
மருத்துவர் செந்தில்குமார்
அரசு இயன்முறை மருத்துவர்,
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தேனி
மெயில்: [email protected]
இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய், உடற்பயிற்சி குறைவு, நீண்ட நேர அலுவலகப் பணி, மனஅழுத்தம் போன்ற காரணங்களால் தோள்பட்டை தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் மிகவும் வேதனை அளிக்கும் நோய்களில் ஒன்று “உறைந்த தோள்பட்டை” (Frozen Shoulder) அல்லது மருத்துவ மொழியில் “Adhesive Capsulitis” ஆகும்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தோள்பட்டையை மேலே உயர்த்துவதற்கும், பின்னால் கொண்டு செல்வதற்கும், தலைமுடி வாருவதற்கும், குளிப்பதற்கும், ஆடை அணிவதற்கும் கூட சிரமப்படுவார்கள். சில நேரங்களில் இரவில் தூங்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும்.
பொதுவாக 40 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்களிடம் இந்த நோய் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக நீரிழிவு மருத்துவப் பயனாளிகள், தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் பெண்களுக்கு இந்த நோய் அதிகம் ஏற்படுகிறது.
உறைந்த தோள்பட்டை என்றால் என்ன?
நமது தோள்மூட்டு ஒரு மெல்லிய மூட்டு உறையால் (Joint Capsule) சூழப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இந்த உறை தடிமனாகி, அழற்சி ஏற்பட்டு, இறுகத் தொடங்குகிறது. இதனால் தோள்மூட்டின் இயக்கம் குறைந்து, கடுமையான வலியும் தோன்றுகிறது. இந்த நிலையே “உறைந்த தோள்பட்டை” என்று அழைக்கப்படுகிறது.
யாருக்கு அதிக ஆபத்து?
பின்வரும் நபர்களுக்கு உறைந்த தோள்பட்டை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்:
- நீரிழிவு மருத்துவப் பயனாளிகள்:நீரிழிவு மருத்துவப் பயனாளிகளுக்கு இந்த நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம். குறிப்பாக சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்களுக்கு மூட்டு திசுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு தோள்பட்டை இறுகும்.
- பெண்கள்: 40–60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இந்த நோய் சற்று அதிகமாகக் காணப்படுகிறது.
- தைராய்டு மருத்துவப் பயனாளிகள்
- தோள்பட்டை காயம் ஏற்பட்டவர்கள்
- பக்கவாதம் (Stroke) ஏற்பட்டவர்கள்
- அறுவை சிகிச்சைக்கு பிறகு நீண்ட நாட்கள் கை அசைக்காமல் இருப்பவர்கள்
நோயின் மூன்று நிலைகள்
முதல் நிலை – வலி நிலை (Freezing Stage): இந்த நிலையில், தோள்பட்டையில் கடுமையான வலி ஏற்படும். இரவில் அதிக வலியுடன் கையை மேலே தூக்க முடியாத நிலை ஏற்படும். திடீர் அசைவுகளில் அதிக வலி உண்டாகும். இந்த நிலை 2 முதல் 9 மாதங்கள் வரை நீடிக்கலாம்.
இரண்டாம் நிலை – உறைவு நிலை (Frozen Stage): இந்த நிலையில், வலி சற்றுக் குறையும். ஆனால் தோள்பட்டை மிகவும் இறுகிவிடும். கையை உயர்த்த முடியாது. முதுகுக்குப் பின்னால் கொண்டு செல்ல முடியாது. இந்த நிலை 4 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கலாம்.
மூன்றாம் நிலை – மீட்பு நிலை (Thawing Stage): இந்த நிலையில். இயக்கம் படிப்படியாக அதிகரிக்கும். வலி குறையும். அன்றாட செயல்பாடுகள் மேம்படும். இந்த நிலை 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.
அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள்
உறைந்த தோள்பட்டை சாதாரண நோயல்ல. இது வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது.
பாதிக்கப்படும் செயல்கள்: தலைமுடி வாருதல், தலையில் எண்ணெய் தேய்த்தல், குளித்தல், சட்டை அணிதல், ஜாக்கெட் அணிதல், பின்னால் உள்ள பொருளை எடுப்பது, வாகனம் ஓட்டுதல், தூங்குதல். பலர் இந்த நோயால் மனஅழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.

மருத்துவ சிகிச்சைகள்
தற்போது பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. மருந்துகள், வலி நிவாரணிகள், – அழற்சி குறைக்கும் மருந்துகள், கார்டிகோஸ்டீராய்டு ஊசிகள், வலியை குறைக்க பயன்படுகின்றன. ஆனால் இது நிரந்தரத் தீர்வு அல்ல.
ஹைட்ரோடைலேஷன்
மூட்டு உறையை
விரிவுபடுத்தும் சிகிச்சை PRP (Platelet Rich Plasma)
சில மய்யங்களில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் இன்னும் வளர்ந்து வருகின்றன. மிகவும் கடுமையான நிலைகளில் மட்டுமே அறுவை சிகிச்சை பரிசீலிக்கப்படுகிறது.
பிசியோதெரபி ஏன் முக்கியம்?
பல மருத்துவப் பயனாளிகள் முதலில் ஊசி, மருந்து போன்றவற்றை பயன்படுத்திய பின்னர் பிசியோதெரபிக்கு வருகிறார்கள்.
உண்மையில், ஆரம்ப நிலையிலேயே இயன்முறை மருத்துவரை (பிசியோதெரபிஸ்ட்) அணுகினால், வலியை குறைக்கலாம். மூட்டு இயக்கத்தை பாதுகாக்கலாம். உறைவு நிலையைத் தாமதப்படுத்தலாம். அன்றாட செயல்பாடுகளை விரைவாக மீட்டெடுக்கலாம். அறுவை சிகிச்சை தேவையை குறைக்கலாம்
எனவே “மருந்து தோல்வியடைந்த பிறகு இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி)” என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். இன்றைய இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி) பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. மூட்டு இயக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. தசை மற்றும் தசை உறை இறுக்கத்தை குறைக்கிறது. தசை இறுக்கம் மற்றும் வலியை குறைக்க உதவுகிறது.
வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சிகள்
- Pendulum Exercise: மேசையில் ஒரு கையை வைத்துக் கொண்டு மற்ற கையை தளர்வாக தொங்கவிட்டு வட்டமாக அசைக்கவும்.
- Finger Walk Exercise: சுவரில் விரல்களைப் பயன்படுத்தி மெதுவாக மேலே ஏறவும்.
- Towel Stretch: துணியை பின்னால் பிடித்து மேலே கீழே இழுக்கவும்.
- Cross Body Stretch: பாதிக்கப்பட்ட கையை எதிர்புறமாக இழுத்து நீட்டவும்.
- External Rotation Stretch: குச்சி அல்லது கம்பியைப் பயன்படுத்தி வெளிப்புற சுழற்சி பயிற்சி செய்யவும்.
- Wall Climbing Exercise: சுவரில் விரல்களை வைத்து மெதுவாக மேலே நகர்த்தவும்.
குறிப்பு: பயிற்சிகள் பிசியோதெரபிஸ்ட் ஆலோசனையுடன் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
தடுப்பது எப்படி?
சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தோள்பட்டை வலி ஏற்பட்டால் அலட்சியம் செய்யக் கூடாது. நாள்தோறும் தோள்பட்டை நீட்டிப்பு பயிற்சி செய்ய வேண்டும். நீண்ட நாட்கள் கையை அசைக்காமல் வைக்கக் கூடாது. பக்கவாதம் அல்லது அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி) தொடங்குங்கள்.
உறைந்த தோள்பட்டை உயிருக்கு ஆபத்தான நோயல்ல. ஆனால் வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதிக்கும் ஒரு முக்கிய தசை-எலும்பு நோயாகும். குறிப்பாக நீரிழிவு மருத்துவப் பயனாளிகள் தோள்பட்டை வலியை அலட்சியம் செய்யக்கூடாது.
ஆரம்பத்திலேயே இயன்முறை மருத்துவரை (பிசியோதெரபிஸ்டை) அணுகி சரியான சிகிச்சை மற்றும் பயிற்சிகளை மேற்கொண்டால் பெரும்பாலான மருத்துவப் பயனாளிகள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். “வலி குறைந்த பிறகு சிகிச்சை” என்பதற்குப் பதிலாக “வலி தொடங்கியவுடன் சிகிச்சை” என்ற அணுகுமுறையே ‘உறைந்த தோள்பட்டை’யிலிருந்து விரைவான மீட்சிக்கான சிறந்த வழியாகும்.
