இன்று வெளிவந்த ‘துக்ளக்’ இதழில் பக்கம் 3 இல் ‘எச்சரிக்கை அழிச்சாட்டியத்தில் இருந்து மாற்றம்’ என்ற தலைப்பில் அரை தலையங்கம் தீட்டி உள்ளது. என்ன சொல்லுகிறது அந்த தலையங்கம்?
‘‘இதோ, ஸ்டாலினை போல விஜய் இதுவரை
வடக்கு Vs தெற்கு பிரிவினை அரசியல் செய்யவில்லை, நிதி தரவில்லை என்று புளுகவில்லை, எதற்கெடுத்தாலும் மத்திய அரசை சாடவில்லை, கொள்கையளவில் பாஜகவை எதிர்த்தாலும், அதில் மோடி துவேஷம் இல்லை. ஆரம்பத்தில் பதவி ஏற்பதில் சிக்கல் இருந்த போதும், ஆளுநரை விஜய் பழிக்கவில்லை; பிறகு பதவிப் பிரமாணம் எடுத்த முறையில் தொடங்கி, சென்ற வாரம் சட்டசபை தொடர் தொடக்கம் வரை தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம், வந்தே மாதரம், ஆளுநர் உரை என்று அனைத்து விஷயங்களையும் கலந்து பேசி, உராய்வு இல்லாமல் டி.வி.கே. அரசின் சுமூகமான செயல்பாடு, ஆக்கபூர்வமான மாற்றம் காங்கிரசை திருப்திப்படுத்த அது விரும்பியபடி, மத்திய அரசை சாடி மோடியை விரித்து குட்டிச்சுவர் ஆன ஸ்டாலினுக்கு, அதே காங்கிரசை அமைச்சரவையில் வைத்துக்கொண்டு மத்திய அரசுடன் நல்லுறவு நாடும் விஜய் அரசின் செயல்பாடு ஒரு பாடம்’’.
இவ்வாறு பூணூல் புத்தியோடு தனக்கே உரித்தான மித்திர பேத அரசியல், சேற்று மய்யால் கிறுக்கித் தள்ளி உள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிக பிரசங்கித்தனமான ஆட்டம் பாட்டத்திற்கு எல்லாம் திமுக சலாம் போட்டு இருக்க வேண்டும் என்று குருமூர்த்தி அய்யர்வாள் எழுதுவதன் பின்னணி என்ன? ‘வந்தே மாதர’த்தை ஏற்றுக் கொண்டு இருக்க வேண்டுமா? தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி இருக்க வேண்டுமா? தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியை தராமல் அட்டூழியம் செய்த மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்திருக்க வேண்டுமா? தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யப் படுவதை எல்லாம் பாராட்டுப் பத்திரமாக வாசிக்கும் ‘துக்ளக்’ புத்தி பற்றி தமிழ்நாட்டு மக்கள் தமிழர்கள் நன்கு அறிந்தவர்கள் தானே –
இன்றைய ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, திமுக அரசு போல நடந்து கொள்ளவில்லை என்பது பாராட்டா அல்லது கேலியும் கிண்டலுமா? எந்த அளவுக்கு துக்ளக் குருமூர்த்தி அய்யர்வாள் பேனாவை ஓட்டியிருக்கிறார் தெரியுமா?
மோடியை வெறுத்து குட்டிச்சுவர் ஆன ஸ்டாலின் என்று கழுதை படங்களை அடிக்கடி அட்டை படத்தில் போடும் கோவேறு குருமூர்த்தி கத்துகிறார். எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது – அவ்வளவுதான்!
