*புலவர் அண்ணாமலை – சரசு ஆகியோரின் குடும்பம் சுயமரியாதை இயக்க உணர்வு உள்ள குடும்பம்! இந்தக் குடும்பத்துப் பிள்ளைகளையெல்லாம், இந்த *விழுதுகளையெல்லாம் ஆலமரமாக ஆக்கிய பெருமை சரசு அம்மையாரைச் சாரும்!
*‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’ என்று சொல்வது வெறும் அலங்காரப் பேச்சு அல்ல! அல்லது ஆசைக்குரிய அவா அல்ல!
*இயக்கத்தில் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும்,
முந்திக் கொண்டு செய்யக்கூடியவர் மணமகன் தமிழர் தலைவர்!
சேலம், ஜூன் 16 புலவர் அண்ணாமலை – சரசு ஆகி யோரின் குடும்பம் சுயமரியாதை இயக்க உணர்வு உள்ள குடும்பம்! இந்தக் குடும்பத்துப் பிள்ளைகளையெல்லாம், இந்த விழுதுகளையெல்லாம் ஆலமரமாக ஆக்கிய பெருமை சரசு அம்மையாரைச் சாரும். அவர்களுடைய பிள்ளைகள்தான், இன்றைக்கு உலகளாவிய அளவிற்குப் போயிருக்கிறார்கள். இயக்கத்தில் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், முந்திக் கொண்டு செய்யக்கூடியவர் மணமகன் தமிழர் தலைவர்! ‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’ என்று சொல்வது வெறும் அலங்காரப் பேச்சு அல்ல; அல்லது ஆசைக்குரிய அவா அல்ல! நடைமுறையை எடுத்துக்காட்டக் கூடியதாகும்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சுயமரியாதைச் சுடரொளிகள் அண்ணாமலை – சரசு இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
13.6.2026 அன்று காலை சேலம் அம்மாப்பேட்டை யில் உள்ள கொங்கு வெள்ளாளக் கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளிகள் அண்ணாமலை – சரசு இல்ல வாழ்க்கை (அ.இ.தமிழர் தலைவர் எம்.பி.ஏ., – ரா.பிரியா பி.ஏ., ஆகியோரின்) இணையேற்பு விழாவினை தலைமையேற்று நடத்தி வைப்பதற்குமுன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
இம்மணவிழாவிற்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தி னைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய வாழ்விணையருக்கு உடல்நிலை சரி யில்லாத காரணத்தினால், இம்மணவிழாவிற்கு வர இயலவில்லை.
எல்லோருக்கும் செல்லப் பிள்ளையாக இருக்கக் கூடியவர் யார் என்றால், எங்கள் தமிழர் தலைவர்.
தமிழர் தலைவர் என்று அழைக்கப்படுகின்றவருக்கே செல்லபிள்ளை தமிழர் தலைவர்.
மணமகனுக்கு ஏதாவது உதாரணம் சொல்வது என்றால், பல திருமணங்களில் என்ன சொல்வார்கள் என்றால், ‘‘அப்பா மாதிரி, பிள்ளை நடந்துகொள்ளவேண்டும்’’ என்று. ஆனால், இங்கே அதை மாற்றிச் சொல்லவேண்டும்; ‘‘பிள்ளை மாதிரி, அப்பா நடந்துகொள்ளவேண்டும்’’ என்று.
இயக்கத்தில் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், முந்திக் கொண்டு செய்யக்கூடிய ஒருவர்!
மகிழ்நன் அவர்கள், கோபப்படக்கூடும். ஆனால், இளைஞரணி பொறுப்பாளராக இருக்கக்கூடிய நம்முடைய மணமகன் தமிழர் தலைவர், அப்பாவை மட்டுமல்ல, தாத்தாவை மிஞ்சுகின்ற அளவிற்கு மிகப்பெரிய அளவிற்குக் கடமையாற்றக் கூடியவர். இயக்கத்தில் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், முந்திக் கொண்டு செய்யக்கூடிய ஒருவர் அவர்.
சுயமரியாதை இயக்கத்தினுடைய பவள விழா வினை, இந்த இடத்தில்தான் தொடங்கினோம். அன்று மாலையில் நடைபெற்ற நிகழ்வில், நம்முடைய தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் அன்றைக்கு. அதற்குப் பிறகு ஆளுங்கட்சி.
இன்றைக்கு மணவிழா நடைபெற்றுக் கொண்டி ருந்தபோது திடீரன்று மின்சாரம் தடைபட்டது. கொஞ்ச நேரம் மின்சாரம் இல்லாமல் அமர்ந்திருந்தோம். இதே வைதீக முறையில் நடைபெறும் மணவிழாவாக இருந்தி ருந்தால், ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள்.
சுயமரியாதை இயக்க உணர்வு உள்ள குடும்பம் இது!
சுயமரியாதை இயக்க உணர்வு உள்ள குடும்பம் இது. இங்கே வந்திருக்கின்றவர்களில் பெரும்பாலும் அந்த உணர்வோடுதான் இருப்பார்கள். அந்த பணிவு இல்லாதவர்களும் சில பேர், அழைப்பாளர்களாக, உறவுக்காரர்களாக இருக்கலாம்.
இந்தக் கொள்கையினுடைய திறன் எப்படிப்பட்டது என்பதை அவர்கள் சற்று எண்ணிப் பார்க்கவேண்டும். தந்தை பெரியார் என்ற அறிவாசான் அவர்கள், நம்மை எப்படி பக்குவப்படுத்தி இருக்கிறார் என்பதற்கு அடையாளம், மின்சாரம் தடைபட்டு, 5 நிமிடத்திற்கு மேல் நாம் அமர்ந்திருந்தோம். மின்வெட்டுப் பிரச்சினை என்று நான் அரசியல் பேச வரவில்லை. ஆனால், அவ்வளவு நேரமும் அமைதியாக அமர்ந்திருந்தீர்கள் நீங்கள் எல்லோரும்.
இதே வைதீக திருமணமாக, வைதீக சிந்தனையாக இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள், ‘‘அய்யய்யோ, தாலி கட்டுவதற்கு முன்பாக, மாலை மாற்றுவதற்கு முன்பாக இப்படி ஆகிவிட்டதே, இருட்டாகி விட்டதே, அபசகுனம் அல்லவா!’’ என்று நடுங்கிப் போயிருப்பார்கள்.
ஆனால், இங்கே நீங்கள் எல்லோரும் அமைதியாக அமர்ந்திருந்தீர்கள், நாங்களும் அப்படியே அமர்ந்தி ருந்தோம்.
இது, மற்றவர்களுக்கு அபசகுனம்; எங்களுக்கு வாழ்க்கைப் பாடம். எல்லோருக்கும் வாழ்க்கைப் பாடம்.
எப்போதுமே வெளிச்சத்தினுடைய சிறப்பு என்பது, இருட்டு வந்தால்தான் தெரியும். இது வாழ்க்கைப் பாடம் மட்டுமல்ல, அரசியல் பாடமும் கூட.
ஆனால், இருட்டு எப்பொழுதுமே இருட்டாக இருக்காது; மறுபடியும் வெளிச்சம் வரும். இது அரசியல் அல்ல, வாழ்வியல்.
இன்னொரு செய்தி,
சுயமரியாதை இயக்கம் என்ற கொள்கையினால், திராவிட இயக்கத்தினால் தமிழ்நாடு எந்த அளவிற்கு சிறப்பாக மாறியது? அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், காலங்காலமாக இருந்த சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் கொடுத்தார்.
அதற்கு முன், காங்கிரஸ் கட்சி ஆட்சியி்ல இருந்த போது, காமராஜரை ஆதரித்து, தந்தை பெரியார் அவர்கள், தீவிரப் பிரச்சாரம் செய்தார். அந்தக் கால கட்டத்திலே கூட, இரண்டு முறை சுயமரியாதைத் திருமணச் சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்று சொன்னார்கள்.
இராஜாகோபாலாச்சாரியார் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது, சட்ட வடிவம் கொடுக்காததற்கு என்னென்னவோ விளக்கம் சொன்னார். Non confirmative Marriage என்றெல்லாம் விளக்கம் சொன்னார். அதற்குப் பிறகு அவர் ஆட்சியைவிட்டுப் போகக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
இரண்டு முறை மசோதாக்களைத் தோற்கடித்தார்கள்!
அதற்குப் பிறகு, போளூரில், அண்ணாமலை என்பவர் இருந்தார். அவர்தான், முதன்முதலாக தனியார் மசோதாவைக் கொண்டு வந்தார். பிறகு, சட்ட அமைச்சராக இருந்த மாதவன் அவர்கள் முயற்சி எடுத்து மசோதாவைக் கொண்டு வந்தார். இரண்டு முறையும், அந்த மசோதாக்களைத் தோற்கடித்தார்கள்.
ஆனால், ஒரு நல்ல வாய்ப்பு என்னவென்றால், அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், ‘‘பெரியாருக்கு ஆட்சியே காணிக்கை’’ என்று சொன்னது மட்டுமல்ல, சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும்’’ என்று சட்டம் கொண்டு வந்தார்.
ஒரு நீதிபதியே, சுயமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்தால், அது செல்லாது. ஏனென்றால், அப்படி தீர்ப்புக் கொடுத்திருந்தார்கள். ஆனால், அந்தத் தீர்ப்பைப் பல பேர் அலட்சியப்படுத்தித்தான் சுயமரி யாதைத் திருமணத்தைச் செய்து கொண்டார்கள். பல திருமணங்களை செய்து வைத்தார் தந்தை பெரியார் அவர்கள்.
திராவிடர் ஆட்சி வந்ததினால்தான், மானமும், அறிவும் பிழைத்தது!
அப்படியெல்லாம் இருந்ததையெல்லாம் மாற்றியது தான் திராவிடர் ஆட்சி. அந்தத் திராவிடர் ஆட்சி வந்ததினால்தான், மானமும், அறிவும் பிழைத்தது.
அதனுடைய விளைவுதான், ஒரு பக்கம் குயில் கூவுகிறது; இன்னொரு பக்கம், தமிழர் தலைவர், மணமகனாக அமர்ந்திருக்கின்றார். மணமகனைவிட, மணமகள் அதிகம் சிரிக்கின்ற மணமகளாக இருக்கிறார்; அதை நினைத்தால், எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது.
ஒரு நூறாண்டுகளுக்கு முன்பு, பாட்டிமார்கள், தாய்மார்கள் எல்லாம் திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, மணமகளிடம், ‘‘அங்கே போய் தலையை நெட்டிக் கொண்டு இருக்காதே; பார்க்கிறவர்கள் ‘என்ன குதிரை போன்று இருக்கிறது பெண்’ என்று சொல்வார்கள். ஆகவே, தலையை குனிந்து கொண்டே தான் இருக்கவேண்டும்’’ என்று உபதேசம் செய்வார்கள்.
அப்படி குனிந்த தலையை நிமிர வைத்தவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். இன்னொருவர், ஒளிப்படம் எடுப்பவர்.
திராவிட இயக்கத்தினுடைய சாதனை!
படம் எடுக்குபோதே, ‘‘கொஞ்சம் தலையை நிமிருங்கள், தலையை நிமிருங்கள்’’ என்று சொல்வார். கேமிராவால், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குனிந்த தலையை நிமிர வைக்க முடிந்தது; பெரியாரால்தான், முழுக்க முழுக்க தலை நிமிர வைக்கப்பட்டது. அதுதான் இந்த இயக்கத்தினுடைய சாதனையாகும்!
எனவே, திராவிட இயக்கம் என்பது, நேற்று பெய்த மழையில், இன்று முளைத்த காளான் கட்சியல்ல. இதை யாரும் துடைத்து எறிந்துவிட முடியாது. இந்தக் கொள்கை என்பது ஆயிரங்காலத்துப் பயிராகும். அதனுடைய விளைவுகள் பாயாத இடமில்லை.
திராவிட இயக்கம் என்ன செய்தது? நன்றியை எதிர்பார்த்தது கிடையாது.
தந்தை பெரியார்தான் சொன்னார், ‘‘நன்றி என்பது பயனடைந்தவர்கள் காட்டவேண்டிய பண்பு; உதவி செய்தவர்கள் யாரும் எதிர்பார்க்கக் கூடியதல்ல’’ என்று.
திராவிடர் கழகம் என்ன செய்தது? என்பதற்கு அடையாளம்!
இதுதான், அன்றுமுதல் இன்றுவரை, என்றும் இந்தக் கொள்கை நிலைக்கும். அப்படிப்பட்ட கொள்கையில், திராவிடர் கழகம் என்ன செய்தது? என்பதற்கு அடை யாளம் இந்த மணவிழா அழைப்பிதழே ஆதாரம்.
மணவிழாவிற்கான அழைப்பிதழை என்னிடம் கொடுத்தவுடன், அதை வாங்கி வைத்துக் கொள்வேன். பிறகு, அந்த மணவிழாவிற்குச் செல்வதற்கு முன், மணவிழா எத்தனை மணிக்கு? என்று பார்ப்பேன். ஏனென்றால், சரியான நேரத்திற்குச் செல்லவேண்டுமே என்பதற்காக.
நேற்று மாலை, இந்த மணவிழாவின் அழைப்பிதழை எடுத்துப் படித்தேன். அப்போதுதான், நான் இந்த அழைப்பிதழை முழுமையாகப் படித்தேன். அப்போது என்னுடைய வாழ்விணையர், ‘‘மறந்துவிடாமல் சொல்லுங்கள், என்னால் வர இயலாத காரணத்தை. அதற்காக மன்னிப்புக் கேட்டேன் என்றும் சொல்லுங்கள்’’ என்றார்.
அப்போதுதான் அந்த மணவிழா அழைப்பிதழில் உள்ளவற்றைப் பார்த்தேன். இந்த அழைப்பிதழில் உள்ளவற்றை உங்களில் யார் முழுமையாகப் படித்தி ருப்பீர்கள் என்று தெரியவில்லை.
அழைப்பிதழை வாங்கியவுடன், எந்தத் தேதி? எத்தனை மணிக்கு? எந்த மண்டபம்? என்றுதான் பொதுவாக எல்லோரும் பார்ப்பார்கள்.
திருக்குறள் முனுசாமி அவர்கள் நகைச்சுவையாக ஒன்றைச் சொல்வார்.
ஒருவரிடம் மணவிழா அழைப்பிதழைக் கொடுத்த வுடன் அவர் கேட்டாராம், ‘‘எந்தத் தேதியில்?’’
‘‘இந்தத் தேதியில்!’’
‘‘எந்த ஊரில்?’’
‘‘சேலத்தில்’’
‘‘சரி, எந்த மண்டபத்தில்’’
‘‘இந்த மண்டபம்’’தான் என்று சொல்லி முடித்த வுடன், திருக்குறள் முனுசாமி அவர்கள், ‘‘அந்தப் பத்திரி கையைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறீர்களா?’’ என்று அவரிடம் கேட்டாராம்.
அவர், ‘‘ஏங்க?’’ என்று கேட்டார்.
‘‘இவ்வளவையும் நீங்கள் கேட்கக்கூடாது என்ப தற்காகத்தான் அழைப்பிதழை அச்சடித்துக் கொண்டு வந்திருக்கிறோம். இவ்வளவு தகவல்களையும் கேட்டுவிட்டீர்கள் அல்லவா! அதற்காகத்தான் இந்த மணவிழா அழைப்பிதழை வேறொருவருக்குக் கொடுக்கலாமே’’ என்று கேட்டேன் என்றார்.
அதுபோன்று, இந்த அழைப்பிதழின் கடைசிப் பக்கத்தில் இருப்பதைப் பாருங்கள்.
பெரியார் என்ன செய்தார்?
திராவிட இயக்கம் என்ன செய்தது?
திராவிட ஆட்சி என்ன செய்தது? என்பதற்கு அடையாளம் அதுதான்!
‘‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’’ என்று சொல்வது வெறும் அலங்காரப் பேச்சு அல்ல; அல்லது ஆசைக்குரிய அவா அல்ல! நடைமுறையை எடுத்துக்காட்டக் கூடியதாகும்.
அழைப்பிதழின் கடைசிப் பக்கத்தில், நல்வரவை நாடும் என்ற தலைப்பின் கீழ் அச்சிடப்பட்டு இருக்கும் தகவலைப் பாருங்கள்.
விழுதுகளையெல்லாம்
ஆலமரமாக ஆக்கிய பெருமை
சரசு அம்மையாரைச் சாரும்!
புலவர் அண்ணாமலை, அவருடைய வாழ்விணை யரான சரசு அவர்கள், அவரைவிட கொள்கையில் ஒருபடி தீவிரமாக இருந்து, இந்தப் பிள்ளைகளையெல்லாம் இந்த விழுதுகளையெல்லாம் ஆலமரமாக ஆக்கிய பெருமை சரசு அம்மையாரைச் சாரும். அவர்களுடைய பிள்ளைகள்தான், இன்றைக்கு உலகளாவிய அளவிற்குப் போயிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம், பெரியார்! திராவிட இயக்கம்! சுயமரியாதை இயக்கம்! அதனுடைய கொள்கையின் வீச்சு! கொள்கையின் தாக்கம்! அதனுடைய வெற்றிதான்!
நம்மூரில் நூறாண்டுகளுக்கு முன்பு சாதாரணமாக பெயருக்குப் பின்னால், அவரவர்களுடைய ஜாதியைப் போடுவார்கள். ஆனால், இப்போது பெருமைக்குரிய செயல் என்னவென்றால்,
சுயமரியாதை இயக்கம் தொடங்கி நூறு ஆண்டுகள்; நீதிக்கட்சி என்ற திராவிட இயக்கம் தொடங்கி, பானகல் அரசர் தலைமையில் ஆட்சி நடந்து, அந்த ஆட்சி 17 ஆண்டுகள் நீடித்து, அதனுடைய தொடர்ச்சியாக அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி, அதுபோலவே, மு.க.ஸ்டாலின் ஆட்சி என்று வரிசையாக வந்ததின் விளைவுதான் இது.
இந்த அழைப்பிதழில் கடைசிப் பக்கத்தில் இருப்பதைப் படிக்கிறேன்,
மொ. நடேசன்,ஆசிரியர் (ஓய்வு), சென்னை.
ந.அறிவழகன், B.E., MS., MBA., Ph.D., – மா. மு. உமாமகேசுவரி, M.A., M.Phil., Ph.D., சென்னை.
முனைவர் அண்ணாமலை மகிழ்நன், M.Sc., Ph.D., MCMS, MAUSIMM
இராணி மகிழ்நன், B.A. (Hons)ஆஸ்திரேலியா.
யாழ் திலீபா, B.Sc., (Hons), – இளங்குமரன், B.E., M.E., M.Sc.,
இ.அதியன், இ.நித்திலா, இ.நவிரா, ஆஸ்திரேலியா.
மருத்துவர் மறைமொழி மகிழ்நன், M.B.B.S., FRACP,
மருத்துவர் கமீல் சவோயா மகிழ்நன், B.Sc., M.B.B.S., FRACP., FRCPA.,
அலெசான்ட்ரா அன்றில் மகிழ்நன், ஆஸ்திரேலியா.
அ. தேன்மொழி -ம.பெரியசாமி, B.Sc., BSNL (ஓய்வு), திருப்பூர்.
ம.பெ.அறவாழி, M.C.A., – க. சுபப்பிரியா, M.Sc., M.Phil., B.Ed., சென்னை.
ம.பெ.அறிவாழி, M.Sc., M.B.A., – சித்ரா, B.Sc., திருப்பூர்.
ம.பெ. அருளாழி, B.Sc., M.B.A., ஆஸ்திரேலியா – பிரியா அருளாழி, M.S., திருப்பூர்.
அ.ச.இளவழகன், M.A., – கண்ணகி, குயில்பண்ணை, சேலம்.
அ.மான்விழி, B.Sc., B.Lit., M.A., M.A., இயக்குநர், RAMYAM Overseas Education.
அ. குண்டப்புடையார், M.Sc., M.Ed., மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் (ஓய்வு), ஆத்தூர்.
மருத்துவர் அ.கு.நிறைமொழி, B.V.Sc., & AH., PGDTMID, – கு. ரம்யா, M.C.A., M.Phil., கள்ளக்குறிச்சி.
அ.கு.தண்ணிழல், B.E., M.S.., – சிவசங்கரி, M.S., த.சி.எழில் நிலா, சென்னை.
அ. அருள்மொழி, B.A., B.L., அ. குயில்மொழி, B.Sc., LLM (UK), PGDE, ACS, சென்னை.
பழனியம்மாள் மனோகரன், சேலம்
செல்வி செந்தில்குமார், இராசிபுரம்.
ந.ரவி – மயில், மாசிநாயக்கன்பட்டி,சேலம்.
அ. நாகேந்திரன், சிறீ வேலவன் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி, சேலம்.
வளர்மதி பாண்டிதுரை – நர்மதா, B.Sc., (Agri), சேலம்.
ஒரு பல்கலைக் கழகமே
வீட்டிற்குள் இருக்கிறது!
ஒரு பல்கலைக் கழகமே வீட்டிற்குள் இருக்கிறது. பொறியாளர், டாக்டர், ஆசிரியர், கால்நடை மருத்துவர் என்று இப்படி அனைத்துமே இருக்கக்கூடிய ஒரே ஒரு குடும்பம் புலவர் அண்ணாமலை குடும்பமாகும்.
இதற்கு என்ன காரணம்?
சரசு அம்மையார்தான்.
கல்விக்கென்று கடவுள் சரசுவதி இருக்கின்ற நாட்டில், ஆண்டு தவறாமல் சரசுவதி பூஜையைக் கொண்டாடினார்கள், அதனால் இதுபோன்ற பலன் ஏற்படவில்லை.
ஆனால், தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கப் பணி, அறிவாசான் அவர்களுடைய பணி, அதேபோன்று திராவிட இயக்கப் பணியால் வந்த விளைவுகள்தான் இவை.
ஆகவே, இந்தக் கொள்கையைப் பின்பற்றியதால்தான், அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறையில், நம்முடைய தமிழர் தலைவர் – பிரியா ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா!
ஒரு சமூகப் புரட்சி இது. ஒரு துளி ரத்தம் சிந்தாமல், வன்முறை இல்லாமல், ஆயிரங்காலத்துப் பயிராக இது உருவாகியிருக்கிறது என்றால், அதை அருள்கூர்ந்து நினைத்துப் பாருங்கள்.
இரண்டே வரியில் முடித்துவிடுகிறீர்கள்!
பெரியார், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் என்றால், ‘‘கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள், பார்ப்பனர்களைத் திட்டுகிறவர்கள்’’ என்று இரண்டே வரியில் முடித்துவிடுகிறீர்கள்.
அப்படி இல்லை.
எங்களுக்கு யாரும் விரோதிகள் அல்ல. அனைவ ருக்கும் அனைத்தும்! எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் சமூகநீதி. அந்தக் கொள்கையைச் சொல்வ தற்காகத்தான் இந்த மணவிழா!
அதுமட்டுமல்ல, இந்தக் குடும்பத்துப் பிள்ளைகள் எல்லாம், உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பெரியார் உலகமயமாகி இருப்பதுபோல.
மகிழ்நன்தான், ‘பெரியார் அம்பேத்கர்’ அமைப்பை உருவாக்கி ஆஸ்திரேலியாவில் மாநாடு நடத்தினார்.
இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் நண்பர்களே, ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு!’’
இந்தத் திருமண முறையில் சடங்குகள் இல்லை. இதுவே சடங்குகள் முறையில் நடைபெறும் திருமணம் என்றால், இவ்வளவு மகிழ்ச்சியாக மணமக்கள் அமர்ந்தி ருப்பார்களா? அதுமட்டுமல்ல, கருப்புச் சட்டையை அணிந்துகொண்டுதான் மணமகன் அமர்ந்திருக்கின்றார்.
தாய்மார்களுக்குத் தெரியும், மணமகளுக்குப் புடவை எடுக்கும்போது, நிறைய புடவைகளைப் புரட்டிப் புரட்டிப் பார்ப்பார்கள்; அப்படி நீண்ட நேரமாகப் பார்த்துவிட்டு, ஒரு புடவையை எடுத்து, ‘‘ஏங்க, இது நன்றாக இருக்கிறது; இதே போன்று வேறு புடவை இருக்கிறதா?’’ என்று கடைக்காரரிடம் கேட்பார்கள்.
கடைக்காரர், ‘‘வேறு இல்லை. இது ஒன்றுதான் இருக்கிறது. இந்தப் புடவை ஏன் வேண்டாம் என்று சொல்கிறீர்கள்?’’ என்று கேட்பார்.
அப்போது, ‘‘இந்தப் புடவை நன்றாகத்தான் இருக்கிறது; மணமகளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால், புடவையின் நடுவில் கருப்பு இழை ஓடுகிறது. அதற்காகத்தான் வேறு புடவை கேட்கி றோம்’’ என்பார்கள்.
எங்கே மூடநம்பிக்கைக்கு இடமில்லையோ, அங்கே தன்னம்பிக்கை தானாக வளரும்!
ஆனால், இன்றைக்குக் கருப்புடையே தரித்துக் கொண்டிருக்கின்ற மணமகன் இங்கே அமர்ந்தி ருக்கின்றார். கருப்புச் சட்டை அணிந்திருப்பவர்கள்தான், இந்த மணவிழாவினையே நடத்துகின்றோம் என்று சொன்னால், மூடநம்பிக்கைகளுக்கு இங்கே இடமில்லை. எங்கே மூடநம்பிக்கைக்கு இடமில்லையோ, அங்கே தன்னம்பிக்கை தானாக வளரும்.
அந்தத் தன்னம்பிக்கையினுடைய சிகரங்களாக வந்திருக்கின்ற மணமக்களே, உங்களுக்கு எந்தவிதமான அறிவுரையும் தேவையில்லை. ஏனென்றால், நீங்கள் தெளிவானவர்கள்.
அதனால், உங்களுக்கு வேண்டுகோள் என்ன வென்றால், உங்களை ஆளாக்கிய பெற்றோரிடம் அன்பு காட்டுங்கள். இல்லறத்திற்குப் பிறகு துறவறம் என்று சொல்வார்கள். ஆனால், பெரியார்தான், இல்லறம், அதில் இருந்துகொண்டே தொண்டறம் என்றார். இந்த இரண்டையும் செய்யவேண்டும் என்று சொன்னார். அந்தத் தொண்டறத்தை ஏற்கெனவே செய்யக்கூடியவர்தான் மணமகன் தமிழர் தலைவர். அவருக்குத் துணையாக வாழ்விணையராக வந்தி ருப்பவர் பிரியா அவர்கள்.
நிறைவாக மணமக்களுக்குச் சொல்லுகின்ற ஒரே ஒரு செய்தி, நீங்கள் சிறப்பாக வாழ்வீர்கள்; வாழவேண்டும். ஆனால், குறுக்கே வரக்கூடிய தடை, நடைமுறையில், வாழ்வியலில் எது என்று சொன்னால், ஒன்று, ஈகோ என்று சொல்லக்கூடிய தன்முனைப்பு.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழவேண்டும்!
இருவரில், யார் விட்டுக் கொடுப்பது என்று சொல்லும்போது, சிறிய பிரச்சினைகளில்கூட மன வேறு பாடுகள் வருவது உண்டு. அப்போது தன்முனைப்புக்கு இடமில்லாத அளவிற்கு, நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவேண்டும்.
அறிஞர் அண்ணா அழகாகச் சொன்னார், ‘‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை’’ என்று. எவ்வளவு அற்புதமான வரிகள் என்பதை நினைத்துப் பாருங்கள்.
இரண்டாவதாக, வாழ்க்கை என்பது, விளை யாட்டிற்கும், தேர்தலுக்கும் மிகவும் மாறுபட்டது என்பத மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
தேர்தலில் வெற்றி பெற்றவர் – தோற்றவர் என்பது வாக்குக் கணக்குதான். அது ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில்கூட இருக்கலாம் என்பதைப் பார்த்திருக்கின்றோம். ஆகவே, யாருக்கு வெற்றி? யாருக்கு தோல்வி? என்பது தேர்தலில் உண்டு.
அதேபோன்று, விளையாட்டில், யார் வெற்றி பெற்றார்கள்? யார் தோல்வியுற்றார்கள்? என்பது அவர வர்களுடைய ‘ஸ்கோரை’ வைத்து முடிவு செய்வார்கள்.
ஆனால், வாழ்க்கை என்பது, மேற்சொன்ன இரண்டிற்கும் நேர் மாறானதாகும்.
ஒருவருக்காக ஒருவர் தோற்க முன்வர வேண்டும். ஒருவருக்காக இன்னொருவர் தோற்க வேண்டும். தோற்றவர்களுக்குத்தான் இப்போது மிகச் சிறப்பு. அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
அன்றைக்கும் சிறப்பு – இன்றைக்கும் சிறப்பு.
ஆகவேதான், வெற்றி பெற்றவர்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியடைய முடியாது. நீங்கள் விட்டுக் கொடுத்தால், தோற்றவர்கள், யாருக்காகத் தோற்றோம் என்பதுதான் மிகவும் முக்கியம்.
ஆகவேதான், தோல்வி என்பது உண்மையான தோல்வியாக இருக்காது. அது உங்களுடைய சிறப்பாக இருக்கும்.
எனவே, மணமக்களே, சிறப்பாக வாழுங்கள்! பெருமையோடு வாழுங்கள்! கொள்கையோடு வாழக்கூடியவர்கள் நீங்கள்!
இப்போது மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழி கூறி, மணவிழாவினை நடத்திக் கொள்வார்கள்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
