3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் கூறவில்லை; மக்கள் களைத்துப் போயுள்ளார்கள்! தங்கம் தென்னரசு விளக்கம்!

சென்னை, ஜூன் 10- “தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை சுட்டிக்காட்டவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வாறு பேசினாரே தவிர, ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம் அவருக்கு இல்லை” என்று விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையின் விரிவான விவரங்கள் பின்வருமாறு:

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்து ஒரு மாதம் மட்டுமே ஆகிறது. ஆனால், இந்த ஒரு மாத காலத்தில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளைப் பார்த்தாலே கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் நடமாட்டம் போன்ற செய்திகள் தான் நிறைந்துள்ளன.

பல குற்றச் சம்பவங்களில் தவெக நிர்வாகிகளே சம்பந்தப்பட்டுள்ளனர். ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவரே, அவரது சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணையே கட்சியை விட்டு நீக்கி, ‘தூய சக்தி’ என்று இந்த அரசு கபட வேடம் போடுகிறது.

“புதிய ஆட்சியை ஆறு மாதம் வரை விமர்சிக்க மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சொல்லியிருந்தார். ஆனால், தற்போதைய நிலைமை மிக மோசமாகச் சென்று கொண்டிருப்பதால் அவர் விமர்சிக்க நேர்ந்தது.”

“ஆறு மாதம் அல்ல, மூன்று மாதம் கூட தாங்காது என்ற நிலைமையில் தான் ஆட்சி போய்க்கொண்டு இருக்கிறது” என்றுதான் தலைவர் பேசினார். ஆனால், 3 மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அவர் கூறியதாக செய்திகள் தவறாகத் திரிக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. இதைப் பற்றி பிற அரசியல் கட்சித் தலைவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர்களும் திமுக தலைவர் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

தங்கம் தென்னரசுவின் விளக்கம்

ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பது திமுக தலைவரின் நிலைப்பாடும் அல்ல, அவர் அப்படிப் பேசவும் இல்லை. நாள்தோறும் நடக்கும் கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டுகள், போதைப்பொருள் நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சுகள், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், பாலியல் வன்கொடுமைகள் போன்றவற்றை அன்றாடம் பார்க்கும்போது, அதை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும்?

“மூன்று மாதமாவது இந்த ஆட்சி தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் நகர்கிறது” என்ற பொருளில்தான் அவர் பேசினார்.

‘ஆசை அறுபது நாள்’ என்பார்கள். ஆனால், இன்றைய ஆளும்கட்சிக்கு வாக்களித்த மக்கள் ஒரே வாரத்தில்தான் அமைதியாக இருந்தார்கள். தற்போது சமூக வலைதளங்கள் முழுக்க ஆளும்கட்சிக்கு எதிரான ஆவேசமான கருத்துகளைத்தான் மக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

இதைத்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் சுட்டிக்காட்டினார். ஆட்சியை கலைக்கும் அல்லது கவிழ்க்கும் எண்ணத்தோடு அவர் பேசவில்லை, மாறாக இந்த ஆட்சியைப் பார்த்து மக்களே களைத்துப் போய்விட்டார்கள் என்று தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *