பான்பராக், குட்கா உண்டாக்கும் பேராபத்து!

4 Min Read

மருத்துவம்

மருத்துவர்
இரா.கவுதமன்
(இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி)

 

என் மருத்துவமனையில் நான் அமர்ந்து, மருத்துவப் பயனாளிகளைப் பார்த்துக் கொண்டி ருந்தேன். அப்பொழுது, 45 வயது மதிக்கத்தக்க ஒரு மருத்துவப் பயனாளி உள்ளே வந்தார். அவர், “டாக்டர், எனக்கு இடது புற கீழ்த்தாடையில் கடைசி பல் வலியாக இருக்கிறது. வலி மிகக் கடுமையாக இருக்கிறது. இரவு முழுதும் வலி. ‘விண், விண்’ என்று வலி! ஒரு நிமிடம் கூட தூங்க முடியவில்லை” என்று கண்களில் கண்ணீரோடு கூறினார்.

நான் அவரை பரிசோதிக்க பல் மருத்துவப் படுக்கையில் சாய்ந்து அமரச் சொன்னேன். அவரைச் சோதிக்கும் நோக்கில் வாயைத் திறக்கச் சொன்னேன். அவரால் இயல்பான நிலையில் வாயைத் திறக்க முடியவில்லை. ஒவ்வொருவருக்கும் வாயை இயல்பான நிலையில் திறந்தால் மேல் உதடுக்கும், கீழ் உதடுக்கும் இடைவெளி 35mm முதல் 45mm வரை இருக்கும். ஆனால் அந்தப் பெண்ணால் 9mmக்கு மேல் வாயைத் திறக்க முடியவில்லை.

அவ்வளவு குறைந்த அளவே வாய் திறக்க முடிந்ததால், அவரை பரிசோதிப்பதே கடினமாக இருந்தது. ஒரு வழியாக சோதித்து அவருக்கு மருத்துவம் செய்தேன். அவருக்கு மருத்துவம் செய்யும் பொழுது அவர் வாயில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நான் உணர்ந்தேன். அதனால்தான் அவரால் முழு அளவில் வாயைத் திறக்க முடியவில்லை என்பதையும் அறிந்தேன்.

அவருக்கு, அந்த சிக்கல் ஏற்படக் காரணமாக இருந்தது ஒரு நோய்! மிகவும் ஆபத்தான அந்த நோய், வாயில் புற்று நோய் ஏற்படும் முன் அறிகுறியாகத் தோன்றும் ஒரு மாற்றம். அந்த அம்மையார் நன்கு படித்த, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு அதிகாரி. அவருக்குப் போய் எப்படி இந்த அறிகுறி தோன்றியுள்ளது என்று அதிர்ச்சியுடன் அவரிடம், நான் என் அடுத்தக் கேள்வியைக் கேட்டேன். “பாக்கு போடுவீர்களா?”

அந்தப் பயனாளி, “ஆமாங்க, டாக்டர், சாப்பிட்டவுடன் ரோஜா பாக்கு போடுவேன்!”. நான், “எத்தனை ஆண்டாக?” எனக் கேட்க, அந்த அம்மையார், “ஏறத்தாழ அய்ந்து, ஆறு ஆண்டாகப் பாக்கை மெல்லுகிறேன்” என்று பதிலளித்தார். பின் நான், “அந்தப் பழக்கத்தை உடனடியாக நிறுத்துங்கள்” என்று கூறி அதன் பின் விளைவுகளைக் கூறி எச்சரித்து அனுப்பினேன்.

நமது வாயில் சிகப்பாக மூடியுள்ள திசு “சவ்வுத் திசு” (Mucous Membrane) என்றழைக்கப்படுகிறது. இந்தத் திசு வாயில் துவங்கி வயிறு, குடல் பகுதிகள், முடிவில் ஆசனம் (Anus) வரை பரவியுள்ளது. அதே போன்று மூச்சுக் குழல்கள், பிறப்புறுப்புகள் உட்புறச் சுவர்களிலும் படர்ந்துள்ள திசுவாகும். இந்தத் திசுக்களில் மிகவும் நுண்ணிய சுரப்பிகள் உள்ளன. அவை “சீதம்” (Mucous) என்ற வழவழப்பான திரவத்தைச் சுரந்து அந்த சவ்வுப் படலம் முழுவதையும் ஈரப்பதத்தோடு வைத்திருக்க உதவுகிறது.

வாயில் இருந்து மூடி இருக்கும் இந்த அகவுறை திசு வாய், மூக்கு, குதம், பிறப்புறுப்புகள் போன்ற திறந்த வெளிப்புற தொடர்புடைய உறுப்புகள் தூசு, தொற்று நோய்க் கிருமிகள் உடலில் ஊடுருவாமல் தடுக்கும் தடுப்பரணாக பரவிப் பாதுகாக்கிறது. இந்தத் திசு ‘நெகிழ்ச்சி’ (Elasticity) யடையும் தன்மையுடையதால் இது பரவியுள்ள அனைத்து உறுப்புக்களும் சுருங்கவும், விரியவும் எனச் செயல்பட முடிகிறது. வாய் திறக்கவும், மூடவும், உணவை உள்வாங்கும் பொழுது இரைப்பை விரிவடையவும், உணவின் செரிமாணத்தின் போது, சிறுகுடல் விரியவும், கழிவு வெளியேறும் பொழுது ஆசனவாய் விரியவும், மூச்சு உள் இழுக்கும் பொழுது மூச்சுக் குழாய்கள் விரியவும் போன்ற செயல்பாடுகள் உடலில் எளிதாக நிகழ சவ்வுத்திசுவின் நெகிழும் தன்மையே காரணமாகிறது.

மருத்துவம்

வாயைத் தவிர மற்ற உறுப்புகள் உள்ளமைப்பாக இருக்கிறது. வாய்தான் புறவாசல் போல் அமைந்துள்ளது. நாம் உண்ணும் உணவு உடலின் உள் நுழையும் புறவாசல் வாய்தான் நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சுகள், தேவையற்ற பொருட்கள், புகை பிடித்தல், பான்பராக், குட்கா, சீவல், ஹான்ஸ், புகையிலை போன்ற பொருட்கள் வாய் வழியேதான் உடலில் நுழைகிறது. இந்தப் பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் இந்தப் பொருட்களை மென்று வாயின் ஓரத்தில் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவர்கள். சாதாரணமாகத் துவங்கும் இந்தப் பழக்கம் நாளடைவில் போதையாக மாறி, நாள்தோறும் கட்டாயம் மெல்ல வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கி விடும். இந்தப் பொருட்களில் உள்ள நச்சுப் பொருள்கள் சவ்வுத்திசுவின் இயல்பான நெகிழ்வுத் தன்மையை இழக்கச் செய்கிறது. சவ்வுத்திசுவின் உட்புறம் நார்த்திசுக்கள் தோன்றத் தொடங்கும்.

நாளடைவில் நார்த்திசு அதிகமாகி சவ்வுத்திசுவின் நெகிழ்வு முற்றாக அழிந்து விடும். அதனால் வாயின் சவ்வுத்திசு தன் நெகிழ்வு இழந்து விடுவதால் வாய் திறக்கும் திறன் குறைந்து, வாயே முழுவதும் மூடி விடும் நிலை ஏற்படும். வாய் திறந்து உணவைக் கூட உண்ண முடியாது. சிலருக்கு சவ்வுத்திசுவில் தாங்க முடியாத எரிச்சல் ஏற்படும். சில மருத்துவப் பயனாளிகளுக்கு சவ்வுத்திசு முழுவதும் ஆறாத புண்கள் ஏற்படும். இந்தப் புண்கள் நாளடைவில் புற்று நோயாக மாறக் கூடிய ஆபத்தும் உண்டாகும். வாய் திறக்க முடியாமல் சவ்வுத்திசு, நார்த்திசுக்களின் நார்களால் கட்டப்படும் சவ்வுத்திசு, நார்த்திசுவாக மாற்றமடையும் இந்த நிலையை “சவ்வுத்திசு, நார்த்திசுவாக மாற்றம்” (Sub mucous Fibrosis) என்று குறிப்பிடுவர்.

இந்த நிலையை அடைந்தவர்களுக்கு ஆரம்ப நிலையில் மருந்துகளாலும், அதிகம் பாதிப்படைந்தவர்களுக்கு அறுவை மருத்துவத்தாலும் சரியாக்கலாம் என்றாலும், அறுவை மருத்துவம் கடினமானது. பல நேரங்களில் சீராக்க முடியாமலும் போகலாம். புற்று நோயாக மாறினால் மேலும் மருத்துவம் பல மடங்கு சிக்கலாகி விடும். சில சமயம் உயிருக்கே உலை வைக்கவும் கூடும்.

தேவையற்ற குட்கா, பான் பராக், ஹான்ஸ் போன்றவை பயன்படுத்துவதால் வரும் இவ்வளவு பேராபத்துக்களை எளிய முறையில் தவிர்க்கலாம். “வருமுன் காப்பதன்” மூலம், இவற்றைத் தவிர்ப்பதன் மூலம் இந்த ஆபத்துக்களிலிருந்து தப்பிக்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *