புதுடில்லி, ஜூன் 10- நாடு முழுவதும் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்’ (100 நாள் வேலைத் திட்டம்) மாற்றியமைக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக, பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ‘விக்சித் பாரத் கேரண்டி பார் ரோஸ்கர் அண்ட் அஜீவிகா மிஷன்’ (VP RAM G – விபி ராம் ஜி) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இப்புதிய திட்டத்தின் கீழ் வேலை நாட்கள் 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட உள்ளன. இத்திட்டம் வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது.
இடைக்கால நிதி ஒதுக்கீடு
பழைய திட்டத்தில் இருந்து புதிய திட்டத்திற்குச் சுமூகமாக மாறுவதற்கும், ஜூன் 30-க்குப் பிறகு பணிகள் தடை யின்றித் தொடர்வதற்கும் வசதியாக, ஒன்றிய அரசு ரூ.95,692.31 கோடி இடைக்கால நிதியை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், “புதிய திட்டத்திற்கான வரைவு விதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், வேலை கிடைப்பதில் ஒரு நாள் கூட இடைவெளி இருக் காது. எந்த மாநிலத்திற்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்படாது” என்று உறுதியளித் துள்ளார்.
இடைக்கால நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாநிலங்கள் பெற்ற நிதி விவரம்:
- உத்தரப் பிரதேசம் ரூ. 9,721.48 கோடி
- மேற்கு வங்கம் ரூ.8,508.00 கோடி
- தமிழ்நாடு ரூ. 7,585.49 கோடி
- ஆந்திரப் பிரதேசம்ரூ. 7,707.21 கோடி
5 .ராஜஸ்தான் ரூ. 7,581.87 கோடி
- பீகார் ரூ. 6,715.83 கோடி
மாநிலங்களுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ. 92,550.17 கோடியாகவும், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 1,291.52 கோடியாகவும் உள்ளது. நிர்வாகம் மற்றும் சமூகத் தணிக்கைக்காகக் கூடுதலாக ரூ. 1,850.62 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டிய பங்களிப்பு எவ்வளவு?
இதுவரை 100 நாள் வேலைத் திட்டம் 100% ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் நடந்து வந்தது. ஆனால், புதிய ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தில் 60% ஒன்றிய அரசுப் பங்கும், 40% மாநில அரசுப் பங்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதி: ரூ. 7,585.49 கோடி (60%) தமிழ்நாடு அரசு ஒதுக்க வேண்டிய பங்கு: ரூ. 5,059.66 கோடி (40%) தமிழ்நாட்டிற்கான மொத்த இடைக்கால நிதி: ரூ. 12,649.15 கோடி தமிழ்நாடு அரசு தனது 40% பங்கான ரூ.5,059.66 கோடியை ஒதுக்கினால் மட்டுமே இப்புதிய திட்டப் பணிகளைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
மாநிலங்களின் பங்களிப்பையும் சேர்த்தால், இத்திட்டத்தின் மொத்த ஆண்டுச் செலவு சுமார் ரூ. 1.51 லட்சம் கோடியாக இருக்கும். இப்புதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளைத் தமிழ்நாடு உட்பட 26 மாநிலங்கள் நிறைவு செய்துவிட்டன. ஜார்க்கண்ட், கருநாடகா, தெலங்கானா, மிசோரம் ஆகிய 4 மாநிலங்கள் இன்னும் முழுமையாக நிறைவு செய்யவில்லை என்றாலும், இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தயாராகி வருவதாக ஒன்றிய அரசுக்கு உறுதி அளித்துள்ளன.
