மற்றவர்கள் வருவார்கள், போவார்கள்; ஆனால், நிரந்தரமாக இருப்பவர்கள் தி.க.வும் – தி.மு.க.வும்தான்!
யார் வந்தாலும், யார் போனாலும் அதைப்பற்றி
நமக்குக் கவலையில்லை, தாய்க்கழகம் இருக்கிறது!
சுயமரியாதைச் சுடரொளிகள் அண்ணாமலை – சரசு இல்ல
சேலம், ஜூன் 15 ‘‘மற்றவர்கள் வருவார்கள், போவார்கள்; ஆனால், நிரந்தரமாக இருப்பவர்கள் தி.க.வும் – தி.மு.க.வும்தான்! யார் வந்தாலும், யார் போனாலும் அதைப்பற்றிக் நமக்குக் கவலையில்லை. தாய்க்கழகம் இருக்கிறது, கழகம் இருக்கிறது.’’ என்றார் தி.மு.க. முதன்மைச் செயலாளர் – மேனாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள்.
சுயமரியாதைச் சுடரொளிகள் அண்ணாமலை – சரசு இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
13.6.2026 அன்று காலை சேலம் அம்மாப்பேட்டை யில் உள்ள கொங்கு வெள்ளாளக் கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சுயமரியாதைச் சுடரொளிகள் அண்ணாமலை – சரசு இல்ல வாழ்க்கை (அ.இ.தமிழர் தலைவர் எம்.பி.ஏ., – ரா.பிரியா பி.ஏ., ஆகியோரின்) இணையேற்பு விழா திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. இம்மணவிழாவில், தி.மு.க. முதன்மைச் செயலாளர் – மேனாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
இம்மணவிழாவினை நடத்தி வைக்கவிருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே,
எதற்கும் அஞ்சாமல் பேசுகின்ற துணிச்சலான, கொள்கை வீரர் இராசா!
இயக்கக் கொள்கையில் பிறழாமல் தொடர்ந்து பேசிக்கொண்டும், எழுதிக் கொண்டும் இருக்கின்ற அன்பிற்குரிய ஆ.இராசா அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர் அவர். நாடாளுமன்றத்தில் பேசினாலும் சரி, பொதுக்கூட்டத்தில் பேசினாலும் சரி, எதற்கும் அஞ்சாமல் பேசுகின்ற துணிச்சலான, கொள்கை ரீதியான இராசா அவர்கள் இங்கே வந்திருக்கிறார்.
நான் கோவிலுக்குப் போகின்றவன். ஆனால், இராசா அவர்கள், ஆசிரியர் அவர்கள் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே கேட்கின்றவர்.
எனவே, அவர் இத்திருமணத்தில் வாழ்த்துரையை ஆசிரியருக்கு முன்னதாகப் பேசினால் நன்றாக இருக்கும் என்கின்ற காரணத்தினால்தான். வந்தேன்.
இத்திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுப்பதற்காக வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் வந்தபோது, ‘‘அழைப்பிதழில் நேரு பெயர் போட்டிருக்கிறீர்களே, வருவாரா?’’ என்று ஆசிரியர் கேட்டார் என்று என்னி டத்தில் சொன்னார்.
1989 ஆம் ஆண்டில் நான் அமைச்சரானபோது, முதன்முதலில் வாழ்த்துச் சொன்னவர் அருள்மொழி!
‘‘நிச்சயமாக, நான் வருவேன்’’ என்று சொல்லி வந்தேன். 1989 ஆம் ஆண்டில் அமைச்சராகப் பதவி யேற்றபோது, என்னுடைய அறையில், முதன்முதலாக வந்து வாழ்த்துத் தெரிவித்தவர் அருள்மொழி அவர்கள்தான்.
இன்று அவருடைய பேச்சைக் கேட்கிறபோது, ஒரு சிறந்த விரிவுரையாளர் பேசினால் எப்படிச் சிறப்பாக இருக்குமோ, அப்படி கூட்டத்தில் பேசுகின்றபோதும் சரி, கலைஞர் அவர்களோடு கூட்டத்தில் பேசும்போதும் சரி, இன்றைக்குத் தளபதி அவர்களோடு கூட்டத்தில் பேசும்போதும் சரி, அருள்மொழி பேசுகிறார் என்று சொன்னால், அமைதியாக இருந்து கேட்பவர்கள் அதிகம் பேர். அந்த அளவிற்கு மிகச் சிறந்த கொள்கைப் பற்றாளர். அவருடைய இல்ல மணவிழாவில் நாங்கள் கலந்துகொள்வதில் மிகப்பெரிய மகிழ்ச்சி எங்களுக்கு
103 வயதில் வாழ்த்துரை!
எல்லாவற்றையும்விட கூடுதலாக, 103 வயதில், பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் சண்முகம் அய்யா அவர்கள், இம்மணவிழாவிற்கு வந்து, வாழ்த்துரை வழங்கி, மணமக்களை வாழ்த்துவதை நினைத்தால், எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சி.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஏராள மானோர் இத்திருமணத்திற்கு வந்திருக்கிறார்கள். அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிரந்தரமாக இருப்பவர்கள்
தி.க.வும் – தி.மு.க.வும்தான்!
ஆசிரியர் அவர்களிடம் உரையாடிக் கொண்டி ருந்தபோது என்னிடம் சொன்னார், ‘‘இத்திருமணத்திற்கு வருகின்ற வழியில், திராவிட முன்னேற்றக் கழகக் கொடியும், திராவிடர் கழகக் கொடியும் வழிநெடுகிலும் மாறி மாறி கட்டப்பட்டிருந்தது. நாம்தான், என்றைக்கும் நிரந்தரமானவர்கள் என்பதுபோல, அது இருந்தது. மற்றவர்கள் வருவார்கள், போவார்கள்; ஆனால், நிரந்தரமாக இருப்பவர்கள் தி.க.வும் – தி.மு.க.வும்தான்’’ என்று.
எனவே, அவர் சொன்னதுதான் உண்மை. யார் வந்தாலும், யார் போனாலும் அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. தாய்க்கழகம் இருக்கிறது, கழகம் இருக்கிறது. நாம் நேரிடையாக மக்களைச் சந்திக்கக்கூடிய தெம்பு இருக்கிறது; துணிவும் இருக்கிறது.
தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்,
அவர்களே அழிந்துபோனதுதான் வரலாறு!
இன்றைக்கு இம்மணவிழாவில் பேசுகின்றேன் என்று சொன்னால், ஒரு காலகட்டத்தில், ‘‘திராவிட முன்னேற்றக் கழகத்தையே அழித்துவிடுவோம் என்று புறப்பட்டவர்கள்’’, அவர்களே அழிந்து போய், மீண்டும் தி.மு.க.விற்கு வந்தபோது, அவர்களையும் வாழ வைத்தது தி.மு.க. – அதையும் வாழ வைத்தது நம்முடைய தலைவர் தளபதி அவர்கள்.
அவரைப்பற்றியெல்லாம் இன்றைக்குத் தவ றாகப் பேசுகிறார்கள். அதைப்பற்றியெல்லாம் நமக்குக் கவலையில்லை. யார், தன்னைப்பற்றித் தவறாகப் பேசினாலும்கூட, அவர்களையும் சேர்த்து வாழ வைக்கின்ற ஓர் இயக்கம், தலைவர்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்கள். அவர் வழியில் நின்று நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
தலைவர் என்ன சொல்கிறாரோ, அந்தக் கட்டளையை ஏற்றுச் செயல்படுவோம்!
எது வரினும், தலைவர் என்ன சொல்கிறாரோ, அந்தக் கட்டளையை ஏற்றுச் செயல்படுவோம். திரா விட முன்னேற்றக் கழகத் தோழர்கள் அனைவரும் அப்படித்தான் செயல்படுவோம்.
எனவே, ஆசிரியர் அய்யா அவர்கள், இந்தத் திருமணத்தைத் தலைமையேற்று நடத்துவதில் எங்களுக்குப் பெரிய மகிழ்ச்சி!
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின்
வாழ்த்துக் கடிதம்!
‘‘மணமக்கள் வாழ்க! மணமக்கள் வாழ்க! மணமக்கள் வாழ்க! என்று சொல்லி, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்கள், மணமக்களை வாழ்த்தி வாழ்த்துரையை வழங்கியிருக்கிறார்கள். அந்த வாழ்த்தினை, இராசா அவர்கள், என்னிடம் அதைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.
‘‘திரு.இளவழகன் – திருமதி கண்ணகி இருவரின் அன்பு மகன், திருநிறைச்செல்வன் அ.இ.தமிழர் தலைவர் எம்.பி.ஏ., அவர்களுக்கும், திரு.பெ.ராஜசேகர் – திருமதி.குமாரி ஆகியோரின் அன்புமகள் திருநிறைச்செல்வி ரா.பிரியா பி.ஏ. அவர்களுக்கும், 13.6.2026 அன்று, சேலம் அம்மாப்பேட்டையில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில், தாய்க்கழகமாம், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் தலைமையில், வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெறும் இனிய செய்தியினை, திராவிடர் கழகப் பிரச்சார செயலாளரும், திரு.இளவழகன் அவர்களின் தங்கையுமான திருமதி அருள்மொழி வாயிலாக அறிந்து மகிழ்ந்தேன்.
நமது இயக்கக் குடும்பத்தில் நடைபெறுகின்ற சுயமரியாதைத் திருமணம் என்பது, எனது இல்லத்தில் நடைபெறும் விழா!
இல்லற வாழ்க்கைப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் எல்லா வளமும் பெற்று, நீடூழி வாழ என் அன்பு வாழ்த்துகள்!
சமுதாயத்தில் நாம் காண விரும்பும் சமத்துவம், இல்லறத்தில் இருக்கவேண்டும்.
தந்தை பெரியார் நமக்கு ஊட்டியுள்ள பகுத்தறிவு உணர்வும், சுயமரியாதை உணர்வும் மணமக்களது வாழ்க்கையை வழிநடத்தட்டும்!’’
மேற்கண்டவாறு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
– இவ்வாறு மேனாள் அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
