில் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளிலும் பொய்களைப் பரப்பி வருகிறார்கள். முதலமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகு தனது இருக்கையில் வெள்ளை நிறத் துண்டை விரித்து அமர்ந்திருந்தார். ஆனால், அதை நீக்கச் சொல்லிச் சமூக வலைதளங்களில் கோரிக்கை வந்ததாகவும், அந்த கோரிக்கையை ஏற்று அதை ஜோசப் விஜய் நீக்கியதாகவும், வேறு எந்த முதலமைச்சரும் இதைச் செய்யவில்லை எனவும் பொய்யான தகவலைச் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.
ஆனால், கடந்த காலங்களில் எந்த முதலமைச்சரும் தனது இருக்கையில் துண்டு விரித்து அமர்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் ஆமை முட்டைகளைப் பாதுகாத்து குஞ்சுகள் பொறித்த பிறகு கடலில் விடுவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு. ஆனால், இந்த ஆண்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் பொறுப்பேற்ற பிறகுதான் இது நடைபெறுவது போலச் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலைப் பரப்பிவருகிறார்கள். இது தமிழில் மட்டுமல்லாமல், பல்வேறு இந்திய மொழிகளிலும் இந்தப் பொய்யைப் பரப்பிவருகிறார்கள். பெண்களின் பாது காப்புக்காக பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள அவசரகால பட்டன்களைத் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தற்போதுதான் பொருத்தியுள்ளார்கள் என்று பொய்யைப் பரப்பி வருகிறார்கள். ஆனால், அவை சில ஆண்டுகளுக்கு முன்பே பொருத்தப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
அனைத்துப் பொய்களையும் உண்மை என நம்பிவிடும் ஆபத்து உள்ளது!
இவை மட்டுமல்லாமல் ஏராளமான பொய்களை பரப்பி முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நல்லாட்சி என்ற போலி பிம்பத்தை இந்திய அளவில் கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் பொய்களைப் பார்க்கும் இளைஞர்கள் அப்படியே நம்பிவிடவும் செய்கிறார்கள். கடந்த காலங்களில் அரசியலையும் சமூக நிகழ்வு களையும் கவனிக்காதவர்களுக்கு விஜய்யில் இருந்துதான் அரசியல் தொடங்குகிறது. அவர்கள் சமூக வலைதளங்களில் ஜோசப் விஜய் என்ற பிம்பத்தைப் பற்றிப் பரப்பப்படும் அனைத்துப் பொய்களையும் உண்மை என நம்பிவிடும் ஆபத்து உள்ளது. அந்தச் செய்தி உண்மையா, பொய்யா என ஆராய்ந்து பகுத்தறிவது இல்லை எனச் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.
த.வெ.க. ஆட்சியில் மற்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கிறதோ இல்லையோ சமூக வலை தளங்களில் தவெகவினரால் பரப்பப்படும் பொய்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வதற்கான பேக்ட் செக்கிங் துறையில் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து
வருகிறார்கள்.
