நீட் தேர்வு அச்சத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை என் மகளின் இறப்பு தான் கடைசி இறப்பாக இருக்க வேண்டும் தந்தை உருக்கமான பதிவு

சேலம், ஜூன் 20- நீட் தேர்வு அச்சத்தில் மாணவர்கள் அடுத் தடுத்து தற்கொலை செய்து கொள் ளும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் மேலும் மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். என் மகளின் இறப்புதான் கடைசி இறப்பாக இருக்க வேண்டும் என்று அந்தப் பெண்ணின் தந்தை உருக்கமாக கூறியுள்ளார்.

நீட் தேர்வு

ஆண்டுதோறும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நீட் (யுஜி) நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 3ஆம் தேதி நடந்தது. வினாத்தாள் கசிந்ததால் அந்தத் தேர்வு ஜூன் 21ஆம் தேதி நடத்தப்படும் என்றும் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்தது.

இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பான மன அழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். கோவை குனிய முத்தூரைச் சேர்ந்த அனுகீர்த்தனா (19) என்ற மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அந்த அதிர்ச்சி மறைவதற்குள் சேலம் மாவட்ட எடப்பாடியைச் சேர்ந்த கோபிகா என்ற மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தை அடுத்த வெள்ளாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (45), பியூட்டிசியன். இவரது மகள் கோபிகா (19). மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்த கோபிகா, ஏற்கெனவே இருமுறை நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் தேர்ச்சி பெறாததால், கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நடப்பாண்டு நீட் தேர்வை 3ஆவது முறையாக மிகவும் தீவிரமாகப் படித்து எழுதியிருந்தார்

மே 3-ஆம் தேதி நடந்த தேர்வை கோபிகா நன்றாக எழுதியிருந்ததாகவும், நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தை அடுத்து, நாடு தழுவிய அளவில் நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது.

இதனால் கடும் மன உளைச் சலுக்கு ஆளான கோபிகாவுக்கு, ஜூன் 21-ஆம் தேதி (நாளை) மறுதேர்வு நடைபெறும் என அறி விக்கப்பட்டது.

நேர்ந்த விபரீதம்

ஏற்கெனவே 3 முறை தேர்வு எழுதிய நிலையில், 4ஆவது முறையாக நாளை நடக்கவிருந்த மறுதேர்வுக்கு கோபிகா இரவு பகலாக படித்து வந்துள்ளார். இதனால் அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. ‘மறுதேர்வை சரியாக எழுத முடியாமல் போய் விடுமோ’ என்ற அச்சமும், கடுமை யான மன அழுத்தமும் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

தூக்கில் தொங்கினார்

இந்நிலையில், நேற்று (19.6.2026) மதியம் கோபிகா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோபிகா பரிதாபமாக உயிரிழந்தார். கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் – தாய் புவனேசுவரி கூறியதாவது:

“நாங்கள் பெரிய அளவில் படிக்கவில்லை. குழந்தைகளை இந்தப்படிப்பு தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் இல்லை. ஆனால், மருத்துவராக வேண்டும் என்பது அவளது கனவு. வாழப்பாடி மய்யத்திற்கான தேர்வு அனுமதிச்சீட்டு கூட வாங்கி வைத்திருந்தோம். மே 3-ஆம் தேதி தேர்வை நல்லமுறையில் எழுதியதாக நம்பிக்கையுடன் இருந்தாள். அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது அவளுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. ஆனாலும் உறுதியுடன் படித்த என் மகள், இப்படி செய்வாள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.

“என் பொண்ணே
கடைசியா இருக்கட்டும்…” –

தந்தை சேகர் கூறியதாவது, “கடந்த 3-ஆம் தேதி நடந்த குளறுபடியால் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், நாளை (21-ஆம் தேதி) நடக்கும் தேர்வுக்கு மிகுந்த சிரமப்பட்டு படித்து வந்தாள். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்யும் செய்திகளைப் பார்க்கும் போதெல்லாம் வேதனைப்படுவோம். இன்று என் மகளுக்கே இந்த நிலைமை வந்தபோது நொறுங்கிப் போய்விட்டோம். என் மகளின் இறப்புதான் நீட் பயத்திற்கான கடைசி இறப்பாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வே தேவையில்லை என்பதே ஒட்டுமொத்த பெற்றோரின் மனநிலை.” என்று கூறினார்.

நீட் தேர்வை ரத்து செய்ய உறவினர்கள் கோரிக்கை

சேலம் அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலைப் பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சைக் உருகவைத்தது. “தமிழ்நாட்டில் மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய தமிழ்நாடு அரசு அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்” என்று மாணவியின் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *