ஆயிரமாண்டு அடிமைத் தனத்தை மாற்றிக் காட்டியது திராவிடர் கழகம் தான்!
சுயமரியாதைக்குச் சவால் வந்தால் அதையும் வென்று காட்டும் வல்லமை அதற்கு உண்டு!
ஆயிரம் பேர்கூட இல்லாத இயக்கமாம் திராவிடர் கழகம் – அக்கிரகார ‘இனமலர்’ கூறுகிறது.
பார்வை இழந்த ‘தினமலர்’ என்ற நாளேடு பார்ப்பனர்க ளின் இனமலராக, திராவிட மக்களுக்கும், சமத்துவத்திற்கும் மாநில உரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்கும் எதிராக எழுதிவரும் ‘யோக்கிய’ சிகாமணி! திராவிடர் கழகத்தைப் பற்றி அவதூறு எழுதுவதையும், அதன் தலைவரைப் பற்றி துணை ஆசிரியர்களைக் கொண்டு தனக்குத் தானே கடிதம் எழுதிக் கொள்வதையும் அன்றாடக் கடமையாகச் செய்கிறதே அந்த ஏடு, ஆயிரம் பேர் கூட இல்லாத இயக்கத்தைப் பற்றிச் சொரிந்து கொள்ளாமல் அவர்க ளின் பூணூல் அரிப்பு போவதில்லையே ஏன்?
‘ஆயிரம் பேர் கூட இல்லாத இயக்கம்’ அவாள் சொல்லும் இயக்கம் வரலாற்றை மாற்றியிருக்கிறது என்பதுதானே உண்மை!
இருட்டில் தடுமாறும் திருட்டுப் பூனை ஏட்டிற்கு, ‘ஆயிரம் பேர் கூட இல்லாத இயக்கம்’ தான் ‘உடம்பெல்லாம் மூளை’ என்ற இராஜகோபாலாச்சாரியார் கொண்டுவந்த குலக்கல்வி எதிர்த்து, அவரை பதவியை விட்டு ஓடச் செய்து, பச்சைத் தமிழர் காமராசரை முதலமைச்சராக்கியது என்ற வரலாறு தெரியாதா?
‘ஆயிரம் பேர் கூட இல்லாத இயக்கம்’தான் சூழ்ச்சி, சுயநலக் கூட்டத்தை, தமிழ்நாட்டை விட்டு, வட மாநி லங்களுக்கும், வெளிநாட்டிற்கும் ஓடச் செய்த இயக்கம் என்று தெரியாதா?
‘ஆயிரம் பேர் கூட இல்லாத இயக்கம்’தான், ‘உங்கள் குலத்தவர்’ என்று சட்டமன்றத்தில் தன்னைப் பற்றி முழங்கியவரை வைத்தே, 69 சதவிகித இட ஒதுக்கீட்டைச் சட்டமாக்கி, இந்திய அரசியலமைப்பின் 9ஆவது அட்டவணையில் பாதுகாப்புடன் வைத்து, இந்திய மாநிலங்களில் எங்கும் காணாத – காண முடியாத – சமூகநீதி அதிசயத்தைச் சாதித்துக் காட்டிய இயக்கம் என்று தெரியாதா?
இப்படி அடுக்கடுக்காக வரலாற்றுச் சாதனைகளை எடுத்துக் கூறி, பொறுப்பற்று எழுதிடும் உங்களது பேனாவின் முள் முனையை முறித்து எறிய முடியும் கருஞ்சட்டையால்!
அட அறிவுச் சூன்ய அகங்காரமே!
எண்ணிக்கையா ஓர் இயக்கத்தின் தீரத்தை, வேகத்தை, வினையாற்றும் திறனை அளவிடும் கருவி! ஒற்றைத் தீக்குச்சி தானே இருளை விரட்டுகிறது! ஒற்றைத் தீக்குச்சியைத் தானே ‘அக்கினிக் குஞ்சு’ என்று கொண்டாடியவர் உங்களவர் தானே! அதைப் பொந்துக்குள் வைத்தால் வெந்து தணியுமே காடு! பெரியார் கொளுத்தியது ஒரு தீக்குச்சியா? இன்றைக்கும் தமிழ்நாட்டில் பற்றி எரியும் சுயமரியாதைத் தீயைக் கொளுத்தி வைத்தவர் பெரியார் தானே! அதை இன்னும் லட்சோப லட்சம் உள்ளங்களில் கொளுத்திக் கொண்டிருப்பது திராவிடர் கழகம் தானே!
145 கோடி மக்கள் தொகையுள்ள இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு எத்தனை சதவிகிதம் இராணுவ வீரர்கள் இருக்கிறார்கள்?
ஊரின் மக்கள்தொகையில், காவல்துறையினர் எத்தனை சதவிகிதம்? தீயணைப்புத் துறை எத்தனை சதவிகிதம்? காவி ஏறிய மூளைகள் அறியவில்லையா?
சட்டத்தைக் கொளுத்தினால் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை என்று சொன்னபோதே பத்தாயிரம் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற வரலாறு படைத்தது திராவிடர் கழகம்! திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு, விசுவ ஹிந்து பரிஷத் வந்தபோது, உருட்டுக் கட்டைகளைக் கையில் ஏந்தி நின்ற பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டை இளை ஞர்களைக் கண்டு மகிழ்ந்தது திருச்சி! மிரண்டது ஆரியம்! இப்படி எவ்வளவோ வரலாறு உண்டு திராவி டர் கழகத்திற்கு! அளந்துகாட்டி விளக்கம் சொல்ல வேண்டியதில்லை இந்த வீணர்களுக்கு! திராவிடர் கழகம் என்பதும், பெரியார் கொள்கையாளர்கள் என்ப வர்களும் எண்ணிக்கைகளுக்குள் அடங்குபவர்கள் அல்லர்! பெரியார் சிலையில் எவனாவது கை வைத்தால், ‘மலை’க்குப் போகும் சாமிகளும் கூட வரிந்து கட்டிக் கொண்டுவந்து மல்லுக்கட்டுவார்களே! அப்போது தெரியும் திராவிடர் கழகத்தின் வலிமை!
இப்போது ‘தினமலர்’, திடீரென எதற்காக திராவிடர் கழகத்தை இப்படிக் குறிப்பிட்டு எழுதுகிறதாம்! மடாதிபதி ஒருவர் பிற மனிதர்களின் தோள்களில் ஏறி பல்லக்கில் பவனி வருகிறாராம் – பட்டினப் பிரவேசம் என்ற பெயரால்! கடந்த ஆட்சிக் காலத்தில் அதற்கு தி.மு.க.வால் தடை போடப்பட்டதாம்! அதற்குத் திராவிடர் கழகத்தைத் திருப்திப்படுத்தும் நோக்கமாம்!
பட்டினப் பிரவேசம் என்றால் மனிதர்கள் மீது தான் ஏறி வர வேண்டுமா? பட்டினப் பிரவேசம் மட்டுமா, தேசாடனம் கூட போய் வரட்டுமே! யார் தடுத்தது? ஆனால், நன்கு நடக்க முடிந்த சாமியார் ஒருவர், மற்றவர் தோளில் சுமக்க, பல்லக்கில் தான் பவனி வர வேண்டுமா? வாகன வசதிகள் இல்லையா? அறிவியல் வளர்ந்துவிட வில்லையா? எல்லா சமயங்களிலும் பல்லக்கில் தான் ஏறி பவனி வருகிறாரா? ஏரோபிளேனில் ஏறி பிரதமருக்கு செங்கோல் கொடுக்கப் போனார்களே, அதை விடுத்து இங்கிருந்து டில்லிப் பட்டினத்திற்கு பல்லக்கில் பிரவேசம் செய்திருக்க வேண்டியது தானே!
ஏன் இதற்கு முன்னால் இருந்த அதே மடத்தின் மடாதிபதி இந்தப் பட்டினப் பிரவேசத்தைக் கைவிட்டார்? ஊரெல்லாம் பல்லக்கில் பயணம் செய்துகொண்டிருந்த சந்திரசேக ரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுயமரியாதை இயக்கத்தின் வீச்சு தமிழ்நாடெங்கும் பற்றிப் படர்ந்தி ருக்கிறது என்று தெரிந்த உடனே தன் பல்லக்குப் பயணத்தை நிறுத்திக் கொண்டாரே! இதுதானே சுயமரியாதை இயக்கம் ஊட்டிய உணர்வின் தாக்கம்!
மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கை ரிக்ஷாவைத் தந்தை பெரியாரின் சீடர் கலைஞர் 50 ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஒழித்தது எந்தவொரு மனிதனின் சுயமரியாதைக்கும் இழுக்கு வரக்கூடாது என்பதற்காகத் தானே! அண்மைக் காலம் வரை இந்தி யாவின் முக்கிய நகரங்களிலேயே இருந்த இந்தக் கொடுமை இப்போது தானே கழிந்துள்ளது!
இவ்வளவு சமூகம் மாறிய பின்னும், மனிதர்களின் தோளில் ஏறித்தான் பவனிவருவேன் என்பது எத்த கைய திமிர்? அதற்குத் தூபம் போடும் ‘தினமலர்’ கூட்டத்திடம் கேட்கிறோம், அந்த சூத்திர மடாதி பதியைப் பார்ப்பனர்கள் தோளில் தூக்கிச் சுமப்பார்களா? இந்து மதத்திற்குப் பிரச்சினை தருகிறார்கள் என்று கூப்பாடு போடுகிறதே திரி நூல் இனமலர், இந்து மதத்தின் சாமியார் தானே? அவரைத் தூக்கிச் சுமக்குமா பூணூல் திருமேனிகள்? (அவர்களும் அப்படிச் செய்ய வேண்டியதில்லை என்பது தானே நமது நிலைப்பாடு!)
ஆனால், அவர்கள் வரலாற்றில், ‘கோபாவேசம் தலைக்கேறி, கையறு நிலையில் அவர்கள் பழனியில் பாடைகட்டித் தூக்கிச் சுமந்த ஒரே ஒரு சூத்திரனின் உருவம்’ திராவிடர் கழ கத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களுடைய உருவபொம்மை தானே! அதைக் கூட ‘சூத்திரன் உருவத்தைப் பார்ப்பனர்கள் தூக்கிச் சுமந்தது மகிழ்ச்சியே!’ என்று பெரியாரியப் பார்வையில் எடுத்துச் சொல்லி, அவர்களை வெட்கப்பட வைத்தது கருப்புச் சட்டை தானே!
இதில், ‘திராவிடர் கழகத்தின் பேச்சைத் தி.மு.க. கேட்டதுதான் தோல்விக்குக் காரணம்’ என்பது போல் எழுதுகிறது ‘இனமலர்’. அவர்களின் நோக்கம் இது தான்! சூத்திர மடாதிபதிக்குச் சாமரம் வீசுவதல்ல… திராவிடர் கழகத்தின் வழிகாட்டல்கள், சுயமரியாதைக் கொள்கை உணர்வுகளை விட்டுவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கொள்கையற்ற வெற்று அரசியல் கட்சியாக ஆக்கிவிடவேண்டும். அப்படியிருந்தால் பூணூல் கூட்டத்திற்குப் பிரச்சினை இல்லை. நடிகர் விவேக் சொல்வதைப்போல, அந்த ‘விக்ஸ்’ என்பதைத் தான் வளைத்து நெளித்து வெவ்வேறு வியாக்கியானங்களோடு அவர்களும் எழுதி எழுதித் தீர்ந்து போகிறார்கள்!
உணர்ந்து பாருங்கள்,
‘‘எனது போராட்டங்களுக்கு உடனே வெற்றி கிட்டாது; சற்று தாமதமானாலும் வெற்றி கிட்டுவது உறுதி’’ என்றார் தந்தை பெரியார்.
அவர் வெற்றி பெறாத போராட்டங்கள் ஒன்று உண்டா?
பரவாயில்லை, ‘சூத்திர மடாதிபதிக்கு’ வக்காலத்து வாங்கிட முன்வந்திருக்கிறது ‘தினமலர்’ – அதுவேகூட பெரியார் இயக்கத்தினால்தான்!
தனது பண்ணைப் படையை, மற்றதைத் ‘திரட்டி’ வீம்புக்கு ஏதோ வினை செய்து, வீண் பிடிவாதம் காட்டும் மட அதிபர்களை இறங்கி நடக்க வைக்கும் காலம் விரைவில் வரும்! எப்படி வரவழைப்பது என்பது கருஞ்சட்டைகளுக்கும், திராவிடத் தன்மானத்தவர்க ளுக்கும் தெரியும். அவருக்கு முன்பிருந்த மடாதிபதிக்குப் புரிந்ததுதானே இது! நாளை அவரது சுயமரியாதைக்கு இழுக்கு வந்தால், அப்போது இந்தக் கருப்புச் சட்டை தான் காத்தருள வேண்டும்! யாருக்கோ புன்னகை வர வழைப்பதற்காக அவர் தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் வேலையைச் செய்கிறார்!
இறுதிச் சிரிப்பு எவருக்கு என்பதை காலம் பாடமாக உங்களுக்குக் கற்பிக்கும்!
