3 Min Read

மணிப்பூரில் கடத்தப்பட்ட   நாகா இன மக்கள் 6 பேர் கொலை

இம்பால், ஜூன் 11 மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் கடந்த மாதம் 3 கிறிஸ்தவ கோயில் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் கொடூர சம்பவத்தைத் தொடர்ந்து, குக்கி இனத்தைச் சேர்ந்த 14 பேரை ஆயுதமேந்திய குழுக்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றன. இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, காங்போக்பி மாவட்டத்தில் இருந்து 6 நாகா இன மக்கள் திடீரென காணாமல் போனார்கள்  அவர்களை ஒரு ஆயுதக் கும்பல் கடத்திச் சென்றதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதற்கிடையே, கடத்தப்பட்டிருந்த 14 குக்கி இன மக்களும் நேற்று முன்தினம் (9.6.2026) பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், லேலான் வைபே மலைப் பகுதியில் அதிர்ச்சியூட்டும் விதமாக 6 நபர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் அனைவரும் காங்போக்பி பகுதியில் இருந்து கடத்தப்பட்ட நாகா இன மக்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், கடத்தப்பட்ட 6 நாகா மக்கள் கொடூரமான முறையில் சடலங்களாக மீட்கப்பட்டிருப்பது மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பெரும் பதற்றத்தையும் அமைதியற்ற சூழலையும் உருவாக்கியுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

“21 வயதிற்குட்பட்டோருக்கு
மது விற்கக் கூடாது

தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை, ஜூன் 11 தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான மற்றும் சமூக பொறுப்புணர்வு மிக்க சூழலை உருவாக்கும் நோக்கில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் நேற்று (10.6.2026) அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள், 1981-இன் கீழ் உரிமம் பெற்ற அனைத்து எப்எல் 2 (FL 2) மற்றும் எப்எல் 3 (FL 3) வளாகங்களிலும் பின்வரும் அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கியக் கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுறுத்தல்கள்

வயது வரம்பு கட்டுப்பாடு: 21 வயதிற்கு குறைவான எந்தவொரு நபருக்கும் எக்காரணம் கொண்டும் மதுபானம் விற்கக் கூடாது. ஒருவரின் வயது குறித்து சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், அவரது அதிகாரப்பூர்வ வயதுச் சான்று ஆவணங்களை (ID Proof) கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.

உறுப்பினர் அடையாள அட்டை கட்டாயம்: எப்எல் 2 உரிமம் பெற்ற அனைத்து கிளப்புகளும் தங்களது பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை  வழங்க வேண்டும்.

விருந்தினர்களுக்கான விதிமுறை: நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டு, பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அவர்களது தகுதியுடைய விருந்தினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும்.

பார் மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது: எப்எல் 2 உரிமம் பெற்ற கிளப்புகளில், பார் செயல்பாடு என்பது அனுமதிக்கப்பட்ட பல நடவடிக்கைகளில் ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். அதை மட்டுமே முதன்மை நோக்கமாகச் செயல்படுத்தக் கூடாது.

கிளப் நிர்வாகங்கள், தங்கள் கிளப் எந்த நோக்கத்திற்காக நிறுவப்பட்டதோ, அதற்கு ஏற்ப பிற பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு மற்றும் சமூகச் செயல்பாடுகளைத் தொடர்ந்து மற்றும் பயனுள்ள முறையில் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த அரசு உத்தரவுகளை மீறி ஏதேனும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கிளப்புகள் மற்றும் வளாகங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை எச்சரித்துள்ளது.

இந்தியாவில்

அதிக மின் தேவை கொண்ட இரண்டாவது நகரம் சென்னை

சென்னை, ஜூன் 11 தமிழ்நாடு தலைநகரான சென்னையில் மின்சாரப் பயன்பாடு இதுவரை இல்லாத அளவுக்கு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

நேற்று (10.6.2026) ஒரே நாளில் சென்னையின் ஒட்டுமொத்த மின் நுகர்வு 5,008 மெகாவாட் (MW) ஆகப் பதிவாகியுள்ளது. சென்னை மின் விநியோக வரலாற்றில் 5,000 மெகாவாட் என்ற எல்லையை நுகர்வு தாண்டுவது இதுவே முதல்முறையாகும்.

தொடர்ந்து அதிகரித்து வரும் கோடை வெப்பம் மற்றும் ஏசி  உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு காரணமாக இந்த அதிரடி உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிக மின் தேவை கொண்ட நகரங்களின் கணக்கெடுப்பு பட்டியலில் நாட்டின் தலைநகரான டில்லி முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், நேற்று (10.6.2026) பதிவான இந்த இமாலய மின் நுகர்வு மூலம், டில்லிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக மின் தேவை கொண்ட இரண்டாவது பெரிய நகரமாக சென்னை மாறியுள்ளது. இந்த அதிரடி மின் நுகர்வு உயர்வை எதிர்கொள்ளும் வகையில், நகரின் மின் கட்டமைப்பு சீராகப் பராமரிக்கப்பட்டு, தடையில்லா மின்சாரம் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மின்வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *