ஒரே நாளில், ஒரே தாளில் கையெழுத்திட்டு 29 பதவிகளிலிருந்து விலகியவர் பெரியார்!

ஆட்சியமைக்க கவர்னர் அழைத்தும், அதனை மறுத்தவர் பெரியார்!
‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–2)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை

சென்னை, ஜூன் 20 ஆட்சியமைக்க கவர்னர் அழைத்தும், அதனை மறுத்தவர் பெரியார்! ஒரே நாளில், ஒரே தாளில் கையெழுத்திட்டு 29 பதவிகளிலிருந்து விலகியவர்  தந்தை பெரியார்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents
ஆட்சியமைக்க கவர்னர் அழைத்தும், அதனை மறுத்தவர் பெரியார்! ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–2) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–2)29 பதவிகளை ஒரே தாளில் கையெழுத்திட்டு விலகியவர் பெரியார்!சர்.பி.ராஜகோபால் ஆச்சாரியார் அய்சிஎஸ்‘ராவ் பகதூர்’  பட்டத்துக்கு நான் பரிந்துரை செய்திருக்கிறேனே!ஆட்சியமைக்க பெரியாரை அழைத்தார் கவர்னர்!‘‘சவுந்தரபாண்டியன் வாழ்க்கை வரலாறு’’ புத்தகம்!பெரியாரிடம், சில பேர்  கோபமாகக் கேட்டார்கள்!‘நடைபாதை நடப்பதற்கே’ என்று சொல்கிறீர்களே!அதனால் உங்களுக்குப் பெருமையா?‘‘அபராதத் தொகையை நானே கட்டிவிடுகிறேன்’’ என்றார் பெரியார்!கோயிலுக்குள்ளே இருக்கிறவன் எவனும் திருடக் கூடாது!

‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–2)

கடந்த 11.6.2026 அன்று மாலை 6.30 மணியளவில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார்  அரங்கத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம், புதுமை இலக்கியத் தென்றல், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில்,  ‘‘தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை’’ (ஆய்வுத் தொடர் பொழிவு–2) என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

29 பதவிகளை ஒரே தாளில் கையெழுத்திட்டு விலகியவர் பெரியார்!

பதவிக்காக பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறவில்லை. தன்னு டைய கொள்கையை அந்தக் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காகத்தான் அதிலிருந்து வெளியேறினார்.

இன்னொரு சிறப்பு என்னவென்றால், 29 பதவிகளை ஒரே ஒரு கடிதத்தில், ஒரே ஒரு தாளில், கையெழுத்து போட்டு, விலகினார். ஒரு பார்ப்பனர் அய்சிஎஸ் அதி காரி. ராஜகோபாலாச்சாரியார் என்று அவருக்குப் பெயர். தந்தை பெரியார் அவர்கள் சேர்மனாக இருக்கும்போது, அவருடைய ஆற்றலைப் பார்க்கிறார். நகரசபை தலைவராக இருக்கும்போது அவருடைய ஆற்றலைப் பார்க்கிறார். ‘தமிழர் தலைவர்’ புத்தகத்தில் இருப்ப தைத்தான் சொல்கிறேன். இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தால், மிகவும் சுவையாக இருக்கும்.

அய்யா அவர்கள், பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டார். அந்தக் கடிதத்தை, அங்கிருந்த அதிகாரி, மேலதிகாரிகளுக்கு அனுப்பிவிட்டார்.

சர்.பி.ராஜகோபால் ஆச்சாரியார் அய்சிஎஸ்

அவருக்கு மேலதிகாரியாக இருந்த சர்.பி.ராஜகோபால் ஆச்சாரியார் அய்சிஎஸ், அவருடைய துணைவியாரோடு வருகிறார். பெரியார் மேல், அவ்வளவு மரியாதை உள்ளவர். ‘‘ஈரோடு நகர சபைத் தலைவராக  சிறப்பாகப் பணிபுரிந்து இருக்கிறார், நாணயமாக இருக்கிறார், எதிலும் உறுதியாக இருக்கிறார். ஈரோடு நகரத்தையே திருத்துகிறார், மாற்றுகிறார். இவர் செய்த காரியங்களால், தண்ணீர்த் தொட்டி’’  என்று எல்லாவற்றையுமே அந்த அதிகாரி பார்த்துக்கொண்டு  வருகிறார். அவர்,  பெரியாரைப் பார்த்து, ‘‘என்ன ராமசாமி நாயக்கரே, எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?’’ என்று கேட்டுவிட்டு,  ‘‘எனக்கு ஒரு நோட்டு வந்திருக்கிறது. உங்களுடைய ராஜினாமா கடிதத்தை எனக்கு பார்வர்ட் பண்ணியிருக்காங்க.  29 பதவிகளை ராஜினாமா செய்தி ருக்கிறீர்களே, இப்படி ஒரு மோசமான தன்மையில் நடந்துகிட்டீங்களே’’ என்று கேட்டார்.

அய்யா, ‘‘அப்படி ஒன்னும் நான் செய்யவில்லையே!’’ என்றார் .

அந்தக் குடும்பத்தோடு நன்றாகப் பழகி இருக்கிறார் அய்யா.

‘‘ஏம்மா, நீங்களே சொல்லுங்க’’, என்று அந்த அதிகாரி, தன் துணைவியாரைப் பார்த்துச் சொல்கிறார்.

‘‘என்ன நாயக்கர்வாள், என்ன நீங்க இப்படி பண்ணிட்டீங்க; எங்க அய்யா ரொம்ப வருத்தப்படுகிறார்’’ என்றார். அந்த துணைவியார்.

‘‘நான் ஒன்னும் தவறாக செய்யவில்லையே?’’ என்று பெரியார் சொல்கிறார்.

‘ராவ் பகதூர்’  பட்டத்துக்கு
நான் பரிந்துரை செய்திருக்கிறேனே!

‘‘ஏற்கெனவே நீங்கள் செய்த பணிகளுக்காக ‘ராவ்சாகேப்’ பட்டத்துக்குப் பரிந்துரை செய்திருக்கி றார்கள், இங்கே இருக்கிறவர்கள்’’என்றார் அந்த அதிகாரி.

மேலும், ‘‘என்னிடம் அந்தக் கோப்பு வந்தது. நான் சொன்னேன், அவர் செய்திருக்கின்ற பணிகளுக்கு ‘ராவ்சாகேப்’ பட்டம் மிகக் குறைவு; அதற்கு மேலே அவருக்குப் பட்டம் கொடுக்கவேண்டும்; ‘ராவ் பகதூர்’  பட்டத்துக்கு நான் பரிந்துரை செய்து, இப்பொழுதுதான் கையெ ழுத்துப் போட்டுவிட்டு வந்திருக்கிறேன். இங்கே வந்தால், நீங்கள் எல்லாப் பதவிகளையும் ராஜினாமா செய்து, அடிப்படையையே கெடுத்துவிட்டீர்களே?’’ என்று அதிகாரி சொல்கி றார்.

‘‘அய்யா நான்  முடிவு எடுத்துவிட்டேன். நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். உங்க ளுக்குச் சங்கடத்தை உண்டாக்கி விட்டேன்’’ என்று அவ்வ ளவு பண்போடு பெரியார் சொல்கிறார்.

அது மட்டும் மட்டு மல்ல, இன்னும் ஒரு வேடிக்கை, ‘தமிழர் தலைவர்’ புத்தகத்தைப் படித்தால், சாமி.சிதம்பர னார் அதில் அழகாக எழுதி இருப்பார்.

ஆட்சியமைக்க பெரியாரை அழைத்தார் கவர்னர்!

அய்யா அவர்கள் பதவிகளை ராஜினாமா செய்கிறார். 1939 ஆம் ஆண்டு சிறைச்சாலையில் அய்யா இருக்கும்போதே, நீதிக்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தவுடன் அதிகாரப்பூர்வமான நீதிக் கட்சித் தலைவர் யார்? பெரியார்!  1940 இல்   அட்வைசர் ஆட்சி சொல்லக்கூடிய அளவுக்கு வந்தாயிற்று.  முறைப்படி கவர்னர், பெரியாரை அழைத்து, ‘நீங்கள் ஆட்சி அமையுங்கள்’’ என்று சொல்கிறார்.  ஏனென்றால், அடுத்த கட்சியை அழைக்கவேண்டும்.  அதனால், ஆட்சி அமைக்க அழைக்கிறார்.

‘‘சவுந்தரபாண்டியன் வாழ்க்கை வரலாறு’’ புத்தகம்!

ஆனால், அய்யா அவர்கள், ‘‘நான் ஆட்சி அமைக்க மாட்டேன்’’ என்று கூறுகிறார். சவுந்தரபாண்டியன் உள்பட எல்லோரும்  மதுரையில் ஆசையாக பெரியார் ஆட்சி அமைப்பதை எதிர்பார்த்து இருக்கிறார்கள். இந்தத் தகவல்கள் எல்லாம் ‘‘சவுந்தரபாண்டியன் வாழ்க்கை வரலாறு’’ புத்தகத்தில் இருக்கிறது.

தலைவர் என்ற முறையில், கவர்னரைச் சந்திக்கிறார்.  ‘‘நீங்கள்  ஆட்சி அமைக்க வேண்டும்’’ என்கிறார் கவர்னர். ‘‘நாங்கள் ஆட்சி அமைக்க மாட்டோம்; அதனால், நான் முதலமைச்சர் பதவியை ஏற்பதற்குத் தயாராக இல்லை; நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்’’ என்கிறார் பெரியார்.

கவர்னரிடம், பெரியார் இப்படிச் சொன்ன விஷயம், சவுந்திரபாண்டியன் உள்பட மற்றவர்கள் அவர்கள் வீட்டில் அமர்ந்திருந்தவ்களுக்கு தெரியாது. அவர்கள் எல்லாம் ஆசையாக இருக்கிறார்கள். யார் எந்த மந்திரி ஆவது? என்று.

இந்தக் காட்சி நன்றாக இருக்கும்  அந்த புத்தகத்தில்.

எப்பொழுது பெரியார் வருவார்? அவரைச் சந்தித்துப் பேசவேண்டும் என்று ஆவலாக இருந்தனர்.

‘‘என்ன முடிவு சொன்னீர்கள்?’’ என்று கேட்டார்கள்.

‘‘நான், என்னுடைய முடிவை தெளிவாகச் சொல்லிட்டேன்’’ என்றார்.

‘‘சொல்லிட்டீங்களா!’

அந்தப் பதவி ஆசை எப்பேர்ப்பட்டது என்பதைப் பாருங்கள்.

‘‘சொல்லிவிட்டேன்’’ என்றார் அய்யா.

‘‘என்ன சொன்னீங்க?’’ என்று கேட்கிறார்கள்

‘‘பதவியை ஏற்று ஆட்சியை அமைக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்’’ என்றார் அய்யா.

பெரியாரிடம், சில பேர்  கோபமாகக் கேட்டார்கள்!

‘‘அய்யா, என்ன இப்படி கெடுத்துட்டீங்களே; ஏன் இப்படி சொன்னீங்க; எங்களைக் கேட்காம ஏன் சொன்னீர்கள்? எங்களை எல்லாம் கலந்து பேசாம நீங்கள் இப்படி சொல்லிட்டீங்களே’’ என்று சில பேர் கோபமாகக் கேட்டார்கள்.

‘‘இதோ பாருங்க, என்னைத் தலைவராக தேர்ந்தெ டுத்தீர்கள்.  தலைவராக என்னைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு இந்தச் சிந்தனை உங்களுக்கு இருந்திருக்க வேண்டும். இவரைத் தலைவராகப் போட்டால், இவன் என்ன செய்வான்? என்று நினைத்திருக்கவேண்டும். எனக்கு அதிகாரம் கொடுத்திருக்கீங்க. நான் என்ன செய்தால், இயக்கத்துக்கு நல்லது, நாட்டுக்கு நல்லது என்று நான் முடிவெடுக்கிறேன்.  நீங்கள் சொன்னீங்கன்னா, நான் என்ன செய்ய முடியும்?’’ என்றார்.

இந்த மாதிரி ஒரு பதில் இருக்கு பாருங்கள், அதுதான் ஒப்பற்றத் தலைமை. இதில் மட்டுமல்ல, அய்யா வாழ்க்கையில் நடைபெற்ற  சம்பவத்தையும், சிந்தனையும் கலந்து பார்த்தால், மிகவும்  சுவையாக இருக்கும், பல சம்பவங்கள்.

‘பெரியார்’ திரைப்படத்தை நினைவில் கொள்ளுங்கள். சேர்மேனாக தேர்வாகிறார் பெரியார் அவர்கள். அப்பொழுது, வியாபாரிகள் எல்லாம், அவரைப் பார்க்க வந்திருப்பார்கள். அதில், மூத்தவர்கள் எல்லாம் இருப்பார்கள்.

அவர்களைப் பார்த்து பெரியார் அவர்கள், ‘‘என்னங்க, இவ்வளவு பேர் வந்திருக்கிறீர்களே’’ என்று கேட்கிறார்.

‘நடைபாதை நடப்பதற்கே’ என்று சொல்கிறீர்களே!

‘‘மஞ்சள், அரிசி போன்ற பொருள்களை நடைபாதையில் காய வைப்பது வழக்கம். ஆனால், திடீரென்று இப்போது சேர்மனாகிய நீங்கள்  ‘நடைபாதை நடப்பதற்கே’ என்றும், நடைபாதையில் அவற்றையெல்லாம் காய வைக்கக்கூடாது என்றும் உத்தரவுப் போட்டிருக்கிறீர்கள். காலங்காலமாக நாங்கள் அங்கேதானே காய வைத்து வருகிறோம்’’ என்றார்கள் அந்த வியாபாரிகள்.

‘‘நீண்ட நாள்களாக அதுபோல் நீங்கள் செய்திருக்கலாம். ஆனால், இன்றையிலிருந்து நீங்கள் வேறு இடத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். நடைபாதையில் மக்கள் பாதுகாப்பாக நடக்க வேண்டும்’’ என்றார் பெரியார்.

‘‘இதற்காகவா நாங்கள் உங்களுக்கு ஓட்டுப் போட்டோம் நாயக்கர்’’ என்று சில பேர் ஆத்திரத்தோடு கேட்கிறார்கள்.

‘‘இதோ பாருங்கள், எனக்கு ஓட்டுப் போட்டால் என்ன செய்வேன் என்கிற புத்தி, உங்களுக்கு முதலிலேயே இருக்கவேண்டும். எனக்கு ஓட்டுப் போட்டுட்டீங்க, நான் அடுத்த முறை பதவிக்கு வருவதை விரும்பவில்லை, ஆகவே, இதைச் செய்வேன்’’ என்கிறார் பெரியார்.

அதனால் உங்களுக்குப் பெருமையா?

இந்த விவகாரத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்குப் போகிறார். அங்கே நாகம்மையார் கோபமாக இருக்கிறார். வழக்கமாக இருப்பதை விட வித்தியாசமாக இவரை வரவேற்கிறார்கள். ‘‘என்ன நீங்கள் பெரிய ஊரு சேர்மன் ஆயிட்டீங்களா? அதனால் உங்களுக்குப் பெருமையா?’’ என்று கேட்கிறார்.

‘‘ஊர்ல இருப்பதையெல்லாம் ஒரே நாளில் மாற்றிவிடலாம் என்ற எண்ணமா, உங்களுக்கு?’’ என்று நாகம்மையார் கோபமாகக் கேட்கிறார்.

‘‘என்ன விஷயம், சொல்லும்மா’’ என்று கேட்கிறார் பெரியார்.

‘‘எல்லாரும் ஆடு வளர்க்கிறாங்க,  மாடு வளர்க்கி றாங்க. அவை அங்கெங்கே மேய்ந்துவிட்டு, வழக்கமாக வீட்டிற்குப் போய்விடும். சாலையில் திரியும் ஆடு, மாடுகளை முனிசிபாலிட்டியினர் பிடித்துக் கொண்டுபோய்விடுகிறார்கள். அவற்றை வெளியே விடவேண்டும் என்றால், அபராதம் கட்டவேண்டும் என்று சொல்கிறீர்களே, இது நியாயமா? நிறைய பேர் என்னிடம் வந்து சொல்கிறார்கள்; அபராதம் கட்டிவிட்டு வந்தவர்கள், ‘‘இதுதான் உங்கள் வீட்டுக்காரரு, சேர்மன் ஆனதினுடைய பலன்?’’ என்று என்னிடம் கேட்கி றார்கள்’’ என்கிறார் நாகம்மையார்.

‘‘அபராதத் தொகையை நானே கட்டிவிடுகிறேன்’’ என்றார் பெரியார்!

‘‘அதனால் என்ன? அதுபற்றி தெரிந்து கொள்ள வேண்டியதுதானே! நீ ஏம்மா, இவ்வளவு கோபமாய் இருக்கிறாய்?  நீ ஏதாவது ஆடு வளர்த்து இருக்கிறாயா?’’ என்று கேட்கிறார் பெரியார்.

‘‘என்னுடைய இரண்டு ஆடும் சேர்ந்து போயி ருக்கிறது?’’ என்று நாகம்மையார் சொல்கிறார்.

‘‘சரி, அப்படியானால், அந்த அபராதத் தொகையைக் கட்டிவிட்டு, நானே அந்த ஆட்டினைக் கொண்டு வருகிறேன்’’ என்றார் பெரியார்.

இந்த சம்பவத்தை அய்யா அவர்களே சொல்லி யிருக்கிறார்.

ஈரோடு முனிசிபாலிட்டியில் நடைபெற்ற விழாவில், வரவேற்பு கொடுத்தார்கள் அய்யாவுக்கு. நானும், ‘ஆசிரியர்’ என்ற முறையில் சென்றபோது, எனக்கும் சேர்த்து வரவேற்பு கொடுத்தார்கள். எனக்கு ஒரு பெரிய பெருமை அது; வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பெரிய பெருமையாகும். அப்பொழுது ஈரோடு முனிசிபாலிட்டியில் நடைபெற்ற சம்பவங்கள்பற்றி அய்யா அவர்கள் வரி விடாமல் வர்ணித்தார்.

‘‘நாகம்மையாரை என்னால் சமாதானப்படுத்த முடியவில்லை. இதோ பாருங்கம்மா, பொறுப்புக்கு  வந்தாயிற்று, இந்த வேலையைச் சுத்தமாகச் செய்ய வேண்டும், அவ்வளவுதான் என்றேன்’’ என்று அய்யா குறிப்பிடுகிறார்.

கோயிலுக்குள்ளே இருக்கிறவன்
எவனும் திருடக் கூடாது!

அதே மாதிரி தேவஸ்தான கமிட்டியா?  கடவுள் நம்பிக்கை எனக்குக் கிடையாது. ஆனால், கோயி லுக்குள்ளே இருக்கிறவன் எவனும் திருடக் கூடாது என்றார். இப்படி எல்லா விஷயங்களிலும்  தெளிவாக இருக்கக்கூடிய நிலைதான் பெரியாருடையது.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *