சென்னை, ஜூன் 14- தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் உள்ள இடங்களில் 40 சதவீதத் திற்கும் அதிகமான இடங்கள் நிரம்பி யுள்ளதாக கல்லூரிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகரிக்கும் ஆர்வம் – புள்ளிவிவரங்கள்
தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின் கீழ் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் உள்ள 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,26,959 இடங்கள் (ஷிப்ட் I – 1,01,022 / ஷிப்ட் II – 25,937) உள்ளன.இந்த இடங்களுக்கு நடப்பாண்டில் சுமார் 2,31,274 மாணவர்கள் இணைய வழி மூலம் விண்ணப்பித்திருந்தனர்.
மாநிலக் கல்லூரி முதலிடம்!
மாணவர்கள் சேர விரும்புவதில் சென்னை மாநிலக் கல்லூரி (Presidency College) வழக்கம் போல் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இங்குள்ள 2,380 இடங்களுக்குச் சுமார் 45,101 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
2 மற்றும் 3ஆவது இடங்களில் கோவை அரசு கல்லூரியும், சென்னை நந்தனம் அரசு கல்லூரியும் (தலா 37,000 விண்ணப்பங்கள்) உள்ளன. 4 மற்றும் 5ஆவது இடங்களில் சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் அரசுக் கலைக் கல்லூரியும், ராணி மேரிக் கல்லூரியும் உள்ளன. கல்லூரி வாரியான தற்போதைய சேர்க்கை நிலவரம்:
சென்னை மாநிலக் கல்லூரி
முதல் சுற்றில் 1,060 இடங்கள் நிரம்பிய நிலையில், தற்போது வரை 70 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளதாகக் கல்லூரி முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார்.
கட்-ஆப் நிலவரம்: கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுக்கு 330 வரையிலும், கலைப் பாடங்களுக்கு (Arts) 220 வரையிலும் கட்-ஆப் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேதியியல், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், சைக்காலஜி, பி.காம், தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகம் உள்ளது. தமிழ் பிரிவில் 100 இடங்களும், ஆங்கிலத்தில் 80 இடங்களும், கணிதத்தில் 80-ல் 47 இடங்களும் இதுவரை நிரம்பியுள்ளன.
நந்தனம் அரசு ஆடவர் கல்லூரி
இங்குள்ள மொத்தம் 1,400 இடங்களில் 50 சதவீத இடங்கள் நிரம்பிவிட்டதாகக் கல்லூரி முதல்வர் தங்க ராஜன் தெரிவித்துள்ளார்.
வணிகவியல், கணினி அறிவியல், வேதியியல் போன்ற இடங்கள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன. இங்கு சேர்க்கைக்கான கட்-ஆப் 220 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முதல் இது இருபாலர் (Co-education) கல்லூரியாக மாற்றப்பட்டதால் மாணவிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஆனால், வளாகத்திற்குள் பெண்களுக்கான தங்கும் விடுதி (Hostel) இல்லாதது வெளியூர் மாணவிகளுக்குச் சிரமமாக உள்ளதால், மாநிலக் கல்லூரியைப் போல இங்கும் விடுதி வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை கல்லூரி முதல்வர் முன்வைத்துள்ளார்.
தற்போது 2ஆம் கட்ட கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதால், மீதமுள்ள இடங்களும் அடுத்த வாரத்திற்குள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
