புதுவை ஜிப்மர் கல்லூரியில் கடந்த 6 ஆண்டுகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இருந்து 332 பேர் விலகல் ஜிப்மர் அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

புதுச்சேரி, ஜூன் 20 பல பிரச்சினைகளால் கடந்த 6 ஆண்டுகளில் புதுச்சேரி ஜிப்மரில் முதுநிலை மருத்துவப்படிப்புகளில் இருந்து 332 பேர் விலகியுள்ளனர். 230 பேர் மன நல ஆலோசனை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி மேட்டுப்பாளையம் சுவாமிதாஸ் என்பவர், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு ஜிப்மர் தகவல் அதிகாரி அளித்துள்ள தகவல் விவரம்: கடந்த 2020-2024 வரை பட்டமேற்படிப்பில் 276 பேர் விலகியுள்ளனர். மனநல ஆலோசனை 200 பேர் பெற்றுள்ளனர். மனநல பாதிப்புக்காக 12 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இரு பட்டமேற்படிப்பு மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். தொடர்ந்து பல நாட்களுக்கு பணி தருவதாக இரு புகார்களும், சீனியர்கள் துன்புறுத்தல் தொடர்பாக இரு புகார்களும் வந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த 2025-இல் விவேகானந்தன் என்பவர் அனுப்பிய கேள்விகளுக்கு ஆர்டிஅய்யில் ஜிப்மர் அளித்த பதிலில், கடந்த 2025-இல் 56 பேர் படிப்பிலிருந்து விலகியுள்ளனர். 30 பேர் மன நல ஆலோசனை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 2020 முதல் 2025 வரை 332 பேர் படிப்பிலிருந்து விலகியுள்ளனர். 230 பேர் மன நல ஆலோசனை பெற்றுள்ளனர் என்பது உறுதியாகிறது.

இதுபற்றி முதுநிலைமருத்துவ மாணவர்கள் தரப்பில் விசாரித்தபோது, “மூன்று மணி நேரம் மட்டும் தூங்கியும், ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டும், வார விடுமுறை இல்லாமல் நாளொன்றுக்கு 21 மணி நேரம் பணி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். பல சீனியர் மாணவர்கள் தங்கள் பணிகளை ஜூனியர் மாணவர்கள் மேல் திணிப்பதால் வேலை நேரம் நீள்கிறது. சில சீனியர் மாணவர்கள் அனைவரின் முன்னிலையில் ஜூனியர் மாணவர்களை திட்டும் சூழலும் நிகழ்கிறது” என்றனர்.

ஆர்டிஅய் தகவல் பெற்றவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் விசாரித்தபோது, “ஜிப்மரில் முதுநிலைமருத்துவம் படிப்போருக்காக பெரும்பாலான துறைகள் உண்மையான பணி நேரங்கள் மற்றும் வார விடுமுறை குறித்த எந்த பதிவையும் பராமரிக்கவில்லை. ஒன்றிய அரசின் 1992-ஆம் ஆண்டின் ரெசிடென்சி திட்ட விதிமுறைகள், ஒரு நாளின் பணி நேரத்தை அதிகப்பட்சமாக 12 மணி நேரமாகவும் வாராந்திர பணி நேரத்தை 48 மணி நேரமாகவும் நிர்ணயித்துள்ளது.

ஜிப்மரில் பயிற்சி மருத்துவர்கள் அதிகநேரம் பணி செய்ய வற்புறுத்தப்படுகின்றனர். இருப்பினும் மதிப்பெண் அச்சத்தால் பணி நேரம் குறித்து நிர்வாகத்திடம் புகார் தர மறுக்கின்றனர். முதுநிலை மாணவர்களுக்கு பாதிப்பு அதிகரிக்கும் சூழலில், பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தர வேண்டும். இதுதொடர்பாக ஜிப்மர் நிர்வாகம் விழித்தெழ வேண்டும்” என்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *