சாலைகளில் முன்னுரிமை யாருக்கு? வாகன ஓட்டிகளுக்கா? நடைபாதை மக்களுக்கா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடில்லி, ஜூன் 21- சாலைகளில் வாகனத்தை விட நடப்பவர்களுக்கே தான் முன்னுரிமை என்று 5 வயது சிறுவனின் மரண வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

கருநாடகத்தை சேர்ந்த ஷேகரியாஸ் என்பவர் தனது 5 வயது மகனைப் பள்ளியில் விடுவதற்காக காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து நடந்து அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நடைபாதையோ அல்லது பாதசாரிகள் கடக்கும் கோடோ இல்லை. அப்போது பின்னால் வந்த ஒரு தண்ணீர் லாரி சிறுவன் மீது மோதியதில், அவன் நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த வழக்கில் அந்த மாநில உயர்நீதிமன்றம் குறைந்த இழப்பீட்டுத் தொகையை வழங்கியது. அதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிறீ நரசிம்மா மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. அவர்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் சுதந்திரமாக நடமாடும் உரிமை என்பது வாகனங்களில் செல்வதை மட்டும் குறிக்காது. மனிதன் சக்கரங்களைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே நடக்கத் தொடங்கிவிட்டான். எனவே, “நடப்பதற்கான உரிமை” என்பது பிரிவு 21 (வாழ்வுரிமை) மற்றும் பிரிவு 19இன்கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமையாகும். சாலைகளில் மோட்டார் வாகனங்கள் செல்வதை விட, பிரத்யேகமாக வரையறுக்கப்பட்ட நடைபாதைகளில் பாதசாரிகள் பாதுகாப்பாக நடப்பதற்கே முதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இழப்பீடு

சொகுசு வாகனங்களுக்காக மட்டுமே சாலைகளை வடிவமைக் கும் உள்ளாட்சி அமைப்புகளின் போக்கு மாற வேண்டும். சாலையில் நடப்பவர்களை ஏதோ வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகக் கருதும் அவலநிலை மாற வேண்டும். நடப்பது என்பது வெறும் அசைவு மட்டுமல்ல.

அது இந்தியாவின் பண்பாடு, சமூகம் மற்றும் அரசியல் (காந்தியடி களின் தண்டி யாத்திரை, வினோபா பாவேயின் பூமிதான இயக்கம்) ஆகியவற்றுோடு பிணைந்தது.

எனவே, பொது இடங்கள் வாகனங்களை வைத்திருப்பவர்களின் ஏகபோக உரிமையாக மாற அனு மதிக்க முடியாது.

ஒரு பகுதியில் சாலை அமைக்கப் படுகிறது என்றால், அங்கு கண்டிப்பாகப் பாதசாரிகளுக்கான நடைபாதையும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும்.

இது அந்தந்தப் பகுதியின் நகர்ப்புற மேம்பாட்டு வாரியங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகள், கிராம ஊராட்சி கள் ஆகியவற்றின் சட்டப்பூர்வக் கடமையாகும். நடை பாதை உரிமைகள் மீறப்பட்டால் பொதுமக்கள் தங்களுக்குரிய இழப்பீடு மற்றும் தீர்வைப் பெற மோட்டார் வாகனச்சட்டத்தை எதிர்பாராமல், நேரடியாக உள் ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக நீதிமன்றங்களை நாடலாம். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தந்தைக்கு ரூ.11 லட்சத்து 44 ஆயிரத்து 628 இழப்பீட்டை இரண்டு மாதங் களுக்குள் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.

பொதுநல வழக்கு

இந்தத் தீர்ப்பின் நகலை ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், ஊரகவளர்ச்சி அமைச்சகம் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதசாரிகளின் பாதுகாப்பிற் காகத் தனியாக ஒரு வலுவான சட்டக் கட்டமைப்பை உருவாக்கமாறு சட்ட ஆணையத்திற்கும் பரிந்துரைக்கப் பட்டு உள்ளது.

இந்த வழக்கின் முக்கியத்து வத்தைக் கருதி இதனை உச்சநீதி மன்றம் நேரடியாகத் தானாக முன்வந்து (சூமோட்டோ) “நடப்பதற்கான அடிப்படை உரிமை மற்றும் நடைபாதை விவகாரம்” என்ற தலைப்பில் பொதுநல வழக்காக மாற்றி, தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *