சென்னை, ஜூன் 22: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை தொய்வின்றி தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று தற்போதைய தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டு இருப்பதாவது:
ஆர்ப்பாட்டம்
“இலங்கை தமிழர்களின் துயர் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையுலகில் எழுதிவந்த ஆர்.கே.ராதாகிருஷ்ணன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழரின் வாழ்க்கை குறித்து ‘முகமற்றவர்கள்’ எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதனை பார்த்தேன்; நெகிழ்ந்தேன். இலங்கை தமிழர்களுக்கான இந்திய குடியுரிமையை தெளிவாக வலியுறுத்தும் இந்த ஆவணப் படத்தை உணர்வுடனும், பொறுப்புடனும் இயக்கிய ஆர்.கேவுக்கு பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்: திமுக ஆட்சியில், முகாம் வாழ் தமிழர்கள் நலன் காக்க ‘மறுவாழ்வு முகாம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும், 7 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய வீடுகள், மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமைக்கான முயற்சிகள்: இலங்கை தமிழர்களின் வாழ் வுரிமைக்கான நீண்டகால தீர்வு குறித்து நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவ தாகவும், இலங்கை தமிழர்களுக்கான இந்திய குடியுரிமை குறித்த சட் டப்பூர்வ உரிமைகளை வலியுறுத்தி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், தான் முதல்வராக இருந்தபோது 11-1-2026 அன்று மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக ஆட்சியில் சட்ட உதவிகள் மூலம் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் 10 பேர் நீதிமன்ற தீர்ப்பினை பெற்று, இந்திய குடிமக்களாகி, கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
குடியுரிமை பெற தகுதி உள்ள ஏறத்தாழ 25 ஆயிரம் இலங்கை தமிழர்களுக்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளு மன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவார்கள் என உறுதியளித்த மு.க.ஸ்டாலின், தற்போதைய தவெக அரசும் ‘திராவிட மாடல்’ அரசு மேற்கொண்ட திட்டங்களை தொய்வின்றி தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
