சென்னை, ஜூலை 23- பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் முழுவதும் குழந்தைகளை மய்யப்படுத்திய கல்வியாக மாற்றப்பட உள்ளதாகவும், மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும் எனவும் அமைச்சர் ராஜ் மோகன் தெரிவித்தார்.
புதிய பாடத்திட்ட மாற்றம்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் புதிய பாடத்திட்ட மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 21.7.2026 அன்று நடைபெற்றது.
இதில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், இஸ்ரோ மேனாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, பள்ளிக்கல்வித்துறை செயலர் பி.சந்திரமோகன், இயக்குநர் ச.கண்ணப்பன் மற்றும் துறைசார் அலுவலர்கள், குழுக்களின் உறுப் பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் புதிய பாடத்திட்டப் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.
தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: பள்ளி மாணவர்களின் புத்தகப்பை சுமை குறைக்கப்படும். வெறும் எழுத்துகளாக இல்லாமல், பாடநூல்கள் படங்கள் நிறைந்ததாக மாற்றப்படும்.
புத்தகங்களில் உள்ள க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்து வீடியோ, ஆடியோ மூலமாக பாடங்களைக் கற்கும் முறையும், கணிதப் பாடங்களை கதைகள் வழியே கற்பிக்கும் புதிய முறையும் அறிமுகப்படுத்தப்படும்.
‘ப்ராம்ப்ட் இன்ஜினீயரிங் பயிற்சி இதுதவிர அறிவியலுடன் கலையையும் இணைத்து ஸ்டீம் கல்விமுறை செயல்படுத்தப்படும். பள்ளிகளில் மாணவர்கள் செய்தித்தாள்கள் வாசிப்பதற்கு தனியாக நேரம் ஒதுக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு
பள்ளி மாணவர்களே செயற் கைக் கோள்களை உருவாக்கி அதை நிலவை வட்டமிடச் செய்யும் மாபெரும் திட்டமும், செயற்கை நுண்ணறிவை திறமையாக கையாளும் ‘ப்ராம்ப்ட் இன்ஜினீயரிங்’ பயிற்சி யும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.
பள்ளிகளில் எந்தக் குழந்தை களையும் நிறம், உருவம் கொண்டு பகடி செய்யக் கூடாது. பெண்ணுரிமை, பாலின சமத்துவம், பெற்றோரை மதித்தல், கீழடி உள்ளிட்ட உள்ளூர் மரபுக் கல்வி, நம்நாட்டின் சாதனையாளர்கள் வரலாறு ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பாடத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவைப் போல் இயற்கை நுண்ணறி வும் இடம்பெறும். சக மனிதர்கள் மீது பரிவு கொள்ளும் கரு ணையுடன் கூடிய அறிவாற்றல் மாணவர் களிடம் வளர்க்கப்படும். மனப்பாட முறையை ஒழித்து, ஆழமான கற்றலுக்கும், மாணவர்களை அச்சுறுத்தாத பயமற்ற மதிப்பீட்டுக்கும் வழிவகை செய்யப்படும்.
அதனுடன் சிக்கல் தீர்க்கும் திறன், முடிவெடுத்தல், தன்னம் பிக்கை உட்பட மென்திறன்களும் வளர்க்கப்படும். கல்வித்துறையில் சான்றிதழ்கள், பள்ளிகளுக்கான அனுமதிகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இடைத் தரகர் தலையீடு இன்றி வெளிப் படைத்தன்மை உறுதி செய்யப்படும்.
தகுதி மற்றும் திறமை அடிப் படையில் மட்டுமே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 4 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு 2027-2028ஆம் கல்வியாண்டிலும், 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு 2028-2029ஆம் கல்வியாண்டிலும் புதிய பாடநூல்கள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
