புளோரிடா, ஜூன் 18- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சமீபத்தில் அய்பிஓ வெளியிட்டது. இதன்மூலம் (அய்பிஓ), அந்நிறுவனத்தில் முன்பு வெல்டராக பணியாற்றியவரின் பங்கு மதிப்பு ரூ.10 கோடியாக உயர்ந்துள்ளது.
தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில், ஜுவான் ஹெர்னாண்டஸ் என்பவர் கடந்த 2015ஆம் ஆண்டில் வெல்டராக பணியில் சேர்ந்தார். பின்பு ராக்கெட் ஏவுதள உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் உதவியாளராக பணியாற்றினார். பின்பு மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றார்.
அப்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு நிறுவனப் பங்குகளை வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தது. அதை அப்போது ஜுவான் ஹெர்னாண்டஸ் பெரிய விசயமாக கருதவில்லை. ஏனென்றால், அவர் முன்பு பணியாற்றிய நிறுவனங்களில் ஊழியர்களுக்கு இது போல் பங்குகள் வழங்குவது வழக்கம் இல்லை.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஹெர்னாண்டஸ், சுமார் 6,500 ஸ்பேஸ் எக்ஸ் பங்குகளை வைத்திருந்தார். ஜுவான் ஹெர்னாண்டஸ் தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறி புளூ ஆரிஜின் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது 7.13 லட்சம் கோடி பங்குகளை நாஸ்டாக் பங்குச் சந்தையில் (அய்பிஓ) பட்டியலிட்டது. முதல் நாளில் ஒரு பங்கு விலை 160.95 டாலராக உயர்ந்தது. இதன் மூலம் ஜுவான் ஹெர்னாண்டஸ் பங்குகளின் மொத்த மதிப்பு 1 மில்லியன் டாலருக்கு (ரூ.9.95 கோடி) உயர்ந்துள்ளதால் அவர் பெரும் பணக்காரராக மாறியுள்ளார்.
பொதுமக்கள் போல் காத்திருந்து
நுரையீரல் மாற்று சிகிச்சை
செய்துகொண்ட நார்வே இளவரசி
ஓஸ்லோ, ஜூன் 18- நார்வே நாட்டு இளவரசி மெட்டே மேரிட், 52, சாதாரண பொதுமக்கள் போல் காத்திருப்போர் பட்டியலில் இருந்து, நுரையீரல் கொடையாக பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அய்ரோப்பிய நாடான நார்வேயின் அடுத்த மன்னராக பொறுப்பேற்கவுள்ள இளவரசர் ஹாகனின் இணையர்தான் மெட்டே – மேரிட். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டே ‘பல்மோனரி பைப்ரோசிஸ்’ எனப்படும் அரிய வகை நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு நோய் கண்டறியப்பட்டது. இந்த நோய் இருந்தால், நுரையீரலின் திசுக்கள் தடித்து, மூச்சு விடுவதில் கடும் சிரமம் ஏற்படும். இதற்கு நிரந்தரத் தீர்வு கிடையாது.
கடந்த 6 மாதங்களாக இளவரசியின் உடல்நிலை மிக மோசமடைந்தது. ‘உயிர்வளி உருளை’ உதவியோடுதான் அவர் நடமாடி வந்தார். இனி நுரையீரல் மாற்று அறுவைப் பண்டுவம் ஒன்றுதான் ஒரே வழி, இல்லையெனில் உயிருக்கே ஆபத்து என்ற கட்டாயத்திற்கு மருத்துவர்கள் வந்தனர்.
இதையடுத்து, கடந்த ஜூன் 5ஆம் தேதிதான் நுரையீரல் மாற்று அறுவைப் பண்டுவத்திற்காக காத்திருப் போர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது. நல்வாய்ப்பாக, மிகக் குறுகிய நாட்களிலேயே அவருக்குப் பொருத்தமான நுரையீரல் உறுப்புக் கொடையாகக் கிடைத்து அறுவைப் பண்டுவம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.
