சிறப்புக் குழு விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
அயோத்தி, ஜூன் 17 உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமன் கோயிலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மற்றும் நன்கொடைகளில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு கடந்த திங்கட்கிழமை முதல் தனது பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த முறைகேட்டில் ஆதாரங்களை அழித்தவர்கள் மற்றும் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்த விவரங்களை எஸ்.அய்.டி. அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். குறிப்பாக, சிறீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அதிகாரிகளுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அயோத்தியில் திடீரென சொத்து சேர்த்தவர்கள் தற்போது தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இந்த ஊழல் புகாரில் அறக்கட் டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராயின் முன்னாள் ஓட்டுநரான ராம் சங்கர் என்பவர் மீது பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. கோயில் நிர்வாகத்தில் இவருக்குக் கிடைத்த சிறப்புச் சலுகைகளைப் பயன்படுத்தி, வெளியூர்களில் இருந்து வரும் பெரும் பணக்கார பக்தர்களுடன் இவர் நேரடித் தொடர்பில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது நெருங்கியக் கூட்டாளிகளுக்கு கோயிலில் வேலை வாங்கித் தந்தது மட்டுமன்றி, அவர்களைக் காணிக்கைப் பணம் எண்ணும் குழுவிலும் இடம்பெறச் செய்துள்ளார். இதன் மூலம் ராம் சங்கரின் நிதி நிலைமை திடீரென பல கோடிரூபாயாக உயர்ந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
தற்போதைய முதற்கட்டத் தகவல்களின்படி, சுமார் ரூ.200 கோடி காணிக்கைப் பணம் மட்டுமன்றி, கோயிலுக்கு உபயமாக வழங்கப்பட்ட 2 கிலோ எடையுள்ள தங்க கதாயுதம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமன் கோயில் அறக்கட்டளையின் அலுவலகப் பொறுப்பாளர்களில் ஒருவர் மற்றும் வங்கிகளால் பணியமர்த்தப்பட்ட முகமையின் (Agency) சில ஊழியர்களே இந்த மாபெரும் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த நிகழ்வு ஆன்மிக வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
