பூமியிலிருந்து சுமார் 1,300 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ‘TOI-5882′ என்ற சூரியனைப் போன்ற நட்சத்திரம், தன் குடும்பத்திலுள்ள கோளை விழுங்கிய வியப்பான ஆதாரத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அந்த நட்சத்திரத்தின் வளிமண்டலத்தில் கண்டறியப்பட்ட ரசாயன அடையாளங்களே இந்த விண்வெளி நிகழ்வை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
‘தி அஸ்ட்ரோபிசிகல் ஜர்னல்’ (The Astrophysical Journal) இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, ‘TOI-5882’ என்று அழைக்கப்படும் நட்சத்திரம், தன் சமீபத்திய வரலாற்றில் ஒரு கோளை முழுமையாக விழுங்கியுள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்கா மற்றும் சிலி நாடுகளைச் சேர்ந்த 14 விஞ்ஞானிகள் அடங்கிய குழுவுடன் இணைந்து, மிச்சிகன் பல்கலை. புரூக் கோட்டன் இந்த ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கியுள்ளார். இந்த மிகப்பெரிய கண்டுபிடிப்புக்குக் காரணமாக அமைந்தது ‘லித்தியம்’ என்ற ஒரு ரசாயனத் தனிமத்தின் தடையம் ஆகும்.
இதுகுறித்து விளக்கிய முதன்மை ஆராய்ச்சியாளர் புரூக் கோட்டன், நாம் எதை உண்கிறோமோ, அதுவாகவே நாம் மாறுகிறோம் என்று குறிப்பிட்டார். பொதுவாக, நட்சத்திரங்களில் இயற்கையாகவே குறைந்த அளவில்தான் லித்தியம் இருக்கும். ஆனால், கோள்களில் தனிமம் மிக அதிக அளவில் நிறைந்து காணப்படுகிறது. எனவே, ஒரு நட்சத்திரம் கோளை விழுங்கும்போது, அது பெருமளவிலான லித்தியத்தை உறிஞ்சிக் கொள்கிறது. இது அந்த நட்சத்திரத்தில் ஒரு கண்டறியக்கூடிய ரசாயன அடையாளத்தை (Chemical signature) உருவாக்குகிறது. விஞ்ஞானிகள் ‘ஸ்பெக்ட்ரோஸ்கோபி’ (Spectroscopy) எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, TOI-5882 நட்சத்திரத்திலிருந்து வெளிவந்த ஒளியை ஆய்வு செய்தனர். அப்போது அதன் வளிமண்டலத்தில் வழக்கத்திற்கு மாறான மிக அதிக அளவிலான லித்தியம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த முரண்பாட்டை உறுதி செய்வதற்காக, அதே வயது, நிறை மற்றும் வெப்பநிலையைக் கொண்ட ஒத்த பண்புகளுடைய 62 நட்சத்திரங்களுடன் TOI-5882 நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
இந்த ஒப்பீட்டின் முடிவுகள் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தின. தரவுகளை (Data) எப்படிப் பகுப்பாய்வு செய்து பார்த்தாலும், ஒப்பிடப்பட்ட மற்ற நட்சத்திரங்களை விட TOI-5882 நட்சத்திரமே மிக அதிக லித்தியம் கொண்டதாக முதன்மையில் இருந்தது. இது மற்ற 97% ஒத்த நட்சத்திரங்களை விட மிக அதிகமான அளவாகும். இந்த லித்தியம் அதிகரிப்பின் அடிப்படையில் கணக்கிட்ட விஞ்ஞானிகள், விழுங்கப்பட்ட அந்தக் கோள் பூமியை விட பல மடங்கு பெரியதாகவும், நெப்டியூன் (Neptune) கோளின் அளவு வரையிலும் இருந்திருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர்.
ஒரு நட்சத்திரம் கோளை விழுங்குவது வானியலில் தெரிந்த ஒரு நிகழ்வுதான் என்றாலும், அது நடக்கும்போதே அதை நேரடியாகக் காண்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில், பிரபஞ்சத்தின் கால அளவோடு ஒப்பிடும்போது, ஒட்டுமொத்த நிகழ்வும் வெறும் சில நாட்களிலோ அல்லது வாரங்களிலோ நடந்து முடிந்துவிடும். இது கண் இமைக்கும் நேரமாகும். இதன் காரணமாக, வானியலாளர்கள் குற்றப்பத்திரிக்கையை தயாரிக்கும் தடயவியல் புலனாய்வாளர்களைப் போல, நிகழ்வு நடந்து நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைக்கும் மறைமுகக் குறிப்புகளை வைத்தே உண்மையை மறுசீரமைப்பு செய்துள்ளனர்.
TOI-5882 நட்சத்திரத்தின் இந்த நிகழ்வில் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த நட்சத்திரம் இன்னும் தன் இறுதி வடிவமான சிவப்புப் பெருங்கோள் சிவப்புப் பெருங்கோள் நிலையை அடையவில்லை. பொதுவாக நட்சத்திரங்கள் இந்த சிவப்புப் பெருங்கோள் நிலையை அடையும் போதுதான் அருகில் இருக்கும் கோள்களை விழுங்கும். ஆனால், இந்த நட்சத்திரம் இன்னும் அந்த நிலையை அடையாததால், இதற்குப் பின்னால் நட்சத்திரத்தைச் சுற்றி வரும் மாபெரும் ‘பிரவுன் ட்வார்ஃப்’ நட்சத்திரத்தின் பங்கு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
வியாழன் கோளை விட 20 மடங்கு அதிக நிறை கொண்ட இந்த பிரவுன் ட்வார்ஃப், அந்த கோளின் சுற்றுப்பாதையில் ஈர்ப்பு விசை ரீதியாகப் பெரும் இடையூறை ஏற்படுத்தியிருக்கலாம். இதனால் அந்த கோள் நிலைதடுமாறி, மெதுவாகச் சுருள் வடிவில் (Spiral) நகர்ந்து இறுதியில் தன் தாய் நட்சத்திரத்திற்குள்ளேயே விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த கண்டுபிடிப்பு சொந்த சூரியக் குடும்பத்தின் தொலைதூர எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு சிறு முன்னோட்டத்தையும் நமக்கு வழங்குகிறது.
இன்னும் தோராயமாக 500 கோடி ஆண்டுகளில், சூரியன் ஆற்றல் தீர்ந்து சிவப்புப் பெருங்கோள் ஆக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அது புதன், வெள்ளி கோள்களை நிச்சயமாக விழுங்கும், ஏன், ஒருவேளை நமது பூமியையும் கூட விழுங்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். தற்போதைக்கு, ஒரு நட்சத்திரம் தன் சொந்தக் கோளையே முழுமையாக விழுங்கியுள்ளது என்பதற்கான மிகத்தெளிவான மற்றும் முதன்மையான சான்றாக இந்த TOI-5882 நட்சத்திரம் பன்னாட்டு வானியல் உலகில் உற்றுநோக்கப்படுகிறது.
