கேள்வி: விடா முயற்சியோடு இருப்பதற்கு நீங்கள் கூறும் அறிவுரை ஏதாவது ஒன்று?
– எம்.முத்துக்களஞ்சியம், திருச்சி
பதில்: தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றை ஆழ்ந்து படியுங்கள். இலக்கை அடைய அவரது எதிர்நீச்சலும், வளமை குன்றாத தொடர் இலக்கு நோக்கிய பயணமும் உங்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாகி வழிநடத்தும்.
- • •
கேள்வி: தந்தை பெரியாரின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் யாவை?

– வி.சங்கர், கல்பாளையம்
பதில்: மாலை நேரப் பொதுக்கூட்டங்கள்; அதில் 3 மணி நேர கொள்கைப் பாடங்கள் – அருவி போன்ற பேருரைகள். மற்றபடி வீட்டில் கட்டிலில் அமர்ந்துள்ளபோது, தனது டைரியில் உள்ள வரவு – செலவு – (கூட்டங்களின் நன்கொடை, வழிச்செலவு விவரங்களைப் புரட்டிப் பார்த்தல்), தமிழ்ப் பேரகராதி அபிதான சிந்தாமணி போன்றவற்றைப் படிப்பது, ஏடுகளுக்குக் கட்டுரை எழுதுவது, தனிமைச் சிந்தனை – டைரிகளில் பதிவுகள்.
- • •
கேள்வி: தமது கொள்கைகளைக் கேட்டு ஏற்றுக் கொள்ளாதவர்களிடம் தந்தை பெரியார் எவ்வாறு நடந்து கொள்வார்?
– சா.மணிமேகலை, குன்றத்தூர்
பதில்: மரியாதை கலந்த அன்போடும் – பண்போடும் உரையாடிடும் நயத்தக்க நாகரிகவாதியாக நடந்து கொள்வார்!
- • •
கேள்வி: இந்தியாவின் பொருளாதார நிலை பின்தங்கிப் போகுமோ என்பது போன்று, இந்தியப் பிரதமர் எரிவாயு சிக்கனப் பயன்பாடு, வொர்க் பிரம் ஹோம், தங்கம் வாங்குதல் குறைத்தல் போன்றவற்றைச் சொல்வது நமது நாட்டின் பொருளாதாரத்தை பின்தங்கச் செய்யுமா? பொருளியல் வல்லுநரான நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்?
– ம.மகிழன், திருவெண்ணெய்நல்லூர்
பதில்: முதலில் ஒரு திருத்தம் – உங்கள் கேள்வியில். நான் ஒரு பொருளாதார மாணவன் – ‘வல்லுநர்’ அல்ல. இருட்டறையில் கருப்புப் பூனை – பார்வையற்றவர் பிடிப்பதற்குரிய தடுமாற்றம் – ஏமாற்றம் போன்ற நிலை. நோயை விட மோசமான அனுமான சிகிச்சை. முந்தைய பணமதிப்பிழப்பு அறிவிப்பு போன்றது ஆகும்.
- • •
கேள்வி: பள்ளிகளில் பாலின சமத்துவத்தை எவ்வாறு ஊக்குவிக்கலாம்?
– வா.தமிழ்அன்பன், திருநெல்வேலி
பதில்: ‘பெண்கள் அலங்கார பொம்மைகளா?’ என்று திருமணப் பேச்சு ஒன்றில் தந்தை பெரியார் இந்தப் பிரச்சினை பற்றி மிக லாவகமாகக் குறிப்பிடுவார்.
அண்ணன் தங்கை உறவுகளாக குழந்தைகள் அவர்களின் ஏழு, எட்டு வயது வரை சகஜமாக, விகற்பம் ஏதுமின்றிப் பழகுவதை, ஒரு நிகழ்வுக்குப் பிறகு, ‘நெருங்கிப் பழகாதே, தனித்திரு’ என்று தனிமைப்படுத்தி ஒருவித மனப்போக்கில் திடீரென்று செய்யப்படும் பிரிவினைதான் இதற்கு மூலகாரணம்.
இன்னும் பல! ஒரு கட்டுரையே நீளும். “இயல்பாக இருபாலரும் பழகினால் நன்று. வெறும் பாலியல் பண்டமாகப் பெண்களைப் பார்க்கும் ‘பொல்லாத – கல்லாத’ பார்வைக்கு நீர் பாய்ச்சி, உரம் போட்டு வரும் மனப் போக்கு மாறிவிடும்” என்பதே மனோதத்துவ ஆய்வு! (பாலியல் கல்வியைப் பக்குவத்துடன் இணைக்கலாம்.)
- • •
தொழில்நுட்பக் கல்வியில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க என்ன வழிகள் உள்ளன?
– வி.தேன்மொழி, மார்த்தாண்டம்
பதில்: நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அருமையான திட்டங்களே ஊக்குவிக்கும் செயலிகள் ஆகும்!
- • •
கேள்வி: பெண்கள் கல்விக்கும், சமூக பழக்க வழக்கங்களுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை எவ்வாறு சமாளிக்கலாம்?
– வி.கிரிஜா, ஜெயங்கொண்டம்
பதில்: பள்ளி, கல்லூரிகளில் தந்தை பெரியார்தம் ‘பெண்ணுரிமை’ பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவுடன் கூடிய பாடங்களைத் தக்கோர்களைக் கொண்டு (Visiting Faculty) விளக்கமாகச் சொல்லித் தரலாம். நடைமுறையே பழக்கம். வெறும் பேச்சுகள் விலக வேண்டியவை. கற்பிக்கும் முறையை ஈர்ப்புடன் செய்தால் பயன் தரும்.
- • •
கேள்வி: தமிழ்போல் ஹிந்தியும் ஒரு மொழி. மொழியறிவு பெருக்குவதில் எந்தத் தவறும் இல்லை. ஆங்கில மொழியைப் பேசுவதில் தவறில்லை என்றால், நம் இந்திய நாட்டின், தேசிய மொழியைக் கற்றுக் கொள்வதில் என்ன தவறு? இம்மொழியை (ஹிந்தி) ஏன் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் அனுமதிக்கவில்லை? ஹிந்தி தெரியாமல் நம் மாணவர்கள் ஒன்றிய அரசின் வேலைகளைத் தவறும் நிலை ஏற்படுகிறதே?
– ஏ.வளவன், சிங்கபெருமாள்கோவில்
பதில்: 1. எந்த மொழியையும் கற்பதற்கு நாம் விரோதிகள் அல்லர். திணிப்பது – கட்டாயப்படுத்துவது கூடாது என்பதே முக்கியம்.
- அதைவிட முக்கியம். அது வெறும் மொழியைக் கற்பிக்கும் முயற்சி – திட்டம் அல்ல; உள்ளே இருக்கும் ஆபத்து, வடமொழி சமஸ்கிருத ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு.
சமஸ்கிருத கலாச்சாரம் – பேதங்களைப் புகுத்தும், சமூக ஒருமைப்பாட்டுக்கு எப்போதும் எதிரானது என்பதாகும். விஷ உருண்டையில் இனிப்பு தடவுவது போன்ற ஒரு விதமே அது என்பதை உணர வேண்டும்.
- • •
கேள்வி: ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் கலைப்பணிகள் சமூக மேம்பாட்டுக்குச் செய்த ஆக்கமாகத் தாங்கள் கூறுவது என்ன?
– கு.சவுந்தரராசன், சென்னை – 39

பதில்: ஜாதி ஒழிப்பு, கிராம மக்களின் சிறப்பு, வேதங்கள் எப்படி பேதங்கள் என்ற பாடம், பெண்ணுரிமை, காதலின் பெருமை என்ற சமூக முற்போக்கு. கருத்தம்மா மூலம் சிசுக்கொலை மூடத்தனம் நிரூபணம். இப்படிப் பல திரைப்படங்கள் பாடங்களாக உள்ளன.
- • •
கேள்வி: தலைமன்னார் முதல் சென்னை வரை கடலுக்கு அடியில் தன்னார்வலர்கள் கழிவுகளை அகற்றிய தூய்மைப் பணியைப் போன்று, நிலப்பரப்பிலும் மக்கள் ஒருங்கிணைந்து தூய்மைப் பணியைச் செய்திட தாங்கள் கூறும் வழிமுறை என்ன?
– பொ.இளவரசு, சென்னை – 11
பதில்: ஒரு ஜாதித் தொழிலாகச் செய்யாது அனைத்தையும் இயந்திரங்கள் மூலம் செய்தல், தற்போதுள்ள தூய்மைப் பணித் தோழர்களுக்கு புதிய பயிற்சி கொடுத்து தூய்மை இயந்திரங்களைக் கையாளும் முறை. அனைத்து ஜாதி, மத மக்களும் தூய்மைப் பணியினைச் செய்யும் வண்ணம் செயற்கை நுண்ணறிவையும், மனித மூளை அறிவையும் இணைத்த ‘Dual intelligence’ – இரட்டை நுண்ணறிவினைக் கொண்ட ஒரு திட்டத்தை – வல்லுநர்கள், சமூகவியலாளர்களைக் கலந்து உருவாக்குதல் மூலம் செய்யலாம்!
- • •
